முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடைத் தேர்தல்: படுபாதாளத்திற்கு சென்ற தே.மு.தி.க.

வியாழக்கிழமை, 22 மார்ச் 2012      சினிமா
Image Unavailable

 

சங்கரன்கோயில், மார்ச், 22 - சங்கரன்கோயில் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி அத்தொகுதி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பெரிய ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வாய்ச்சவடால் பேசிய விஜயகாந்தின் தே.மு.தி.க. வை அத்தொகுதி மக்கள் படுபாதாளத்திற்கு தள்ளி விட்டனர். சங்கரன்கோயில் இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. ஆரம்பம் முதலே அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி முன்னணியில் இருந்தார். ஒவ்வொரு சுற்றுகளிலும் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை காட்டிலும் 4 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணி வகித்தார். இறுதியாக அவர் தனக்கு அடுத்து வந்த தி.மு.க. வேட்பாளரை காட்டிலும் 68,757 வாக்குகள் கூடுதலாக பெற்று அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி அமோக வெற்றி பெற்றார். இதில் இருந்து சங்கரன்கோயில் தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை இந்த தேர்தல் மூலம் தெளிவுபடுத்தி உள்ளது. 

இந்த தொகுதியில் இதுவரை நடந்த 14 பொதுத் தேர்தல்கள், ஒரு இடைத் தேர்தலையும் சேர்த்து 15 தேர்தல்களில் அ.தி.மு.க. 8 முறை வெற்றி பெற்று சாதனையை படைத்துள்ளது. அங்கு இடைத் தேர்தல் முடிவானதும் முதலில்  அ.தி.மு.க வேட்பாளர் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணியும் துவக்கப்பட்டது. 2011 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்ததால் 28 எம்.எல்.ஏக்களை பெற்றதுடன் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தையும் பெற்றார் விஜயகாந்த். இதற்கு முன்பு நடந்த அனைத்து தேர்தல்களிலும் அவரது கட்சி மிகப் பெரிய தோல்வியையே சந்தித்து வந்தது. 2006 தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்தால் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதுவரை தனி ஆளாக சட்டசபைக்குள் சென்று வந்த விஜயகாந்த், 2011 ல் அ.தி.மு.க.வின் தயவால் 28 எம்.எல்.ஏக்களுடன் பவனி வந்தார். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. நுணலும் தன் வாயால் கெடும் என்ற பழமொழிக்கேற்ப விஜயகாந்தின் குணம் மெல்ல மெல்ல வெளியில் தெரிந்தது. அவர் அ.தி.மு.க.வை மெதுவாக எதிர்க்க ஆரம்பித்தார். இந்நிலையில் சட்டமன்றத்தில் அவரது அநாகரீகமான செயலால் அனைத்து கட்சியினரும் அவர் மீது வெறுப்படைந்தனர். இதற்கிடையில் தே.மு.தி.க.வால்தான் அ.தி.மு.க. ஆட்சியை பிடித்தது போன்றும், விஜயகாந்தால்தான் ஜெயலலிதா முதல்வரானார் என்பது போன்ற தொணியில் விஜயகாந்தின் நடவடிக்கைகள் மாறின. சட்டசபை நிகழ்ச்சிக்குப் பின்னர் சட்டசபையிலேயே முதல்வர் ஜெயலலிதா, சங்கரன்கோயில் இடைத் தேர்தலில் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என சவால் விடுத்தார். அவரது சவாலை கண்டு மிரண்டு போன விஜயகாந்த், என்ன செய்வது என்று அறியாமல் 2 நாட்களுக்கு பின்னர் முதல்வருக்கு எதிர் சவால் விடுத்தார். சங்கரன்கோயில் தொகுதியில் தனித்துப் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி அவர் வேட்பாளரையும் அறிவித்தார். மைத்துனர் சுதீஷை தேர்தல் பொறுப்பாளராக நியமித்தார். இவர் ஒருபுறமும், விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஒருபுறமும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பிரச்சாரத்தின் போது விஜயகாந்தின் கண்ணியமற்ற பேச்சால் பலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மின் வெட்டு பிரச்சினைக்கு முதல்வர் ஜெயலலிதாதான் காரணம் என்றும், விலைவாசிகள் உயர்ந்து விட்டன என்றும், ஆளும் கட்சியின் செயல்பாடுகளை தட்டிக் கேட்க 29 தே.மு.தி.க. எம்.எல்.ஏக்களுடன் முத்துக்குமாரை 30 வது தே.மு.தி.க. எம்.எல்.ஏ.வாக அனுப்பினால் ஆளும் கட்சியின் தவறுகளை தட்டிக் கேட்பார் என்பது போன்ற வசனங்களை சினிமாவில் பேசுவது போன்று தேர்தல் பிரச்சாரத்தில் பொதுமக்கள் முன்பு விஜயகாந்த் பேசினார். மின்வெட்டு பிரச்சினைக்கு யார் காரணம் என்பதையும், தி.மு.க.வால் ஏற்பட்டுள்ள இந்த மின்தடைக்கு முதல்வர் ஜெயலலிதா விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார் என்பதையும் சங்கரன்கோயில் தொகுதி மக்கள் தெளிவாக அறிந்து வைத்திருந்தனர். சங்கரன்கோயிலில் தனக்கு எப்படியும் வெற்றி கிடைக்காது என்பதை அறிந்த விஜயகாந்த், எப்படியாவது 2 வது இடத்தை பிடித்து மக்களிடையே தனது கட்சிக்கு மிகுந்த ஆதரவு இருப்பதாக, அ.தி.மு.க.வுக்கு அறிவுறுத்த வேண்டும் என அவரது கட்சியினருக்கு உத்தரவிட்டு தேர்தல் பணியாற்றினார். 2006 சட்டமன்ற பொதுத் தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டு 5 ஆயிரம் ஓட்டுகளை மட்டுமே பெற முடிந்தது. அதன் பின் நடந்த பாராளுமன்ற தேர்தலில் சங்கரன்கோயில் தொகுதியில் மட்டும் சுமார் 11 ஆயிரம் வாக்குகளை பெற்றார். இதை கணக்கிட்டு இந்த தேர்தலில் மக்கள் தங்களுக்கு மிகப் பெரிய வெற்றியை கொடுப்பார்கள் என பகல் கனவு கண்டார் விஜயகாந்த். ஆனால் 2011 பொதுத் தேர்தலுக்கு முன்பு விஜயகாந்தின் செயல்பாடுகள், அதன் பின்னர் அவரது செயல்பாடுகள் அனைத்தையும் உணர்ந்திருந்த சங்கரன்கோயில் மக்கள் இந்த தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட காத்திருந்தனர். அக்கட்சியில் சமீபத்தில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள், கட்சியில் செல்வாக்கு இல்லாத நிலையில் தொண்டர்கள் அவர்கள் மீது வெறுப்பு கொண்டனர். மேலும் இவர்களால் பதவியிழந்த முன்னாள் நிர்வாகிகளும் வேட்பாளர் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். இது தவிர அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்ததால்தான் தே.மு.தி.க.  மிகப் பெரும் வெற்றியை பெற்றது என்பதையும், வெற்றி பெற்ற பின்னர் ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைத்தவர் விஜயகாந்த் என்பதையும் அதன் பின் தனியாக போட்டியிட்டு  தம்மால் சாதிக்க முடியும் என்ற அவரது மமதையையும்,  சங்கரன்கோயில் தொகுதி மக்கள் மிக தெளிவாக புரிந்து வைத்திருந்தனர். தேர்தல் பிரச்சாரத்தில் அ.தி.மு.க.வை குறை சொல்ல முடியாமல் திணறிய விஜயகாந்த், மின்வெட்டு பிரச்சினையை பெரிதாக பேசினார். அவரது பேச்சால் அப்பகுதி மக்கள் வெறுப்படைந்தனர். தேர்தலன்று பெரும்பாலான பூத்துகளில் தே.மு.தி.க.வின் பூத் ஏஜெண்டுகள் பூத்துக்குள் காணாமல் போயினர். இந்த தேர்தலில் சங்கரன்கோயில் தொகுதி மக்கள் தே.மு.தி.க. வேட்பாளருக்கு 4 வது இடம் கொடுத்து மிகப் பெரிய தோல்வியை ஏற்படுத்தியதுடன் தே.மு.தி.க.வை அதலபாதாளத்திற்குள் தள்ளி விட்டனர். 2 வது இடத்திற்கு வந்து விடுவோம் என்ற மமதையுடன் தேர்தல் களத்தை சுற்றி வந்த விஜயகாந்த், 3 வது இடம் பிடிக்க கூட தகுதியின்றி 4 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இது விஜயகாந்தின் ஆணவத்திற்கும் கர்வத்திற்கும் கிடைத்த பாடமாகும். வருங்காலங்களிலாவது அவர் நன்றியுடன் நடந்து கொள்வது நல்லது. இனிமேல் தே.மு.தி.க.வை யாரும் கூட்டணி சேர்க்க மாட்டார்கள் என்பதுதான் காலத்தின் கட்டாயமாகும். 2011 ல் அ.தி.மு.க.வுடன் சேரவில்லை என்றால் தே.மு.தி.க. காணாமல் போய் விடும் என்ற சூழ்நிலையை உணர்ந்து அ.தி.மு.கவுடன் கூட்டணி சேர்ந்தார் விஜயகாந்த். அன்றைய நிலையே இன்று தே.மு.தி.க.வுக்கு திரும்பி உள்ளது. இந்த பரிதாப நிலைக்கு விஜயகாந்தின் ஆணவமே முழுக்க முழுக்க காரணமாகும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்