முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க வர்த்தக அமைச்சர் விரைவில் இந்தியா வருகை

வியாழக்கிழமை, 22 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன், மார்ச்-22 - அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் ஜான் பிரிசன் விரைவில் இந்தியாவுக்கு வர இருப்பதாக தெரிவித்துள்ளார். அப்போது தன்னுடன் அமெரிக்க வர்த்தக தலைவர்களையும் அழைத்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் ஜான் பிரிசன் வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் தான் விரைவில் இந்தியா செல்ல இருப்பதாகவும் புதுடெல்லி, ஜெய்ப்பூர், மும்பை ஆகிய நகரங்களில் நடக்கும் வர்த்தக கூட்டங்களில் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் தன்னுடன் அமெரிக்க வர்த்தக தலைவர்கள் பலரையும் இந்தியாவுக்கு அழைத்துவர இருப்பதாகவும் கூறினார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இந்தியாவுக்கு வருகைதந்தார். அவர் அப்போது இந்திய பாராளுமன்றத்தில் பேசுகையில், இந்த 21 ம் நூற்றாண்டில் அமெரிக்கா - இந்தியா உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டிருந்தார். ஒபாமாவின் இந்த பேச்சை நிரூபிக்கும் வகையில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தக உறவுகள் அதிகரித்து வருகின்றன. உலகில் வேகமாக பொருளாதார வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அங்கு உள்கட்டமைப்பு துறைகளில் புதிய வர்த்தக வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. எனவே இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு ஏற்ற தருணம் கிடைத்துள்ளது. எனவே தானும் தனது வர்த்தக குழுவினரும்  விரைவில் இந்தியாவுக்கு வர இருப்பதாக ஜான் பிரிசன் தெரிவித்தார். 

இதேபோல அமெரிக்காவில் இந்திய வர்த்தக கம்பெனிகள் மற்றும் தனி நபர்கள் முதலீடு செய்வதற்கு அமெரிக்கா ஊக்கம் கொடுக்கும் என்றும் அவர் கூறினார். ஆனால் இந்தியாவுக்கு பிரிசன் எப்போது வருவார் என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்