முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களுக்கு 33 சதவீத மசோதா நிறைவேற்றப்படும்

வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

சென்னை, மார்ச்.9 - வரும் கூட்டத்தொடரில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் பேசினார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் சர்வதேச மகளிர் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், தமிழ்நாடு காங்கிரஸ் அகில இந்திய பொறுப்பாளர் சாகர்ராய்க்ரா முன்னிலை வகித்தனர்.விழாவில் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் பேசியதாவது: சத்தியமூர்த்தி பவனில் இவ்வளவு பெரிய பெண்கள் கூட்டம் கூடி இருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு பெண்களால் வலிமை ஏற்பட்டிருக்கிறது என்று காங்கிரஸ் பொறுப்பாளர் மேலிடத்துக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் காங்கிரஸ் நிர்வாகிகளை நியமிக்கும் போது அவர்களுக்கு 50 சதவீத இடம் ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும்போது பெண்கள் உரிமை, மேம்பாடு ஆகியவற்றை பற்றி பேசுவேன். வருடத்துக்கு ஒருநாள் மட்டும் மகளிர் தினமாக இருக்கக்கூடாது.

365 நாளும் மகளிர் தினமாகத்தான் இருக்க வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது. மகளிர் தினத்தையொட்டி பியூட்டி பார்லர், நட்சத்திர ஓட்டல்களில் மட்டும் பெண்களுக்கு 50 சதவீத சலுகை என்று இருக்கக் கூடாது. பெண்கள் கல்வி, பொருளாதாரம், அரசியல், சமுதாயம் அனைத்திலும் சமம் என்ற நிலை இருக்க வேண்டும். நேற்று முன்தினம் 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாயின. இதில் 6.1 கோடி பெண்கள் வாக்களித்திருக்கிறார்கள். 690 சட்டமன்ற தொகுதிகளுக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் இதில் 55 பேர்தான் பெண்கள். அரசியலிலும் சட்டசபையிலும் பெண்களின் எண் ணிக்கை அதிகமாக வேண் டும். பெண்கள் அனைத்து துறையிலும் சம உரிமை பெற்று விட்டதாக கூறு கிறார்கள். பஞ்சாப், உத்தர காண்ட் மாநிலங்களில் 75 சதவீதம் பேர் படித்தவர்கள். அங்கும் பெண் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைவு. கோவாவில் ஒரு பெண் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. மணிப்ரில் 3 பெண்கள் தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

இன்றைய நிலவரப்படி அரசியலிலும், சட்டமன்றத்திலும் பெண்கள் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. அது ஏன் என்பதை சிந்திக்க வேண்டும். இவற்றில் பெண்கள் எண்ணிக்கை அதிகமாக வேண்டும். 33 சதவீத இடஒதுக்கீடு சட்டசபையிலும், பாராளு மன்றத்திலும் 33 சதவீத இடஒதுக்கீடு வேண்டும். இதற்காக பெண்கள் போராட வேண்டும். ராஜீவ்காந்தி உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளித்து பதவிகள் கொடுத்திருக்கிறார்.

பாராளு மன்றத்தில் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்து ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. லோக்சபாவில் நிறைவேற்ற முடிய வில்லை. இந்த கூட்டத் தொடரில் சட்டமசோதாவை நிறைவேற்ற வேண்டும். வருகிற 12​ந்தேதி பாராளு மன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கு மொத்தமாக நிதி ஒதுக்கக்கூடாது.

கல்வி, சுகாதாரம் என்று ஒவ்வொரு துறையிலும் பெண்களுக்கு தனியாக நிதி ஒதுக்க வேண்டும். அதற்கு பெண்கள் குரல் கொடுக்க வேண்டும். நானும் டெல்லி சென்று நிதி அமைச்சரிடம் அதை வற்புறுத்துவேன். மதவாதத்தை பெண்கள் ஒதுக்க வேண்டும். அது பெண்களுக்கு எதிரானது. கர்நாடக மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமை அதிகரித்து வருகிறது. அங்குள்ள ஸ்ரீராம் சேவா என்ற அமைப்பு பெண்களுக்கு எதிராக கட்டுப்பாடுகளை விதித்து வன்முறையில் ஈடுபடுகிறது. ஆனால் சட்டசபையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பெண்களின் ஆபாச படங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பாரதீய ஜனதா இரட்டை வேடம் போடும் கட்சியாக உள்ளது. இந்த கட்சி எப்படி நாட்டை காப்பாற்ற முடியும். எப்படி எதிர்க்கட்சியாக இருக்க முடியும். 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பிறகு காங்கிரசுக்கு கஷ்டமான நிலை வந்துவிட்டது, பாராளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் வரும் என்று பா.ஜனதா கூறுகிறது.

ஒருநிலையான ஆட்சி இருப்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை. 5 மாநில தேர்தலுக்கு பிறகு உத்தர பிரதேசத்தில் முன்பை விட காங்கிரஸ் கூடுதல் இடம் பிடித்திருக்கிறது. மணிப்ர், உத்தரகாண்டில் ஆட்சி அமைக்கிறது. பஞ்சாபில் அரசு அமைக்க முடியவில்லை. கோவாவில் தோல்வி அடைந்திருக்கிறது. காங்கிரஸ் 120 வருட பாரம்பரியம் கொண்ட கட்சி. வெற்றி, தோல்வி என்பது சகஜம். 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகளால் மத்திய அரசுக்கு எந்த பாதிப்பும் வராது. அது 5 வருடங்களை யும் நிறைவு செய்யும். எங்கள் தியாகத் தலைவி சோனியாகாந்தி, இளம் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரின் தலைமையில் ஆட்சியை முழுமையாக நிறைவு செய்வோம். வரும் பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் பக்கம்தான் மக்கள் இருப்பார்கள். காங்கிரஸ்தான் ஆட்சி அமைக்கும்.இவ்வாறு ஜெயந்தி நடராஜன் பேசினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்