முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானதாக அமைக்கப்பட்டுள்ளது

ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம், மார்ச். - 4 - கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானதாக அமைக்கப்பட்டுள்ளது என்று அதன் பாதுகாப்பு பொறியாளர் பானர்ஜி தெரிவித்துள்ளார்.  மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல், இன்ஸ்டியூட் ஆப் இன்ஜீனியர்ஸ் இந்தியா, மதுரை கிளை சார்பில் மின் தட்டுப்பாடு மற்றும் மரபு சாரா எரிசக்தி ஆற்றல் குறித்த கருத்தரங்கம் நேற்று நடந்தது. கல்லூரி தாளாளர் கருமுத்து கண்ணன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். முதல்வர் அபயகுமார், இன்ஸ்டியூட் ஆப் இன்ஜீனியர்ஸ் மதுரை கிளை தலைவர் தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துறை தலைவர் காமராஜ் வரவேற்றார். கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு பொறியாளர் பானர்ஜி பேசியதாவது, கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையம் 3 ம் தலைமுறை அணுஉலையை உள்ளடக்கி உள்ளது. இந்த 3 ம் தலைமுறை அணுஉலை என்பது உலகின் மிக உயர்ந்த தரம் வாய்ந்த அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஒருங்கே அமைந்தது என்பதுதான். இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால் அணு உலை தானாகவே தனது பணியை நிறுத்திக் கொள்ளும் தன்மையுடையதாக அமைக்கப்பட்டுள்ளது. அணு கதிர்வீச்சை உள்வாங்கும் தன்மை கொண்ட கருவிகளும் உள்ளே பொருத்தப்பட்டுள்ளன. 2, 3 ம் கட்ட பாதுகாப்பும் உள்ளது. அணு பிளவினால் ஏற்படும் வெப்பத்தை கட்டுப்படுத்தும் கருவிகளும் இந்த உலைக்குள் பொருத்தப்பட்டுள்ளது. அணு உலையினுள் வேலை செய்பவர்களுக்கும் வெளியில் உள்ள மனித உயிர்கள், கடல்வாழ் உயிரினங்கள், பறவைகள், விலங்குகள், தாவரங்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க அனைத்து நவீன பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அணு கதிர் கழிவுகள், உலையில் இருந்து வெளியேறும் கழிவுகளை மிக நேர்த்தியாக எவ்வித பாதிப்புமின்றி மறு சுழற்சி செய்யும் முறைகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலையின் முதன்மையான நோக்கம் என்னவென்றால் மனிதனால் ஏற்படுத்தப்படும் அணு பிளவை மனிதனின் முழு கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பதே இதனுடைய முக்கிய நோக்கமாகும். இதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் இயற்கை சீற்றங்களை முன்னிறுத்தி அணு உலையின் வெப்ப கட்டுப்பாடு மிகவும் சிரத்தையுடன் செய்யப்பட்டுள்ளது. இதிலும் அணு உலை சுயமாக வெப்ப கட்டுப்பாடு செய்யும் வசதிகள் பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு வளையங்களின் உச்சமாக தன் பாதையில் இருந்து வேறுபடும் அணு கதிர்வீச்சை உள்வாங்கும் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளின் மூலம் மனிதனுக்கும், கடல்வாழ் உயிரினங்கள், பறவைகள், இயற்கை கட்டமைப்புகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அந்தளவிற்கு கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பான நவீன கருவிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்