முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. முதல்வராக அகிலேஷ் 15-ம் தேதி பதவி ஏற்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 11 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

லக்னோ. மார்ச். 11 - உத்தர பிரதேச மாநிலத்தின் மிகவும் இளவயது முதல்வராக அகிலேஷ் சிங் யாதவ் வருகிற 15 ம் தேதி பதவி ஏஏற்க இருக்கிறார். நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டமன்ற தொகுதிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி  அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்தது. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 100 க்கும் குறைவான தொகுதிகளில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தது.  பா.ஜ.க. மூன்றாம் இடத்தையும் காங்கிரஸ் 4 ம்  இடத்தையும் பெற்றன.

அதிக இடங்களில் வெற்றி பெற்ற சமாஜ்வாடி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று லக்னோவில் நடைபெற்றது. 

கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவே மீண்டும் முதல்வராக வேண்டும் என்று ஒரு சாராரும்,  அவரது மகன் அகிலேஷ் சிங் யாதவ் முதல்வராக வர வேண்டும் என்று இன்னொரு சாராரும் கருத்து தெரிவித்திருந்த வேளையில் நேற்று நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அகிலேஷ் யாதவின் பெயரை கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆசம் கான் முன் மொழிந்தார்.

இதை அடுத்து சமாஜ்வாடி கட்சியின் சட்டமன்ஹ தலைவராக அகிலேஷ் யாதவ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அப்போது உத்தர பிரதேச மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட அகிலேஷ் யாதவ்  தேர்தலின் போது தங்களது கட்சி அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார்.

தனது தந்தை முலாயம் சிங் யாதவ் தொடர்ந்து அரசியலில் இருப்பார் என்றும் உ.பி. மாநில மற்றும் தேசிய அரசியலில் அவர் தொடர்ந்து ஈடுபடுவார் என்றும் அவரது ஆசியுடன் தனது அரசியல் பயணம் தொடரும் என்றும் அகிலேஷ் யாதவ் கூறினார்.

அகிலேஷின் தந்தை முலாயம்சிங் யாதவ் உ.பி.யில் 3 முறை முதல்வராக இருந்திருக்கிறார்.

அகிலேஷ் யாதவ் முதல்வராக வேண்டும் என்று பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் விருப்பம் தெரிவித்ததை அடுத்து அந்த பதவியை தனது மகனுக்கே முலாயம் சிங் யாதவ் விட்டுக்கொடுத்து விட்டார்.

சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அகிலேஷ் யாதவ் பிறகு கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பி.எல்.ஜோஷியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

அதற்கு கவர்னர் அனுமதி அளித்தார்.

அதன்படி வருகிற 15 ம் தேதி காலை 11 மணிக்கும் பிற்பகல் 1 மணிக்கும் இடையே அவர் உ.பி.யின் முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார். அவருக்கு  கவர்னர் பி.எல்.ஜோஷி பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

இவர் முதல்வராக பதவி ஏற்றதும் உ.பி.யின் மிகவும் இளவயது முதல்வாரக இவர் இருப்பார்.

 இவருக்கு இப்போது வயது 38.

தான் பதவி ஏற்ற பிறகு உ.பி.யில் தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டம் ஒழுங்கிற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் அகிலேஷ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்