முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வை அடியோடு வீட்டுக்கு அனுப்புங்கள்: சரத்குமார்

சனிக்கிழமை, 10 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

புளியங்குடி, மார்ச்10 - பலகோடி ரூபாய் ஊழல் செய்த தி.மு.க.வை அடியோடு வீட்டுக்கு அனுப்புங்கள் என்று சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேசினார்.  சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வியை ஆதரித்து ச.ம.க. தலைவர் சரத்குமார் வாக்குகள் சேகரித்தார். சங்கரன்கோவில் தொகுதி சேர்ந்தமரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் ராஜாசெந்துார்பாண்டியன், அமைச்சர் பச்சைமால், கேபிள் டி.வி. சேர்மன் உடுமலை ராதாகிருஷ்ணன், ச.ம.க. எர்ணாவூர் நாராயணன் முன்னிலையில் ச.ம.க. பொதுச் செயலாளர் கருநாகராஜன், மாநில அமைப்பு செயலாளர் காளிதாசன், இலக்கிய அணி செயலாளர் விவேகானந்தன், பொது செயலாளர் கண்ணன், அ.தி.மு.க. மாநில துணைத்தலைவர் மூர்த்தி, கீழப்பாவூர் சேர்மன் செல்வமோகன்ராஜ், புளியங்குடி சேர்மன் சங்கரபாண்டியன், அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். ச.ம.க. தலைவர் சரத்குமார் பேச்சைக் கேட்க ஆயிரக்கணக்கானோர் திடல் முழுவதும் நிரம்பி வழிந்தனர். 

கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசும் போது, பெண்களின் வாழ்வில் வழிகாட்டி நமது முதல்வர். அதனால்தான் சகோதரி முத்துச்செல்வி அவர்களை வேட்பாளராக தேர்வு செய்துள்ளார். சகோதரி முத்துச்செல்வி படித்தவர், பண்பாளர் அதனால் உங்களின் வாக்குகளை இரட்டை இலை சின்னத்தில் அளித்து அமோக வெற்றியினை தாருங்கள். தாய்மார்களுக்காக தாலிக்கு தங்கம் தந்தவர் நமது முதல்வர். குடும்பத்தில் பெண்கள் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்து கறவைமாடுகள்,  ஆடுகள், விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன் மற்றும் கல்வி பயிலும் மாணவ மாணவர்களை எப்படி உயர்த்த வேண்டும் என்று சிந்தித்துப் பார்த்து விலையில்லா லேப்டாப், விலையில்லா சைக்கிள் இப்படி தாய்மார்களும், மாணவர்களும் எதிர்காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று சிந்தித்து,  இரவு பகல் பாராமல் மக்களின் நலனில் அக்கறை கொண்டு தமிழ்நாட்டை முன்மாதிரியான மாநிலமாக மாற்றி வருகிறார் நமது முதல்வர். முதல்அமைச்சர் என்று சொன்னால் இவரைப் போல்தான் இருக்க வேண்டும். தொலைநோக்குப் பார்வையுள்ள முதல்வரின் காலடியில் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வெற்றியை நாம் சமர்ப்பிக்க வேண்டும். உங்களுக்கு ஒரு கதையை இத்தருணத்தில் சொல்ல ஆசைப்படுகிறேன். ஒரு சிற்பி ஒரு மலையை சின்ன உழியால் உடைத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வழிப்போக்கன், அய்யா என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த சிற்பி சொன்னார். இந்த மலையை கடக்க மூன்று நாட்கள் ஆகிறது. அதனால் இந்த மலையை குடைந்து ரோடு போட்டால் அரை மணி நேரத்தில் அடுத்த ஊரை சென்றடையலாம் என்றார் அதற்கு  வழிப்போக்கன் சொன்னான், இந்த பணி முடியும் தருவாயில் நீங்கள் உயிரோடு இருப்பீர்களா? இதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்றான். சிற்பி சொன்னார், என் காலம் முடிவதைப் பற்றி கவலைப்படவில்லை. என் எதிர்கால சந்ததியினர் இதை அனுபவிக்க வேண்டும். பயனடைய வேண்டும் என்றார். அதைப்போல் தான் நம் முதல்வர் எதிர்காலத்தையும் எதிர்கால சந்ததியினரையும் பற்றி சிந்தனையோடு செயல்பட்டு வருகிறார். 

அவரை முதல்வராக பெற்றதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தமிழகத்திலே ஏற்பட்டிருக்கக்கூடிய மின் தட்டுப்பாடு என்பது யாரால் ஏற்பட்டது என்பது எல்லோருக்கும் நன்கு தெரியும். கடந்த தி.மு.க. ஆட்சியில் மின் உபகரணங்கள் சரியாக செயல்படுத்தப்படாமல், பராமரிக்கப்படாமல், மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காமல் தமிழகத்தை இருளில் தள்ளியது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் உலகத்தையே உற்று நோக்க வைத்திட்ட தி.மு.க. உலக அரங்கில் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தி ஒரு லட்சத்தி எழுபத்தி ஆறாயிரம் கோடியை சுருட்டியவர்களை திகார் ஜெயிலுக்கு அனுப்பி ஆட்சியை அகற்றினோம். அப்போர்ப்பட்ட ஊழல் வாதிகளை என்றுமே ஆட்சிப் பொறுப்பில் அமர்த்த மாட்டோம் என  நாம் சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும்.  தமிழக மக்களின் பெருமையை சாகடித்த தி.மு.க. குடும்பம் அதிலும் முன்னாள் முதல்வரின் மகள் கனிமொழியே ஊழல்வாதி என்று சொன்னால் அந்த தி.மு.க.வை இனி நாம் ஏற்க முடியுமா? அப்பேர்ப்பட்ட தி.மு.க. இனி ஓட்டு கேட்டு வந்தாலும் நல்ல சிந்தனையாளர்கள் நாட்டின் மேல் அக்கறையுள்ள நீங்கள் அவர்களுக்கு வாக்களிக்காமல் நல்ல பல திட்டங்களையும் நம் நலனில் அக்கறை கொள்ளும் முதல்வர் ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்த இரட்டை இலைக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்