முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் பிரச்சனையால் ராஜ்யசபாவில் நேற்றும் அமளி

வியாழக்கிழமை, 15 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் 15 - லோக்பால் மசோதா விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தின் ராஜ்யசபையில் 2-வது நாளாக நேற்றும் அமளி ஏற்பட்டது. பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 12 ம் தேதி துவங்கியது. மரபுப்படி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில்  ஜனாதிபதி உரை நிகழ்த்தினார்.  ஜனாதிபதி உரையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் குறித்த கருத்து ஏதும் இல்லாததால் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. நேற்று முன்தினம் சபை துவங்கியதுமே அ.தி.மு.க. எம்.பி.க்கள் இப்பிரச்சனை குறித்து மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ஒருமித்த குரலில் இலங்கை அரசு மீது அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அளித்த பதில் திருப்தி அளிக்காததால் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனால் அவை நாள் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டது. 

இதையடுத்து நேற்று பாராளுமன்றம் கூடியதும் ராஜ்யசபையில் எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜேட்லி கடந்த பாராளுமன்றக் கூட்டத் தொடரில் கொண்டுவரப்பட்ட லோக்பால் மசோதா குறித்து பிரச்சனையை கிளப்பினார். . இதுகுறித்து அவர் பேசும்போது, கடந்த குளிர்காலக் கூட்டத் தொடரில் லோக்பால் மசோதா விவாதம் முடிவடையாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இப்போது இப்பிரச்சனையில் மத்திய அரசின் நிலை என்ன? என்று கேள்விக்கணை தொடுத்தார். அவருக்கு ஆதரவாக பி.ஜே.பி. உறுப்பினர்களும், சமாஜ்வாடி மற்றும் இடதுசாரி கட்சிகளின் எம்.பி.க்களும் பேசினார்கள். இதற்கு பதிலளித்த பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால், லோக்பால் மசோதா வலுவானதாக இருக்க வேண்டும் என்று அரசு விரும்புவதாக தெரிவித்தார். அமைச்சரின் பதில் திருப்தி அளிக்காததால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக கோஷங்களை எழுப்பினர். இதனால் ராஜ்யசபையில் நேற்றும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து மேலவை தலைவர் ஹமீத் அன்சாரி எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைதிப்படுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்