முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவை துறைமுகத்தில் பதட்டம் போலீஸ் துப்பாக்கி சூடு

ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

புதுச்சேரி, மார்ச்.- 18 - புதுவை கடல் பகுதியில் நேற்று முன்தினம் கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுவையில் இருந்து 40 மைல் கடல் தூரத்தில் இந்திய கடல் எல்லையில் ஒரு படகில் சிங்கள மீனவர்கள் இலங்கை கொடியுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.  அவர்களை இந்திய கடலோர காவல் படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 300 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  அவர்களையும், படகையும் இந்திய கடலோர காவல் படையினர் புதுவை தேங்காய்திட்டு துறைமுகம் அருகே அழைத்து வந்தனர். அவர்களை படகிலேயே அமர வைத்து விட்டு முதலியார்பேட்டை போலீஸ் நிலையம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் இது குறித்து தகவல் அறிந்த வீராம்பட்டினம் மீனவர்களும், நாம் தமிழர் கட்சி உட்பட தமிழ் ஈழ ஆதரவு அமைப்பினர் தேங்காய் திட்டு துறைமுக பகுதியில் திரண்டனர். கைதான சிங்கள் மீனவர்கள் புதுவை மண்ணை மிதிக்க கூடாது. தமிழர்களை கொன்று குவித்த சிங்களர்கள் புதுவை மண்ணை மிதிப்பதா? என்று இலங்கை மீனவர்களை புதுவைக்கு கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதற்கிடையே கடலோர காவல் படையினர் இலங்கை மீனவர்களை கரைக்கு கொண்டு வர ரோந்து படகில் சென்றனர். அப்போது நாம் தமிழர் கட்சியினர் அருமைசெல்வன் தலைமையில் இன்னொரு படகில் இலங்கை மீனவர்கள் இருந்த படகு அருகே சென்றனர். அங்கு இலங்கை மீனவர்கள் புதுவை மண்ணை மிதிக்க விட மாட்டோம் என்று கோஷமிட்டு  படகை சுற்றி வந்தனர். இதனால் அங்கு பதட்டம் உருவானது. உடனே கடலோர காவல் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். எனினும் நாம் தமிழர் கட்சியினர் அங்கிருந்து நகரவில்லை. இது குறித்து தகவல் அறிந்ததும் புதுவை கடலோர காவல் படை சுரேஷ் மன்கோட்டியும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.  இருப்பினும் தொடர்ந்து தேங்காய்திட்டு துறைமுகத்தில் பதட்டம் நிலவி வருகிறது. அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்