முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் பதவி தராததால் கோபம்: மந்திரி ராஜினாமா

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் 14 - உத்தரகாண்ட் முதல்வராக தம்மை தேர்வு செய்யாததற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ஹரீஷ் ராவத் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அவர் பிரதமரிடம் ஒப்படைத்துவிட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 6 ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 70 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 32 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி 31 இடங்களிலும், பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சைகள் 7 இடங்களிலும் வெற்றிபெற்றன. இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் தனிப் பெரும் கட்சியான காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. இதனை மாநில ஆளுனரும் ஏற்றுக்கொண்டார். காங்கிரசுக்கு பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சைகள் ஆதரவு தருவதாக தெரிவித்தன. இதையடுத்து உத்தரகாண்ட் மாநில முதல்வர் யார் என்பதை தீர்மானிப்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் இழுபறி நிலை ஏற்பட்டது. கிட்டத்தட்ட 15 பேர் இந்த பதவிக்கு போட்டியில் இருந்தனர். இதையடுத்து காங்கிரஸ் மேலிட பிரதிநிதியும் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியாக விஜய்பகுகுணாவை மாநில முதல்வராக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது. விஜய்பகுகுணாவின் சகோதரிதான் உ.பி.மாநில காங்கிரஸ் கட்சி தலைவரான ரீட்டா ஜோஷி பகுகுணா. இவர் ஒரு தீவிர ராகுல்காந்தியின் பக்தரும்கூட. 

இந்நிலையில் விஜய்பகுகுணாவை முதல்வராக்கியதற்கு மத்திய அமைச்சர் ஹரீஷ் ராவத் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக ராவத்துடன் முக்கிய ஆலோசனை நடத்தினர். ராவத்திற்கு 18 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக தெரிகிறது. உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலின்போது மும்முரமாக வேலை செய்து காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பாடுபட்டவர் ஹரீஷ் ராவத் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்பகுகுணாவை தேர்வு செய்தது தொடர்பாக ஆத்திரமடைந்த ராவத், தனது எதிர்ப்பை  செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ஹரீஷ் ராவத் ராஜினாமாவும் செய்தார். தமது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஹரீஷ் ராவத் கொடுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் உத்தரகாண்ட் காங்கிரசில் பிளவு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 

நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் மட்டுமே கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்