முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி.யில் வரும் 14-ம் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கல்

சனிக்கிழமை, 10 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச்.10 - பாராளுமன்ற தொடர் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் கடைசியில் கூடும். அப்போது ரயில்வே பட்ஜெட்டும், பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று வந்ததால் பாராளுமன்ற கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. வரும் 14 ம் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இந்த பட்ஜெட்டில் ரயில்வே கட்டணம் உயர்த்தப்படும் எனத் தெரிகிறது. 2004 ம் ஆண்டிற்கு பிறகு இதுவரையில் உயர் வகுப்பு கட்டணமும், சரக்கு கட்டணமும் மட்டுமே உயர்த்தப்பட்டு வந்தது. இப்போது ரயில்வே நிர்வாகம் போதிய நிதி ஆதாரம் இல்லாமல் சிரமப்படுவதால் பயணிகளின் 3 வது வகுப்பு கட்டணமும் உயர்த்தப்பட வேண்டும் என்று இதற்கான குழு பரிந்துரை செய்துள்ளது. 

ஆனால் இந்த முறையும் சாதாரண பயணிகளின் ரயில் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி சமீபத்தில் கூறியிருந்தார். ஆகவே உயர் வகுப்பு கட்டணங்களும், சரக்கு கட்டணங்களும் உயர்த்தப்படும் நம்பப்பட்டது. அதற்கேற்ப பட்ஜெட்தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னரே சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்டது. பொருட்களை பொறுத்து 15 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டது. சிமிண்ட், நிலக்கரி ஆகியவற்றுக்கு 18 முதல் 24 சதவீதமும், உரங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றுக்கு 20 முதல் 35 சதவீதம் வரையிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 

உள்நாட்டில் எடுத்து செல்லப்படும் இரும்பு பொருட்களுக்கு 20 சதவீதமும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய கொண்டு செல்லப்படும் இரும்புகளுக்கு 14 சதவீதமும் உயர்த்தப்பட்டது. இதனால் புதிய நிதி ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் கோடி வரையிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதியாண்டில் ரூ. 48 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இருந்த போதிலும் ஆண்டுக்கு ரூ. 75 ஆயிரம் கோடி செலவு ஏற்படுகிறது. இதில் பெரும்பகுதி ஊழியர்களின் சம்பளமாக செல்கிறது. அதற்கடுத்தாற்போல் எரிபொருட்களுக்கு கூடுதலாக செலவழிக்கப்படுகிறது. 

தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்வதால் எரிபொருளுக்காக மட்டும் இதுவரை ரூ. 19 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. எனவே சாதாரண பயணிகள் கட்டணமும் இந்த முறை இலகுவாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை கட்டண உயர்வு என்று அறிவிக்காமல் வரி என்ற போர்வையில் விதிக்கப்படும் என்று தெரிகிறது. சாம்பிட்ரோடா குழுவும், சாதாரண பயணிகள் கட்டணத்தின் மீது சேவை வரியை விதிக்கலாம் என்றுதான் கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்