முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினேஷ் திரிவேதி பதவி விலகவில்லை: பிரணாப்

வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச்16 - மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி பதவி விலகவில்லை என்றும் மத்திய அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பயணிகள் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. தினேஷ் திரிவேதி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இவர் தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணங்கள்  உயர்த்தப்பட்டதற்கு திரிணமுல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கட்சியை கலந்தாலோசிக்காமல் தினேஷ் திரிவேதி ரயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தியதால் அவரை பதவியிலிருந்து நீக்குமாறு மம்தா பானர்ஜி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்ததாகவும்,  இதைத் தொடர்ந்து திரிவேதி ராஜினாமா செய்ததாகவும் செய்திகள் வெளியாயின. ஆனால் இதை  பொய்யாக்கும் வகையில் திரிவேதியை ராஜினாமா செய்யும்படி திரிணமுல் காங்கிரஸ் கூறவில்லை என்று இப்போது திரிணமுல் காங்கிரஸ் கூறியுள்ளது.

இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் இது குறித்து கேட்டதற்கு தினேஷ் திரிவேதியை பதவி நீக்கம் செய்யும்படி பிரதமருக்கு மம்தா பானர்ஜி கடிதம் எதையும் எழுதவில்லை என்றும் ஆனால் மம்தாவிடமிருந்து ஒரு தகவல் மட்டும் மன்மோகன் சிங்கிற்கு வந்துள்ளது என்றும் அது குறித்து பரிசீலனை நடந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

பிரதமருக்கு மம்தா எழுதிய கடிதம் குறித்து முடிவு  எடுக்கப்பட்டதும் அது குறித்த தகவல்  பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றும் பிரணாப் முகர்ஜி கூறினார்.

பாராளுமன்றத்தின் லோக் சபையில் நேற்று இந்த பிரச்சினை குறித்து இடது சாரி எம்.பி.க்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரச்சினை கிளப்பினர். அப்போது சபையில் இருந்த திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.  சுதீப் பந்தோபாத்யாயா,  ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதியை பதவி நீக்கம் செய்யும்படி தங்களது கட்சி ஒருபோதும் பிரதமருக்கு கோரிக்கை விடுக்கவில்லை என்றார். இந்த பிரச்சினை பிரதமர் மன்மோகன் சிங் - மம்தா பானர்ஜி  ஆகியோருக்கு இடையே பேசி தீர்த்துக்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

இப்பிரச்சினை குறித்து கருத்து கூறிய பிரணாப் முகர்ஜி, திரிவேதி பதவி விலகவில்லை என்றும்  அவர் தனது அமைச்சர் பதவியை தொடர்ந்து வகித்துவருகிறார் என்றும்,  மத்திய அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் அது தனது முழு 5 ஆண்டு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்யும் என்றும் பிரணாப் முகர்ஜி கூறினார்.

திரிவேதி குறித்த பிரச்சினை பரபரப்பாக பேசப்பட்டதை அடுத்து இது ஒரு அரசியல்சாசன நெருக்கடி என்பதால் இதுகுறித்து விவாதிக்க கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்திருந்தன.

இந்த நோட்டீஸ்களை பிரதான எதிர்க்கட்சி  தலைவர் சுஷ்மா சுவராஜ், இடது கம்யூனிஸ்டு  எம்.பி. புத்ததேவ் ஆச்சார்யா, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ், வலது கம்யூனிஸ்டு கட்சியின் குருதாஸ் தாஸ் குப்தா  ஆகியோர் கொடுத்திருந்தனர். ஆனால் இந்த நோட்டீஸ்களை லோக் சபை சபாநாயகர் மீரா குமார் நிராகரித்து விட்டார்.

இதை அடுத்துத்தான் இந்த பிரச்சினை குறித்து சபையில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்