முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய ரயில்வே அமைச்சராக முகுல்ராய் இன்று பதவியேற்பு

திங்கட்கிழமை, 19 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் 20 - மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த தினேஷ் திரிவேதி தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து அவருக்கு பதிலாக புதிய ரயில்வே அமைச்சராக முகுல்ராய் இன்று பதவியேற்கிறார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தினேஷ் திரிவேதி ரயில்வே அமைச்சராக மம்தா பானர்ஜிக்கு பிறகு பதவியேற்றார். இவர் கடந்த 14 ம் தேதி ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர்  தினேஷ் திரிவேதியை ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தினார். ஆனால் இதை ஆரம்பத்தில் மறுத்த திரிவேதி, பின்னர் கட்சியின் வலியுறுத்தலுக்கு பணிந்தார். இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை திரிவேதி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கொடுத்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக தெரிவித்தார். இதையடுத்து திரிவேதி மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.  

இதுகுறித்து பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவிக்கையில் தினேஷ் திரிவேதியின் ராஜினாமா கடிதம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக  அனுப்பப்பட்டுள்ளது என்றார். அவர் மேலும் கூறுகையில், மத்தியில் நாங்கள் கூட்டணி அரசை நடத்துவதால் சிக்கலான முடிவுகள் மேலும் சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது என்றார். 

இந்நிலையில் புதிய ரயில்வே அமைச்சராக முகுல்ராயை அறிவிக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கேட்டுள்ளது. ஆனால் முகுல்ராய்க்கு கேபினட் அந்தஸ்து கொடுக்க பிரதமர் விரும்பவில்லை. ஆனாலும் பிரதமரை சமாதானப்படுத்தி முகுல்ராயை ரயில்வே அமைச்சராக்க மம்தா பானர்ஜி தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். இதையடுத்து  செவ்வாய்க்கிழமை(இன்று) புதிய ரயில்வே அமைச்சராக முகுல்ராய் பதவியேற்கிறார். முகுல்ராய் ஏற்கனவே கப்பல்துறை அமைச்சராக பதவி வகித்துவருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்