முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. ஊழலில் காணாமல் போன வெள்ளூத்துமலை

புதன்கிழமை, 23 மார்ச் 2011      ஊழல்
Image Unavailable

 

மதுரை, மார்ச். 23 - கீழவளவு கீழையூர் பகுதியில் அமைந்துள்ளது வெள்ளூத்துமலை ஆகும். இந்த பகுதியில் டாமின் நிறுவனத்திற்கு கிரானைட் சுரங்கம் தோண்ட உரிமை வழங்கப்பட்டுள்ளது. 1.4.2010 முதல் 9.3.2011 முடிய உள்ள சுமார் 1 வருட காலத்திற்கு 191 கியூபிக் மீட்டர் கற்களுக்கு மட்டும்தான் டாமின் பெர்மிட் வாங்கி உள்ளது. ஆனால் டாமின் சுரங்கத்தில் இருந்து பெர்மிட் இல்லாமல் பல ஆயிரம் கியூபிக் மீட்டர் கற்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. இந்த பகிரங்க கொள்ளையை தி.மு.க. துணையுடன் பி.ஆர்.பி. நிறுவனம் செய்து வருகிறது. பி.ஆர்.பி. நிறுவனம் டாமின் சுரங்கத்தில் எப்படி கொள்ளை அடித்து வருகிறது என்பது சம்பந்தமாக வீடியோ ஆதாரங்களுடன் தினபூமி நாளிதழ் அம்பலப்படுத்தியது.

டாமின் கிரானைட் சுரங்க ஊழலை கண்டு பிடிக்க மிக பெரிய அளவில் ஒரு புலனாய்வு வேட்டையை தினபூமி நாளிதழ் நடத்தியது. இந்த வேட்டையில் வெள்ளூத்துமலை டாமின் சுரங்கம் இருக்கும் பகுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்த வேட்டையில் இந்தியாவிலேயே யாரும் பயன்படுத்தாத புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் வெள்ளுத்துமலை டாமின் சுரங்கத்தில் தி.மு.க. துணையுடன் பி.ஆர்.பி. நிறுவனம் நடத்திய ரூ.4000 கோடி ஊழல் அம்பலத்திற்கு வந்தது.

வெள்ளூத்துமலை டாமின் சுரங்கத்திற்கு 1.4.2010 முதல் 9.3.2011 முடிய 191 கியூபிக் மீட்டர் கற்களுக்கு மட்டும் அரசிடம் டாமின் நிறுவனம் பெர்மிட் பெற்றுள்ளது. ஆனால் டாமின் சுரங்கத்தில் இருந்து தினமும் அதிகபட்சமாக 765 கியூபிக் மீட்டர் கிரானைட் கற்களும், சராசரியாக 551 கியூபிக் மீட்டர் கற்களும் டாமின் முத்திரை இல்லாமல் பி.ஆர்.பி. நிறுவனம் பி.ஆர்.பி. நிறுவன லாரிகளில் பி.ஆர்.பி. நிறுவன இடத்திற்கு கடத்தப்பட்டது வீடியோ காட்சிகள் மூலம் அம்பலம் ஆகி உள்ளது. மாதம் ஒரு கல்லுக்கு பணம் செலுத்திவிட்டு சுமார் 1000 கற்களுக்கு மேல் கொள்ளை அடிக்கும் அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது. இந்த ஒரு டாமின் சுரங்கத்தில் இருந்து மட்டும் 5 ஆண்டுகளில் தி.மு.க. துணையுடன் பி.ஆர்.பி. நிறுவனம் சுமார் ரூ.4000 கோடி மதிப்புள்ள கற்களை கடத்தியதாக கூறப்படுகிறது.

 

மலையை காணவில்லை

 

கடந்த 3 மாதங்களில் வெள்ளூத்துமலை எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது என்பதை  விளக்கும் 2 புகைப்படங்கள் இத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 30 மற்றும் மார்ச் 22 ஆகிய தேதிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இருந்து வெள்ளூத்துமலை எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். தி.மு.க. இந்த ராட்சத கொள்ளையை அரங்கேற்றி உள்ளது. இந்த 3 மாத காலங்களில் அரசிடம் சுமார் 19 கியூபிக் மீட்டருக்கு மட்டுமே டாமின் நிறுவனம் பெர்மிட் பெற்றுள்ளது. ஆனால் தினமும் சுமார் 551 கியூபிக் மீட்டர் கற்கள் வெள்ளூத்துமலை டாமின் சுரங்கத்தில் இருந்து பி.ஆர்.பி. நிறுவனம் கடத்துவதை தினபூமி நாளிதழ் வீடியோ ஆதாரங்களுடன் கண்டுபிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் டாமின் சுரங்கங்களில் சுமார் 3 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் நடந்து இருக்கலாம். டாமின் சுரங்கங்களில் அளவு எடுத்தால் இந்த ஊழல் அம்பலமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony