முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹோலி பவுடரில் விஷம்: சிறுவன் பரிதாப பலி

சனிக்கிழமை, 10 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

மும்பை, மார்ச் 10 - ஹோலி வண்ணப் பொடியில் விஷம் கலந்திருந்ததால் அந்த பொடி தோலில் பட்டு அரிப்பு ஏற்பட்ட ஒரு சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக பலியானான். வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் பல இடங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. இந்த பண்டிகையின்போது வண்ணப் பொடிகள் ஒருவர் மீது ஒருவர் தூவி மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்வது வழக்கம்.  மும்பையின் புறநகர்ப் பகுதியான கட்கோபர் பகுதியில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது சிலர் வண்ணப் பொடிகளை தூவி விளையாடிக்கொண்டிருந்தனர். விக்கி வால்மீகி என்ற சிறுவன் மீது பட்ட வண்ணப் பொடியால் அவனது தோலில் திடீரென அரிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த சிறுவன் ராஜ்வாடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். இதேபோல மேலும் 9 பேரும் அதே மருத்துவமனையில் தோல் அரிப்பு காரணமாக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் விக்கி வால்மீகி பரிதாபமாக இறந்துபோனான். 

இந்த சிறுவனின் மரணத்திற்கு வண்ணப்பொடியில் கலந்திருந்த விஷத்தன்மைவாய்ந்த ரசாயனப் பொருளே காரணம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். மும்பையில் பல இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. விஷம் கலந்த வண்ணப் பொடியால் பாதிக்கப்பட்ட 190 பேர் சியோன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல பைகுல்லா ரயில்வே மருத்துவமனையில் மேலும் 16 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் 8 முதல் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள். 

இந்த விஷம் கலந்த வண்ணப் பொடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிப்பு மட்டுமல்லாமல் மயக்கம், வாந்தி போன்ற அறிகுறிகளும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வண்ணப் பொடிகளை விற்பனை செய்த கடைக்காரர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்