முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசை கண்டித்து இந்தியா முழுவதும் இன்று வங்கிகள் வேலைநிறுத்தம்

செவ்வாய்க்கிழமை, 28 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப். - 28 - மத்திய அரசின் பொருளாதார கொள்கை மற்றும் தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்து இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்ய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலை நிறுத்தத்தில் அரசுத் துறை பணியாளர் சங்கம் மற்றும் தனியார் துறை ஊழியர்கள் சங்கம் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் ஈடுபடும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக் கூடும். வங்கி பணியாளர்கள் இணைவதால் வங்கி பணிகளும் பாதிக்கப்படும். தமிழகத்தில் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஆட்டோக்கள் ஓடாது என எதிர்பார்க்கப்படுகிறது.  அரசு போக்குவரத்து ஊழியர் தொழிற்சங்கங்களும் கலந்து கொள்வதால் பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் தொலை தொடர்பு, இன்சூரன்ஸ், வங்கி பணிகள் உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் இதனால் பாதிப்படையும். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்புடைய ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்கங்களும் கலந்து கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மேலும் இந்த வேலை நிறுத்தத்தில் சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி, தொ.மு.ச. பேரவை, பி.எம்.எஸ். உள்ளிட்ட 17 தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.  வங்கி துறையை சேர்ந்த 7 தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் சுமார் 8 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக வங்கி ஊழியர் தொழிற்சங்க பொதுச் செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். இதனால் நாடு முழுவதும் வங்கி பணிகள் பாதிக்கப்படும் என்று மேலும் அவர் தெரிவித்தார்.  இந்த போராட்டத்தில் வெளிப்பணி ஒப்படைப்பு, கண்டெய்ல்வால் குழுவின் பரிந்துரைகளை ஏற்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். உலக வியாபார போட்டியில் வெற்றி பெற வேண்டுமென கருதி பொருட்களை குறைந்த அடக்க விலையில் உற்பத்தி செய்து விற்க வேண்டும் என்பதற்காக தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. உலகமயமாதல் மூலமாக பல்வேறு நிறுவனங்களின் நிரந்தர ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டனர். அவர்கள் ஒப்பந்த ஊழியர்களாக மாற்றப்பட்டு வருகின்றனர். தற்போது நாடு முழுவதும் 5 கோடி ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கையால் பாதிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்கள் அதனை கண்டித்து கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது. மேலும் இந்த வேலைநிறுத்தத்தில் அ.தி.மு.க தொழிற்சங்கத்தை தவிர அனைத்து தொழிற்சங்கங்களும் பங்கேற்பதால் மாநிலத்தின் அன்றாட பணிகள் பாதிக்கப்படும். மேலும் பெரும்பாலான நகரங்களில் ஆட்டோ, பஸ்கள் ஓடாது என்று ஏ.ஐ.டி.யூ.சி தலைவர் கோபு தெரிவித்தார். நாடு முழுதும் இன்று அறிவிக்கப்பட்டுள்ள பொது வேலை நிறுத்தம் காரணமாக வங்கி பணிகள் உள்ளிட்ட மத்திய அரசின் நிறுவனங்களின் பணிகள் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து பண்ருட்டி, விருத்தாசலம், பென்னாடம், சிதம்பரம் ஆகிய ஊர்களில் விவசாய தொழிற்சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தவிருப்பதாக அச்சங்கங்கள் அறிவித்துள்ளன. 

இந்த நிலையில் அகில இந்திய வங்கி பணியாளர் சங்கத்தின் பொது செயலாளரும், ஒருங்கிணைப்பாளருமான வெங்கடாசலம் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

நாளை(இன்று) இந்தியா முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. இதில் 10 கோடி பணியாளர்கள் பங்கேற்கின்றனர். மத்திய அரசின் புதிய சீர்திருத்த கொள்கையால் விலைவாசி விஷம் போல் ஏறுகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு எந்த முயற்சியும் இல்லை. இதனால் தொழில்துறை மற்றும் தொழிலாளர்களின் நிலை மிக பெரிய ஆபத்தில் உள்ளது. மத்திய அரசின் இந்த தவறான போக்கினால் 45 லட்சம் பணியாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே, மாபெரும் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதில் 7 வங்கி சங்கங்களும், 5 காப்பீட்டு சங்கங்களும் கலந்து கொள்கின்றன. ரிசர்வ் வங்கி, பெடரல் வங்கி, ஐ.டி.பி.ஐ. வங்கி, சிட்டி வங்கி உள்ளிட்ட தனியார் வங்கிகளும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கின்றன. தமிழகம் முழுவதும் வங்கி மற்றும் காப்பீட்டு பணியாளர்கள் 9 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர். நாளை(இன்று) காலை 10 மணிக்கு சென்னை மெமோரியல் அரங்கம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

பேட்டியின் போது வங்கிகள் மற்றும் காப்பீடு சங்கங்களின் பிரதிநிதிகள் அருணாசலம், பாஸ்கரன், உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர். அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினரும் கலந்து கொள்வார்கள் என்று சென்னையில் நடந்த நிருபர்கள் கூட்டத்தில் சங்க பொருளாளர் பால்பாண்டியன் தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago