முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினேஷ் திரிவேதியை பதவி நீக்கம் செய்தே தீரவேண்டும்

ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, மார்ச். - 18 - ரயில் கட்டணத்தை உயர்த்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதியை பதவி நீக்கம் செய்தே தீர வேண்டும் என்பதில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி மிக உறுதியாக இருக்கிறார். கடந்த 14 ம் தேதி பாராளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் மூலம் பயணிகள் கட்டணம், பிளாட்பார டிக்கெட் கட்டணம் போன்றவை உயர்த்தப்பட்டன. ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, மம்தா பானர்ஜியும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த கட்டணத்தை உயர்த்தியதே இவரது கட்சியை சேர்ந்த மந்திரிதான். அப்படியிருந்தும் அவரை நீக்கி விட்டு மற்றொரு மந்திரியான முகுல்ராயை மந்திரியாக்க வேண்டும் என்று கோரி பிரதமருக்கு கடிதமும் எழுதினாராம் மம்தா பானர்ஜி. ஆனால் இவரது கோரிக்கையை ஏற்க திரிவேதி மறுத்து விட்டார். மம்தா பானர்ஜி கடிதம் எழுதி கேட்க வேண்டும். அப்போதுதான் விலகுவேன் என்று அவர் கூறி விட்டார். அது மட்டுமல்ல, எனக்கு நாடுதான் முக்கியம். கட்சி எல்லாம் அப்புறம்தான் என்றும் அவர் ஒரு கட்டத்தில் கூறியிருந்தார்.  இந்த நிலையில் தினேஷ் திரிவேதியை நீக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் மம்தா பானர்ஜி. இது குறித்து நேற்று கொல்கத்தாவில் கூறிய அவர், திரிவேதியை நீக்கி விட்டு முகுல்ராயை அமைச்சராக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது பிரதமர் மன்மோகன்சிங்தான். அவர்தான் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் சொல்ல வேண்டியதை ஏற்கனவே சொல்லி விட்டேன். எனவே மத்திய அரசுதான் இதில் முடிவெடுக்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை முகுல்ராய்தான் இனி அடுத்த ரயில்வே அமைச்சர் என்று உறுதிபட கூறினார் மம்தா பானர்ஜி. மத்திய அமைச்சரான முகுல்ராய் நேற்று ராஜ்யசபை இடைத் தேர்தலுக்காக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மம்தா, மேற்கண்டவாறு கூறினார். கடந்த வியாழக்கிழமை நான் பிரதமரிடம் பேசினேன். அப்போது திரிவேதியை மாற்றுவதாக அவர் உறுதியளித்திருக்கிறார் என்றும் மம்தா பானர்ஜி கூறினார். கடிதம் எழுதி கேட்க வேண்டும் என்று திரிவேதி கூறியதாக கல்யாண் பேனர்ஜி கூறியிருக்கிறாரே என்று கேட்ட போது, அதை அவரிடமே கேளுங்கள் என்று கோபத்தோடு கூறினார் மம்தா பானர்ஜி. ராஜ்யசபை இடைத் தேர்தலுக்கு 2 வது முறையாக நேற்று மனுத்தாக்கல் செய்த முகுல்ராய் பற்றி கூறிய மம்தா பானர்ஜி, அவர் கட்சியின் சிறந்த விசுவாசமுள்ள வீரர் என்று வர்ணித்தார். ஏற்கனவே அவர் 6 வருடங்கள் ராஜ்யசபை உறுப்பினராக பணியாற்றி விட்டார். மீண்டும் அவரை நியமித்துள்ளோம். அது மட்டுமல்ல, எங்கள் கட்சியின் அகில இந்திய பொது செயலாளராகவும் அவர் இருக்கிறார். காரணம், அவர் சிறந்த விசுவாசி என்று மம்தா பானர்ஜி முகுல்ராயை பற்றி புகழ்ந்து தள்ளினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்