முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது

திங்கட்கிழமை, 12 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச். - 12 - பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இந்த கூட்டத் தொடரின்போது வரும் 14 ம் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 16 ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த கூட்டத் தொடர் மே மாதம் 22 ம் தேதி வரை நீடிக்கும்.  உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இவற்றில் உத்தரபிரதேச மாநிலத்தில் முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி ஆட்சியை கைப்பற்றி உள்ளது. மொத்தமுள்ள 403 இடங்களில் சமாஜ்வாடி கட்சி 224 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. இதையடுத்து முலாயம்சிங் யாதவ் முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கட்சி எம்.எல்.ஏக்கள் அவரது மகன் அகிலேஷ் யாதவே முதல்வராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததையடுத்து அதை ஏற்றுக் கொண்டார் முலாயம்சிங் யாதவ்.  இதையடுத்து இம்மாநிலத்தின் இளம் முதல்வராக அகிலேஷ் யாதவ் வருகிற 15 ம் தேதி பதவியேற்கிறார். பொது வாழ்வில் நேர்மையோடு இருக்க வேண்டும் என்று தன் மகன் அகிலேஷூக்கு அறிவுரை கூறியிருக்கிறார் முலாயம்சிங் யாதவ். பஞ்சாபில் பிரகாஷ் சிங் பாதல் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளார். இங்கு சிரோன்மணி அகாலிதளம், பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. கோவா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியை பிடித்துள்ளது. மாநில முதல்வராக மனோகர் பாரிக்கர் பதவியேற்றுக் கொண்டு விட்டார். உத்தரகாண்ட் மாநிலத்திலோ இழுபறி நிலை நீடிக்கிறது. ஆக, நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.  இப்படிபட்ட பரபரப்பான சூழ்நிலையில்தான் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இந்த கூட்டத் தொடரில் பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக, ஊழல் பிரச்சினை, விலைவாசி உயர்வு, உணவு பாதுகாப்பு சட்டம், இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம், கறுப்பு பண விவகாரம், முல்லை பெரியாறு அணை பிரச்சினை, மின்வெட்டு பிரச்சினை போன்ற பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி சபையில் புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதால் இக்கூட்ட தொடர் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த கூட்டத் தொடரில் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்து அ.தி.மு.க எம்.பிக்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா நேற்று முன்தினம் அறிவுரை கூறியுள்ளார். தமிழ்நாட்டில் கடுமையான மின்வெட்டு நிலவுகிறது. இதற்கு காரணம், மத்திய அரசின் பாரபட்சமே. வெளிமாநிலங்களில் இருந்து தமிழக அரசு மின்சாரத்தை வாங்கினாலும் கூட அதை கொண்டு வருவதற்கான மின் தொடர் பாதையை தர மறுக்கிறது மத்திய அரசு. இதை சுட்டிக்காட்டி சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு ஒரு கடிதமும் எழுதினார். 

குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் அதை கொண்டு வருவதற்கான மின் பாதையை மத்திய அரசு தர மறுக்கிறது என்று சுட்டிக் காட்டி கடிதம் எழுதினார் ஜெயலலிதா. மத்திய அரசின் பாரபட்சத்தையும் அவர் தனது கடிதத்தில் தோலுரித்து காட்டினார். எனவே இது போன்ற பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் அ.தி.மு.க எம்.பிக்கள் எழுப்பி மத்திய அரசின் பாரபட்ச போக்கை நிரூபிப்பார்கள் எனத் தெரிகிறது. இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்துவார்கள். மேலும் முல்லை பெரியாறு பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகளை அ.தி.மு.க எம்.பிக்கள் எழுப்பக்கூடும். இதே போல மற்ற கட்சிகளும் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப உள்ளன. 

தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தை மத்திய அரசு அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா முதல் மம்தா பானர்ஜி வரை கிட்டத்தட்ட 8 மாநில முதல்வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயல் என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சினையை காங்கிரஸ் அல்லாத முதல்வர்கள் சபையில் எழுப்ப கூடும். மேலும் மத்திய அரசு தன் மாநிலத்திற்கு நிதியுதவி செய்வதில்லை என்று குற்றம் சாட்டி வருகிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. எனவே இந்த கூட்டத் தொடரில் அவரது கட்சி எம்.பிக்கள் இப்பிரச்சினையை எழுப்ப கூடும். வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பண விவகாரத்தை பாரதீய ஜனதா கட்சி எழுப்பக் கூடும். இந்த விவகாரத்தில் அரசு என்ன செய்தது என்பதை அறிய ஆர்வமாக இருப்பதாக ஏற்கனவே எல்.கே. அத்வானி கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இது குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கடந்த குளிர்கால கூட்டத் தொடரிலேயே உறுதி அளித்திருந்தார். அந்த உறுதி இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படுமா என்று அறிய ஆவலோடு இருக்கிறார்கள் பா.ஜ.க. எம்.பிக்கள். 

எது எப்படியோ, இந்த கூட்டத் தொடரில் புயல் வீசப் போவது உறுதி. அந்த புயலுக்கு முன் 2 பட்ஜெட்டுகளும் தாக்கல் செய்யப்படவுள்ளன. ஒன்று ரயில்வே பட்ஜெட். இந்த பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி வரும் 14 ம் தேதியன்று  தாக்கல் செய்கிறார். அப்போது அதிவேக ரயில்கள் பற்றிய அறிவிப்பை அவர் வெளியிடக் கூடும். அனேகமாக இந்த முறை பயணிகள் கட்டணம் உயரக் கூடும். அதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. 16 ம் தேதியன்று 2012 - 13 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்கிறார். அப்போது சில வரி விதிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ. 3 லட்சமாக உயரக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு உயர்த்தப்பட்டால் மாத சம்பளம் வாங்குகிறவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற மே மாதம் 22 ம் தேதி வரை நீடிக்கும். அதாவது, மாத கணக்கில் பார்த்தால் மூன்று மாதங்கள் நீடிக்கும். இடையில் மார்ச் 30 ம் தேதி முதல் ஏப்ரல் 24 ம் தேதி வரை இடைவெளி விடப்படும். 

முன்னதாக, இன்று கூடும் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் மரபுப்படி ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பாராளுமன்ற இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் உரை நிகழ்த்துவார். அதாவது, லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் அவர் உரை நிகழ்த்துவார். அப்போது மத்திய அரசின் திட்டங்களை அவர் எடுத்துரைப்பார். மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டத் தொடரில் பல்வேறு விதமான முக்கிய மசோதாக்களும் நிறைவேற்றப்பட உள்ளன. குறிப்பாக, கடந்த முறை பாராளுமன்ற கூட்டம் நடந்த போது லோக்பால் மசோதா லோக்சபையில் மட்டும் நிறைவேற்றப்பட்டது. ராஜ்யசபையில் நிறைவேற்றப்படவில்லை. எனவே இந்த முறை லோக்பால் மசோதா ராஜ்யசபையில் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் அது நிறைவேறுமா என்பதுதான் இன்றைய கேள்வி. இன்னொரு முக்கியமான கேள்வியும் உண்டு. 

உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி அபரிமிதமான வெற்றியை பெற்றிருப்பதால் வரும் 30 ம் தேதி நடக்கவிருக்கும் ராஜ்யசபை இடைத் தேர்தலுக்குப் பிறகு சமாஜ்வாடி கட்சியின் பலம் கணிசமாக உயரக்கூடும். இது ஆளும் கட்சியின் நிலைமையையே மாற்றி விடும். பாராளுமன்றத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு பல தர்மசங்கடங்களை இது ஏற்படுத்தினாலும் ஆச்சரியமில்லை.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்