முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் தோல்வி: முஸ்லீம்கள் மீது மாயாவதி பாய்ச்சல்

வியாழக்கிழமை, 8 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, மார்ச்.8 - உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் தமது கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு முஸ்லீம்களை குற்றம் சாட்டியிருக்கிறார் உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதி. மேலும் காங்கிரசும், பா.ஜ.க.வும் வகுப்புவாத அரசியல் நடத்தி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி தோல்வியடைந்தது. இதையடுத்து தனது முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார் மாயாவதி. ராஜினாமா கடிதத்தை மாநில கவர்னர் ஜோஷியிடம் அவர் ஒப்படைத்தார். பிறகு லக்னோவில் மாயாவதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர், தமது கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு முஸ்லீம்களை குற்றம் சாட்டினார்.

சிறுபான்மையினத்தவரை சமாஜ்வாடி கட்சி தன்பக்கம் ஈர்த்து விட்டதாகவும் குற்றம் சாட்டிய அவர், வகுப்புவாத அரசியல் நடத்தி விட்டதாக காங்கிரசையும், பா.ஜ.க.வையும் சாடினார். பத்திரிகையாளர்களையும் மாயாவதி விட்டு வைக்கவில்லை. சமாஜ்வாடியின் வளர்ச்சிக்கு அவர்களும் காரணம் என்று ஒரு போடுபோட்டார். இப்படி ஒரு தீர்ப்பளித்ததற்காக மாநில மக்கள் கஷ்டப்படப் போகிறார்கள் என்றும் மாயாவதி உ.பி. மக்களுக்கு சாபம் விடுத்தார். 

இனிமேல் எல்லாம் தலைகீழாக மாறப்போகிறது. சட்டம், ஒழுங்கு கெடப் போகிறது என்றும் கூறிய அவர், 70 சதவீத முஸ்லீம் ஓட்டுக்கள் சமாஜ்வாடி கட்சிக்கே சாதகமாக போய் விட்டது என்றும் தெரிவித்தார். மேலும் பிராமிண்கள், தாகூர்கள், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரது ஆதரவும் அவர்களுக்கு கிடைத்து விட்டது. அதனால்தான் ஆட்சியை பிடித்திருக்கிறார்கள் என்று கூறி தனது தோல்விக்கு சப்பைக்கட்டு கட்டினார் மாயாவதி. மற்றபடி ஊழல் இந்த தேர்தலில் பேசப்படவில்லை. மற்ற பிரச்சினைகளும் பெரிய பங்காற்றவில்லை என்றும் மாயாவதி கூறிக் கொண்டார். தனது தவறான ஆட்சிதான் தோல்விக்கு காரணம் என்று கூறப்படுவதையும் ஏற்க மறுத்தார் மாயாவதி. 

இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான சமாஜ்வாடி கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் ஹோலி பண்டிகைக்கு பிறகே கூடும் என்று தெரிகிறது. வரும் 9 ம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதன் பிறகே சமாஜ்வாடி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூட்டப்படும் என்று தெரிகிறது. அனேகமாக 9 ம் தேதி மாலையில் கூடினாலும் ஆச்சரியமில்லை. நேற்று ஒரு சில எம்.எல்.ஏக்களே லக்னோ வந்து சேர்ந்தார்கள். பெரும்பாலான சமாஜ்வாடி எம்.எல்.ஏக்கள் வரவில்லை. அவர்கள் வந்த பிறகே எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூடி புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்