முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட்:முதல் பைனலில் ஆஸி. வெற்றி

திங்கட்கிழமை, 5 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

பிரிஸ்பேன், மார்ச் - 5 - ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒரு நாள் போட்டியின் முதல் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான காமன்வெல்த் பேங்க் சீரிஸ் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் புள்ளிகளின் அடிப்படையில் இந்திய அணி கடைசி இடம் பிடித்ததால் போட்டியில் தோற்று வெளியேறியது. இதையடுத்து இந்த தொடரில் இலங்கை ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 3 போட்டிகளைக் கொண்ட பைனல் நடைபெறுகிறது. இதில் முதலாவது பைனல் நேற்று பிரிஸ்பேனில் நடைபெற்றது. இரு அணிகளும் சம பலத்துடன் இருந்ததால் போட்டி ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. பிரிஸ்பேனில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரர்கள் வார்னர் மற்றும் விக்கெட் கீப்பர் வாடே ஆகியோர் களமிறங்கினர். துவக்கத்தில் இருந்தே அதிரடியாக இந்த ஜோடி விளையாடி ரன் எண்ணிக்கையை உயர்த்தியது. இந்த ஜோடி முதல் 50 ரன்களை 40 பந்துகளில் எடுத்தது. அடுத்து 100 ரன்களை 106 பந்துகளில் எடுத்தது. 24 ஓவர்களில் ஆஸி. அணி 136 ரன்களை எடுத்திருந்தபோது 64 ரன்களை எடுத்திருந்த வாடே, குலசேகராவின் பந்தில் ஹெராத்தால் அற்புதமாக கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார். இவரை அடுத்து ஆல்ரவுண்டர் வாட்சன் களமிறங்கினார். துவக்கத்தில் சற்று நிதானமான ஆட்டத்தை மேற்கொண்ட வார்னர், இதன் பிறகு அதிரடியை காட்ட ஆரம்பித்தார். வாட்சன் அதிரடியாக 25 பந்துகளில் 21 ரன்களை எடுத்து மகரூப்பின் பந்தில் திரிமன்னேவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து களமிறங்கிய கிறிஸ்டியன் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. 10 ரன்கள் எடுத்திருந்த கிறிஸ்டியன், பிரசாந்த்தின் பந்தில் சங்ககாராவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து களமிறங்கிய டேவிட் ஹஸ்ஸியும் 1 ரன்களை மட்டும் எடுத்து ஹெராத்தின் பந்தில் அவரிடமே பிடிகொடுத்து அவுட்டானார். ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் வார்னர் அதிரடியாக சதமடித்தார். இவர் 111 ரன்களில் 100 ரன்களை எடுத்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் மைக்கேல் கிளார்க்கும் வார்னருடன் சேர்ந்து அதிரடி காட்ட ஆஸியின் ரன் எண்ணிக்கை மளமளவென கூடியது. 25 பந்துகளில் 37 ரன்களை எடுத்த கிளார்க், மலிங்காவின் பந்தில் ஜெயவர்த்தனேவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது ஆஸி. அணி 46.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய மைக்கேல் ஹஸ்ஸி வார்னருடன் ஜோடி சேர்ந்து அதிரடி காட்ட ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்களை எடுத்தது. ஆட்டத்தின் கடைசி பந்தில் விக்கெட்டை பறிகொடுத்த வார்னர் 163 ரன்களை எடுத்தார். ஒரு நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்களில் இவரது 163 ரன் 3 இடத்தை பெற்றது.  ஹஸ்ஸி ஆட்டமிழக்காமல் 10 பந்துகளில் 19 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை தரப்பில் பிரசாத் 2 விக்கெட்டுகளையும், ஹெராத், குலசேகரா, மலிங்கா, மகரூப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கு இலங்கை அணிக்கை நிர்ணயிக்கப்பட்டது. இலங்கை துவக்க வீரர்கள் தில்ஷன் மற்றும் ஜெயவர்த்தனா ஆகியோர்  களமிறங்கினர். 4.4 ஓவர்களில் 39 ரன்கள் எடுத்திருந்தபோது 14 ரன்களை எடுத்திருந்த ஜெயவர்த்தனா பிரட்லீயின் பந்தில் வாடேயால் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார். அடுத்து சங்ககாரா களமிறங்கினார். 7வது ஓவரில் தில்ஷனும் 27 ரன்கள் எடுத்த நிலையில் பிரட்லீயால் போல்டு செய்யப்பட்டார். அடுத்து வந்த சண்டிமால் 14 ரன்கள் எடுத்த நிலையில் டேவிட் ஹஸ்ஸியின் பந்தில் பட்டின்சனால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது இலங்கை அணி 16.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்களை எடுத்திருந்தது. அடுத்து வந்த திரிமன்னேவும் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஹஸ்ஸியின் பந்தில் வாடேயால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து தரங்கா, சங்ககாராவுடன் ஜோடி சேர்ந்தார். நல்ல முறையில் ஆடிக்கொண்டிருந்த சங்ககாரா 42 ரன்கள் எடுத்த நிலையில்  பிரட்லீ பந்தில் வாட்சனால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து களமிறங்கிய மகரூப்பும் 8 ரன்களே எடுத்து அவுட்டானார். அப்போது இலங்கை அணி 30.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில் தரங்காவுடன் ஜோடி சேர்ந்த குலசேகரா அதிரடி காட்டினார். இதனால் இலங்கை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 43 பந்துகளில் 73 ரன்களை அடித்த குலசேகரா, டேவிட் ஹஸ்ஸியின் பந்தில் தோஹர்த்தியால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது இலங்கை அணி 41.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்களை எடுத்திருந்தது. அடுத்து நம்பிக்கையுடன் விளையாடி வந்த தரங்காவும் 60 ரன்களை எடுத்திருந்தபோது வாட்சன் பந்தில் ஹஸ்ஸியால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இதையடுத்து பிரசாத் அதிரடியாக சில ஷாட்டுகளை விளையாடி இலங்கை அணி 300 ரன்களை கடக்க உதவினார். ஆனால் கடைசி கட்டத்தில் ஆஸி. வீரர்களின் பந்துவீச்சு நல்ல முறையில் இருந்ததால் டெயில் எண்டர்களால் எட்டக்கூடிய இலக்கையும் எட்ட முடியவில்லை. இறுதியில் இலங்கை அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 306 ரன்களை எடுத்தது. பிரசாத் 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸி. தரப்பில் ஹஸ்ஸி 4 விக்கெட்டுகளையும், வாட்சன், பிரட்லி தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 163 ரன்களை குவித்த வார்னர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் ஆஸி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகளை கொண்ட இறுதிப் போட்டியில் 1 - 0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது இறுதி போட்டி நாளை (6.3.2012 )நடைபெறுகிறது.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்