முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுடப்பட்ட கேரள வாலிபர் சினோஜ் குறித்து பரபரப்பு தகவல்

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

திண்டுக்கல், மார்ச்.14 - திண்டுக்கல்லில் நேற்றுமுன்தினம் கடத்தல் கும்பலைப் பிடிக்க முயன்ற போது போலீஸ் இன்ஸ்பெக்டரைக் கொலை செய்ய முயன்ற கேரள வாலிபர் சினோஜ் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிரேதப் பரிசோதனைக்குப் பின் அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. திண்டுக்கல் பஸ் நிலையம் அருகிலுள்ள சுகன்யா லாட்ஜில் தி.மு.க. பிரமுகரைக் கடத்திய கும்பல் பதுங்கியிருப்பதாக மதுரை சிலைமான் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்றுமுன்தினம் மாலை 7.20 மணியளவில் லாட்ஜை சுற்றி வளைத்த போலீசார் அவர்களைப் பிடிக்க முயன்றனர். அப்போது நடைபெற்ற சண்டையில் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரனை கொலை செய்ய முயன்ற கேரள மாநிலம் கொச்சி அருகிலுள்ள வைடுல்லா பகுதியைச் சேர்ந்த சினோஜ்(32) என்பவர் சுடப்பட்டார். அதில் நிலைகுலைந்த அவர் கீழே விழுந்தார். உடனடியாக காயமடைந்த இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரனையும், கீழே விழுந்து கிடந்த சினோஜையும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

சினோஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். படுகாயங்களுடன் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கடத்தல் கும்பலைச் சேர்ந்த மதுரை ரவுடி வரிச்சியூர் செல்வம் உட்பட மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனர்.

சினோஜின் தந்தையான மொரியலுக்கு போலீசார் உங்களது மகன் விபத்தில் பலியாகி விட்டார் என கூறி உடனே கிளம்பி வருமாறு கூறியுள்ளதாகத் தெரிகிறது. அவரும் நேற்றுக்காலை திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்திற்கு வந்தார். அப்போது தான் துப்பாக்கிச் சூட்டில் தன் மகன் பலியான விபரம் தெரியவந்தது. சினோஜிற்கு மஞ்சு என்ற மனைவியும், சாலமன்(11), என்ற மகனும், ரபேஷா(6) என்ற மகளும் உள்ளனர். 10ம் வகுப்பு வரை படித்த சினோஜ் டூவீலர் மெக்கானிக்காக இருந்து வந்துள்ளார். அவரது வீட்டிற்கு அருகே வசிப்பவருக்கும், சினோஜிற்கும் ஏற்பட்ட தகராறில் இவரது வீடு சூறையாடப்பட்டது. மேலும் தாதாவாக ஆசைப்பட்ட அவர் எரிசாராய கடத்தல் கும்பலோடு பழக்கம் வைத்திருந்துள்ளார். போலீசாரால் கைது செய்யப்பட்ட சினோஜ் ஜாமீனில் வெளிவந்து தனது வீட்டிற்கும் செல்லாமல் பல இடங்களில் சுற்றி வந்துள்ளார். இவர் தமிழ்நாட்டிற்கு வந்த விபரம் அவரது பெற்றோருக்கோ, குடும்பத்திற்கோ தெரியவில்லை என்று தெரிகிறது. 

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த சினோஜின் உடலை மதுரை மருத்துவக்குழுவினர் நேற்று பிரேதப் பரிசோதனை செய்தனர். பின்னர் சினோஜின் உடலை அவரது தந்தையிடம் ஒப்படைத்தனர். துப்பாக்கிச்சூட்டில் அவரது இடது தோள்பட்டையில் மட்டுமே குண்டு காயம் இருந்துள்ளது. மற்ற இடங்களில் காயம் இல்லை. அதனால் அவர் துப்பாக்கிச்சூட்டில் பலியாகி இருக்க வாய்ப்பில்லை எனவும், போலீசாருக்கு பயந்து விஷம் குடித்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் கருதுகின்றனர். பிரேதப் பரிசோதனை முடிவு வந்தபின்னரே சினோஜ் எவ்வாறு இருந்தார் என தெரியவரும்.

திண்டுக்கல் ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் கார்த்திகாதேவி நேற்று என்கவுண்டர் நடைபெற்ற லாட்ஜிற்கு நேரில் சென்று அங்கு பணியாற்றக்கூடிய ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும் காவல்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினார். இவ்விசாரணை சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்