முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளமீன்பிடி படகுடன் சரக்கு கப்பல் மோதியதில் 2 மீனவர்கள்பலி

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

கொச்சி, மார்ச் - 2 - கேரள மாநிலத்தில் சேர்த்தலா கடற்கரை பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுடன் சரக்கு கப்பல் ஒன்று மோதியதில் இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டார்கள். பலர் காயம் அடைந்தனர். 3 மீனவர்களை காணவில்லை. கேரள மாநில மீனவர்களுக்கு இது போதாத காலம் போலும். சில வாரங்களுக்கு முன் கேரள கடல்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 2 மீனவர்களை இத்தாலிய கப்பலைச் சேர்ந்த பாதுகாவலர்கள் சுட்டுக்கொன்றனர். கடல் கொள்ளையர்கள் என்று நினைத்து மீனவர்களை தாங்கள் சுட்டதாக அவர்கள் தெரிவித்தபோதிலும், சில தினங்களுக்கு பிறகு இரண்டு பாதுகாவலர்களும் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த சம்பவம் பற்றி பரபரப்பு அடங்குவதற்குள் கேரளாவில் மற்றொரு சம்பவம் தற்போது நடந்துள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் மனக்கோடம் லைட் ஹவுஸ் பகுதியில் அதாவது சேர்த்தலா கடற்கரை பகுதியில் இருந்து 24 கடல்மைல் தொலைவில் ஒரு சம்பவம் நேற்று அதிகாலை நடந்தது. இப்பகுதியில் நங்கூரம் போட்டு நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடி படகுடன் சரக்கு கப்பல் ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் 2 மீனவர்கள் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். 3 மீனவர்களை காணவில்லையாம். இந்த படகின் உரிமையாளர் தந்த தகவலின்படி பலியானவர்கள் யார் யார் என்பது தெரியவந்துள்ளது. ஒருவர் சேவியர் (42) மற்றொருவர் ஜஸ்டின்(40) இருவருமே கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர்கள். காயம் அடைந்த 2 மீனவர்கள் ஆலப்புழை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டனர். காணாமல் போன மீனவர்களை தேடும் பணி நடந்துவருகிறது. நேற்று அதிகாலை 1.30 மணி முதல் 3 மணிக்குள் இந்த சம்பவம் நடந்திருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையைச் சேர்ந்த 4 கப்பல்கள் அங்கு விரைந்து வந்து மீட்புப்பணி மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டன. சில கப்பல்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் முதல்வர் உம்மன் சாண்டி அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவத்தில் பலியான மீனவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் உம்மன்சாண்டி தெரிவித்துக்கொண்டார். இச்சம்வம் குறித்து கூறிய மாநில மீன்வளத்துறை அமைச்சர் கே.பாபு கூறுகையில், மீன்பிடி படகுடன் மோதிய அந்த மர்ம கப்பலை கண்டுபிடிக்க தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என்று நம்பிக்கையோடு தெரிவித்தார். இந்த மீன்பிடி படகில் மொத்தம் 7 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது ஆலப்புழைக்கு 70 கி.மீ. தொலைவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கிளீட்டஸ், சந்தோஷ், பேபிஜான் ஆகிய மீனவர்களை காணவில்லை. இச்சம்பவம் குறித்து படகின் உரிமையாளர் கூறுகையில், என்னுடைய படகு ஆழ்கடிலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் அந்த கப்பல் என் படகுமீது மோதியது. இதை மீட்கப்பட்ட மீனவர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். எனக்கு அவ்வளவுதான் தெரியும் என்று கூறி, ரத்தினச்சுருக்கமாக முடித்துக்கொண்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்