முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2013-ல் தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழும்

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சேலம் மார்ச்.23 - வரும் 2013 ல் தமிழக மின் மிகை மாநிலமாக திகழும் என வீரபாண்டி தொகுதியில் நடைப்பெற்ற விலையில்லா மிக்சி,கிரைண்டர் மற்றும் பேன் வழங்கும் விழாவில் அ.தி.மு.க.எம்.எல்.ஏ.எஸ்.கே.செல்வம் பேசியுள்ளார்.

சேலம் வீரபாண்டி தொகுதிக்குட்பட்ட கடத்தூர் மற்றும் பாலமேடு ஊராட்சிகளில் தமிழக அரசின் விலையில்லா மிக்சி,கிரைண்டர் மற்றும் பேன் வழங்கும் விழா நேற்று காலை நடைப்பெற்றது. இந்த விழாவில் சேலம் தாசில்தார் குமரேசன் வரவேற்று பேசினார். எஸ்.கே.செல்வம் எம்.எல்.ஏ.தலைமை வகித்து 1435 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி,கிரைண்டர் மற்றும் பேன் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது. வீரபாண்டி தொகுதியில் வீரபாண்டி ஒன்றியத்தில் முதன் முதலாக விலையில்லா மிக்சி,கிரைண்டர் மற்றும் பேன்களை வழங்க நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு கடத்தூர் மற்றும் பாலமேடு ஊராட்சி மக்களின் சார்பிலும் எனது சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பொருட்களை வாங்கி பயன்படுத்தும் பொதுமக்களுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.தேர்தலில் கொடுத்த  வாக்குறுதிகளின் படி ஆண்டுதோறும் 25 லட்சத்திற்கும் அதிகமான குடும்பதாரர்களுக்கு விலையில்லா மிக்சி,கிரைண்டர்,பேன்களை தமிழக முதல்வர் வழங்க உத்தரவிட்டு அதன்படி தற்போது தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.வீரபாண்டி ஒன்றியத்தில் இன்று முதன் முதலாக வழங்கப்படுகிறது. சொன்ன வாக்குறுதிகளை தமிழக முதல்வர் சிறப்பாக நிறைவேற்றி வருகிறார். இந்த விலையில்லா மிக்சி,கிரைண்டர்,பேன் கூட நகர மக்களுக்கு இணையாக கிராம மக்களும் உயர்ந்த வாழ்க்கை வாழ வேண்டும், தனது குழந்தைகளை பள்ளி அனுப்பவும், கணவரை வேலைக்கு அனுப்பவும் வீட்டு பணிகளை விரைந்து முடிக்கவும், மக்கள் சுகாதாரமாக வாழவும் பெண்கள் கஷ்டப்படக்கூடாது என்ற நோக்கில் தமிழக முதல்வர் ஙூரூ.12,000 மதிப்பிலான இந்த பொருட்களை இலவச மாக வழங்கி இருக்கிறார்.

தேர்தல் வாக்குறுதியில் சொன்னதுபோல் முதியோர் உதவித்தொகை ரூ.500 ல் இருந்து ரூ.1000 மாகவும், விலையில்லா இலவச அரிசியும் வழங்கி இருப்பு, பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இலவச காலனி, சீருடை, பாடபுத்தகம், பஸ் பாஸ் என அனைத்தும் இலவசமாக வழங்கி வருகிறார். அனைத்து கிராமங்களுக்கும் கடத்தூர் மையப்பகுதியாக இருந்தாலும் அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றடைந்துள்ளது. ஏழை எளிய மக்கள் உயர்ந்த நிலையில் வாழ வேண்டும் என்ற நோக்கில்தான் இந்திரா நினைவு வீடுகட்டும் திட்டத்திற்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1 லட்சத்தை பசுமை வீடுகள் திட்டமாக மாற்றி ரூ.1.80 லட்சம் வழங்க உத்தவிட்டுள்ளார். இந்த தொகுதியில் கடத்தூர் ஊராட்சியில் அனைத்து சாலை வசதி,கான்கிரீட் சாலைகள், கழிப்பிட வசதிகள் என அனைத்து வசதிகளும்  அ.தி.மு.க.ஆட்சிகாலத்தில்தான் செய்து முடிக்கப்பட்டது. மீதம் 25 சதவீதம் பணிகள் இருக்கிறது. அதையும் இப்போது செய்து முடிக்கப்படும். தற்போது மின்வெட்டை பற்றி பேசுகிறார்கள்.கடந்த அ.தி.மு.க.ஆட்சி காலத்தில் தமிழகம் மின் மிகை மாநிலமாக இருந்தது. அடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க.வினரின் மெத்தன செயல்பாட்டால் தற்போது தமிழகம் மின்வெட்டால் தவிக்கிறது. இதை நீக்க தமிழக முதல்வர் போர்கால நடவடிக்கை எடுத்து வருகிறார். வரும் ஜூன் மாதம் முதல் தமிழகம் மின்வெட்டில் இருந்து விடுபடும். தற்போது கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை துவக்க உத்தரவிட்டுள்ளார். அடுத்தமாதம் மேட்டூரில் மின் உற்பத்தியை தமிழக முதல்வரே துவக்க வைக்க உள்ளார்.தற்போது காற்றாலை மின் உற்பத்தியிலும் கூடுதலம் கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்படி பல வழிகளில் மின் உற்பத்தியை பெருக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வருகிறார். வரும் 2013 ல் தமிழகம் மீண்டும் மின் மிகை மாநிலமாக மாறிவிடும்.

இதேபோல் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்கள் அனைத்து தொலைநோக்கு பார்வையுடன் போடப்படுகிறது. உள்ளாட்சிதுறையாகட்டும், விவசாயத்துறையாகட்டும் அவர் தீட்டும் திட்டங்கள் எல்லாம் இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவில் உள்ளது. எனவே பொதுமக்கள் அவருக்கு எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும். நாங்களும் பொதுமக்களுக்கு அவர்களின் தோழர்களாக கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் தொண்டர்களாக இருப்போம்.இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றியகுழு உறுப்பினர் சித்தன், துணை தலைவர் லலிதா கந்தசாமி, ஒன்றிய தலைவர் வசந்தி வருதராஜ், துணை தலைவர் அமுதா அருணாச்சலம், ஒன்றிய செயலாளர் வருதராஜ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சீரகாபாடி பழனிசாமி, முருங்கப்பட்டி வெங்கடேசன், வீரபாண்டி சாந்தி சிவன், இனாம் பைரோஜி சாந்தி கோபாலகிருஷ்ணன், சிவக்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு 16 வார்டு உறுப்பினர் பழனியம்மாள் முத்து, பழனி கவுண்டர்,கடத்தூர் பழனிசாமி,வேம்படிதாளம் அருணாச்சலம், ஆட்டையாம்பட்டி ரவிச்சந்திரன்,வீரபாண்டி ஒன்றிய துணை ஆணையர் அண்ணாமலை,கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் ஊராட்சி மன்ற துணை தலைவர் பாலச்சந்திரன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்