முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சியில் இன்று ஜெயலலிதா வேட்புமனு தாக்கல்

வியாழக்கிழமை, 24 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

திருச்சி, மார்ச் 24 - அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இதையடுத்து இந்த தொகுதியில் தேர்தல் களம் வி.ஐ.பி. தேர்தல் களமாக மாறிவிட்டது. ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுவதையொட்டி அந்த தொகுதி மக்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்று(வியாழன்)திருச்சி பழைய கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நிலசீர்திருத்த உதவி ஆணையர் அலுவலகத்தில் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அதன்பின்பு திருச்சியில் அவர் தங்கி 3 நாட்கள் திருச்சி மாநகரம் மற்றும் கிராமம் கிராமமாக வேன் மூலம் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு திரட்டுகிறார். 

முன்னதாக இன்று(24ந்தேதி) காலை சென்னையில் இருந்து விமானம்மூலம் திருச்சி விமான நிலையம் வருகிறார். பின்பு அவர் விமான நிலையத்தில் 12 கிலோ மீட்டர் தூரமுள்ள ஸ்ரீரங்கத்திற்கு கார் மூலம் வருகை தருகிறார். வழிநெடுகிலும் ஜெயலலிதாவிற்கு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். பின்னர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு சென்று ஜெயலலிதா பெருமாளை தரிசிக்கிறார். அதைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் வழியாக திருச்சி பழைய கலெக்டர் அலுவலகம் வருகிறார். அங்கு தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். பின்னர் சங்கம் ஓட்டலுக்கு சென்று ஓய்வெடுக்கிறார். 

மாலை 4 மணிக்கு சங்கம் ஓட்டலில் இருந்து புறப்படும் ஜெயலலிதா தில்லைநகர், மெயின்காட்கேட் வழியாக ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மாம்பழச்சாலைக்கு வருகிறார். அங்கிருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்குகிறார். அதைத்தொடர்ந்து பெரியார் நகர், வீரேஸ்வரம், ராகவேந்திரா வளைவு, தெப்பக்குளத்தெரு கார்னர். மேலச்சித்திரை வீதி, கீழஅடையவளஞ்சான் வீதி, காந்திரோடு, சென்னை மெயின்ரோடு, திருவானைக்காவல் சன்னதி வீதி, நடுகொண்டம்பேட்டை ஆகிய பகுதிகளில் தனக்காக பிரச்சாரம் செய்யும் ஜெயலலிதா, அதன் பின்பு திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிந்தாமணி அண்ணாசிலை மரக்கடை, காந்திமார்க்கெட், பாலக்கரை ஆகிய  பகுதிகளில் கிழக்கு தொகுதி வேட்பாளர் ஆர்.மனோகரனை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். இரவு திருச்சியில் தங்குகிறார்.  

இரண்டாம் நாள் பிரச்சாரமாக 25-ந்தேதி(வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு வேன் மூலம் புறப்படும் ஜெயலலிதா முதலில் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராப்பட்டி, எ.புதூர் ஆகிய இடங்களில் திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் மரியம்பிச்சையை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.  அங்கிருந்து தனது ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் யூனியன் ஆபீஸ், அழுந்தூர், சூராவளிப்பட்டி, சன்னாசிப்பட்டி, இனாம்குளத்தூர், ஆலம்பட்டி புதூர், மரவனூர், சத்திரப்பட்டி, நவலூர் குட்டப்பட்டு, ராம்ஜிநகர் மில்கேட், தீரன் நகர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்து விட்டு இறுதியாக திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட கருமண்டபம் பகுதிக்கு வருகிறார். அங்கு மேற்கு தொகுதி வேட்பாளர் மரியம்பிச்சையை ஆதரித்து பேசிவிட்டு மீண்டும் திருச்சி சங்கம் ஓட்டலுக்கு திரும்புகிறார். 

மூன்றாம் நாள் பிரச்சாரமாக (26-ந்தேதி) சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ஓட்டலில் இருந்து புறப்படும் ஜெயலலிதா, தனது ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட கம்பரம்பேட்டை, அல்லூர், ஜீயபுரம், திருப்பராய்த்துறை, காவல்காரன்பாளையம், பேட்டவாய்த்தலை, பெரியருப்nullர், கோப்பு, போசம்பட்டி, கீரிக்கல்மேடு, பள்ளக்காடு, அதவத்தூர், சோமரசம்பேட்டை, புங்கனூர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கிராமங்கள் வழியாக ஜெயலலிதா வேன் மூலம் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க சிறப்புரையாற்றுகிறார். இரவு திருச்சியில் தங்குகிறார். 

27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருச்சியில் இருந்து புறப்பட்டு புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு பிரச்சாரம் செய்ய புறப்பட்டு செல்கிறார்.

இந்த 3 நாட்களும் ஜெயலலிதாவின் சுற்றுப்பயணத்தின்போது அ.தி.மு.க மற்றும் தோழமை கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளார்கள். அதாவது 150 கிலோமீட்டர் தூரத்திற்கு ஜெயலலிதாவிற்கு தாரை, தப்பட்டை முழங்க வரவேற்பு அளிக்கப்படும். மொத்தத்தில் ஜெயலலிதாவை வரவேற்க ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு தொகுதி மக்களும், திருச்சி மேற்கு தொகுதி மக்களும் அ.தி.மு.க.வினரும், தோழமை கட்சிகளும் வரவேற்க தயாராகி விட்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony