முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. - தி.மு.க. நேரடியாக மோதும் 84 தொகுதிகள்

புதன்கிழமை, 23 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,மார்ச்.23  - தமிழக தேர்தலில் அ.தி.மு.க. - தி.மு.க. கட்சிகள் 84 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. சென்னையில் மட்டும் 5 இடங்களில் நேரடி மோதல் உள்ளது. 

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 13 ம் தேதி நடக்கிறது. இதில் அ.தி.மு.க 160 இடங்களில் போட்டியிடுகிறது. தி.மு.க. 119 இடங்களில் போட்டியிடுகிறது. இவ்விரு கட்சிகளும் 84 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. மற்ற தொகுதிகளில் எதிரெதிர் அணிகளின் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்கொள்கிறது. 

தி.மு.க. தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. வேட்பாளராக குடவாசல் ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அதைப் போல ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க. சார்பில் ஆனந்த் என்பவர் போட்டியிடுகிறார். அ.தி.மு.க.வும், காங்கிரசும் 38 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. பா.ம.கவுடன் 21 தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தே.மு.தி.க. மொத்தம் 41 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 18 தொகுதிகளில் தி.மு.க.வுடன் நேரடியாகவும், 15 தொகுதிகளில் காங்கிரசுடனும், பா.ம.கவுடன் 6 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள், கொங்கு முன்னேற்ற கழகம் ஆகியவற்றுடன் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியில் அவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தப்படுகிறார். 

சென்னையை போலவே கோவை மாவட்டத்திலும் அ.தி.மு.க. தி.மு.க. 5 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. கோவை தெற்கு தொகுதியில் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியை எதிர்த்து சேலஞ்சர் துரை என்ற துரைச்சாமியும், கோவை வடக்கு தொகுதியில் தி.மு.க மாநகர செயலாளர் வீரகோபாலை எதிர்த்து மலரவன் எம்.எல்.ஏவும், கிணத்துக்கடவில் முன்னாள் அமைச்சர் கண்ணப்பனை எதிர்த்து தாமோதரன் எம்.எல்.ஏவும் மேட்டுப்பாளையத்தில் முன்னாள் எம்.எல்.ஏ அருண்குமாரை எதிர்த்து சின்னராஜ் எம்.எல்.ஏவும் போட்டியிடுகின்றனர். சிங்காநல்லூர், தொண்டாமுத்தூரில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்தும் பொள்ளாச்சியில் கொ.மு.க.வை எதிர்த்தும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony