முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கறுப்பு பணத்தை ஒழிக்க அரசு நடவடிக்கை: பிரதீபா

திங்கட்கிழமை, 12 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, மார்ச் 13 - கறுப்புப் பணத்தை ஒழிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்று ஜனாதிபதி பிரதீபாபாட்டீல் கூறியுள்ளார். பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. மரபுப்படி பாராளுமன்றத்தின் லோக்சபை, ராஜ்யசபை ஆகிய இரு சபைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரதீபா தேவிசிங் பாட்டீல் உரை நிகழ்த்தினார். நமது நாட்டில் இருந்து கள்ளத்தனமாக கறுப்புப்பணம் வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்கு பதுக்கி வைக்கப்பட்டு வருவது கவலையை அளிக்கும் அம்சமாக உள்ளது. இந்த பணத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கண்ணியமான ஒளிவுமறைவற்ற நிர்வாகத்தை செயல்படுத்துவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் கூறினார். 

பினாமி பரிமாற்ற தடுப்புச் சட்டம், கறுப்புப்பண தடுப்புச் சட்டத்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கறுப்புப்பணத்தை ஒழிக்க இதுபோன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருகிறது. கறுப்பு பணத்தை ஒழிக்க அது தொடர்பான சட்டங்களை பலப்படுத்த என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக சிறப்பு குழு ஒன்றை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கறுப்புப்பணம் இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியேயும்  எவ்வளவு இருக்கிறது என்பதை மதிப்பீடு செய்ய தனியார் ஏஜென்சிகள் மூலம் ஆய்வுகள் நடத்தப்படும். மேலும் நேரடி வரி குறியீடு சட்டத்தின்கீழ் சில முக்கிய சட்ட திருத்தங்களும் கொண்டுவரப்படும். வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப்பணத்தை இந்தியாவுக்கு மீட்டு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார். 

கறுப்புப்பணத்தை இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா உள்ளிட்ட பல்வேறு  அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்