முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகத் தயார்: ரீட்டா

சனிக்கிழமை, 10 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் 10 - உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு தார்மீக பொறுப்பேற்று தான் பதவி  விலகத் தயார் என்று அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரீட்டா பகுகுணா ஜோஷி காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவிடம் கூறியுள்ளார். ஆனால் இதுகுறித்து பிறகு முடிவு செய்வதாக ஜோஷியிடம் சோனியா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 6 ம் தேதி அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் சமாஜ்வாடி கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி இரண்டாம் இடத்தையும் பாரதிய ஜனதா கட்சி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 4 வது இடம் மட்டுமே கிடைத்துள்ளது. உ.பி.யில் காங்கிரஸ் கட்சி தோல்விக்கு தானே பொறுப்பேற்றுக்கொள்வதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி ஏற்கனவே கூறியுள்ளார். இந்த நிலையில் தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ரீட்டா பகுகுணா ஜோஷி நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரீட்டா பகுகுணா ஜோஷி, உ.பி.யில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று தான் தனது மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார். தான் ராஜினாமா செய்ய  தயார் என்று சோனியாவிடம் கூறியதாகவும் ஆனால் பதவியில் தொடர்ந்து நீடிக்குமாறு சோனியா கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறினார். 

ராஜினாமா குறித்து இன்னும் சில தினங்களில் முடிவு செய்ய இருப்பதாகவும் சோனியா தன்னிடம் தெரிவித்ததாக ஜோஷி கூறினார். உ.பி. தேர்தல் தோல்விக்கு ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சி தொண்டர்களே காரணம் என்று ரீட்டா பகுகுணா ஜோஷி ஏற்கனவே கூறியிருந்தார். நேற்று டெல்லியிலும் உ.பி. தேர்தல் தோல்விக்கு யார் காரணம் என்று கேட்டதற்கு யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்று ஜோஷி பதிலளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்