முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராசாவுக்கு ரூ.7 ஆயிரம் கோடி - சாதிக்பாட்ஷாவுக்கு ரூ.1000 கோடி

புதன்கிழமை, 23 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, மார்ச் 23 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடாக ஏலம் விடப்பட்டதில் ஆ.ராசாவுக்கு ரூ. 7 ஆயிரம் கோடியும் அவரது கூட்டாளி சாதிக்பாட்ஷாவுக்கு ரூ. ஆயிரம் கோடியும் கிடைத்தது என்ற முக்கிய நபரும் சாதிக்பாட்ஷாவுக்கு மிகவும் வேண்டிய நண்பருமான ஒருவர் தெரிவித்தார். மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக தி.மு.க.வை சேர்ந்த தயாநிதி மாறன் இருந்தபோது சில விதிமுறைகளை மாற்றி அமைத்ததாக கூறப்படுகிறது. தயாநிதி மாறனுக்கு அடுத்து மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் பதவியை ஏற்ற ஆ.ராசா, இந்த புதிய விதிமுறைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை முறையாக ஏலம் விடாமல் முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை என்று ஒதுக்கீடு செய்தார். இதனால் மத்திய அரசுக்கு ரூ. ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பல்வேறு முக்கிய நபர்களுக்கு கமிஷன் போய் சேர்ந்துள்ளது. பிரபல அரசியல் பெண் தரகர் நீரா ராடியா, மத்திய தொலைதொடர்புத்துறை முன்னாள் செயலாளர் உள்பட பல முக்கிய பிரமுகர்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு கமிஷன் போய் சேர்ந்திருக்கிறது. தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆ.ராசாவுக்கு 7 ஆயிரம் கோடியும் அவரது கூட்டாளியும் கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த சாதிக்பாட்ஷாவுக்கு ரூ. ஆயிரம் கோடியும் இந்த ஊழலில் கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது. ராசாவுக்கு கிடைத்த தொகையை துபாய் உள்பட அரபு நாடுகள் மற்றும் லண்டனில் உள்ள தனது மனைவி பரமேஸ்வரி வங்கிக்கணக்குகளில் டெபாசிட் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.  ராசாவின் சொந்த ஊரான பெரம்பலூரைச் சேர்ந்த சாதிக்பாட்ஷாவுக்கு ரூ. ஆயிரம் கோடி கிடைத்தது என்று அவரது நண்பரும் முக்கிய பிரமுகருமான ஒருவர் தெரிவித்துள்ளார். சாதிக்பாட்ஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் 10 நாட்களுக்கு முன்பு அவர் தன்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும்,  அப்போது ஸ்பெக்ட்ரம் ஊழலில் தனக்கு ரூ.ஆயிரம் கோடி கிடைத்தது என்றும் ராசாவுக்கு ரூ.7 ஆயிரம் கோடி கிடைத்தது என்றும் சாதிக்பாட்ஷா கூறியதாக  அந்த முக்கிய பிரமுகர் கூறினார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஹவாலா ஊழலில் கிடைத்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தை ஆ.ராசா மூடி மறைக்க சாதிக்பாட்ஷா மிகவும் உதவினார் என்று டெக்கான் குரோனிக்கலுக்கு அளித்த பேட்டியிலும் அந்த முக்கிய பிரமுகர் கூறியுள்ளார். இந்த முக்கிய பிரமுகரும் பெரம்பலூரைச் சேர்ந்தவர். மேலும் இவர் இடதுகம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பிரமுகர் என்றும் கூறப்படுகிறது. சாதிக்பாட்ஷா என்னுடன் தொலைபேசியில் பேசும்போது, சி.பி.ஐ. விசாரணையில் அப்ரூவராக மாறும்படி தனது மனைவி வற்புறுத்துவதாகவும் அப்படி அப்ரூவராக மாறாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டுவதாகவும் சாதிக்பாட்ஷா தன்னிடம் தொலைபேசியில் கூறியதாகவும் தெரிவித்தார். அதேசமயத்தில் அப்ரூவராக மாறக்கூடாது என்று ராசாவுக்கு வேண்டியவர்கள் தொடர்ந்து வற்புறுத்துவதாகவும் சாதிக்பாட்ஷா தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ரம்ஜான் பண்டிகையை சாதிக்பாட்ஷா மிகவும் விமர்சையாக கொண்டாடியதாகவும் ஒரு மிகப்பெரிய விருந்து வைத்ததாகவும் பெரம்பலூர் மக்கள் கூறுகிறார்கள். அந்த விருந்திற்கு அனைத்து தரப்பு மக்கள் மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்களையும் சாதிக்பாட்ஷா அழைத்ததாக சாதிக்பாட்ஷாவின் நண்பர்களில் ஒருவர் கூறினார். பெரம்பலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. புவனேஸ்வரி தேவராஜனுக்கு சாதிக்பாட்ஷாவை நன்றாக தெரியும். சாதிக்பாட்ஷா மிகவும் தாராள மனப்பான்மையுடன் நடந்துகொள்வார் என்றும் முகேஷ் அம்பானி மாதிரி ஒரு பெரும் தொழிலதிபராக வர வேண்டும் என்றும் அதேசமயத்தில் மக்களுக்கு தொண்டு புரிய வேண்டும் என்றும் சாதிக்பாட்ஷா விரும்பியதாக புவனேஸ்வரி தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் சாதிக்பாட்ஷாவிடம் குறைந்தது 100 குடும்பத்தினர் பணிபுரிந்தனர் என்பது சாதிக்பாட்ஷாவுக்கு நெருக்கமானவர்களுக்கு தெரியும் என்றும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony