முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து ரயில் கட்டண உயர்வும் வாபஸ்: முகுல்ராய்.

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச்.23 - ஏ.சி. முதல் வகுப்பு கட்டணம், ஏ.சி. 2 ம் வகுப்பு கட்டணங்கள் தவிர உயர்த்தப்பட்ட அனைத்து ரயில் கட்டண உயர்வையும் புதிய ரயில்வே அமைச்சர் முகுல்ராய் நேற்று வாபஸ் பெற்றார். பாமர மக்களை கடுமையாக பாதிக்கும் என்பதால் ரயில் கட்டண உயர்வு வாபஸ் பெறப்பட்டதாகவும் அமைச்சர் முகுல்ராய் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் கடந்த 14 ம் தேதியன்று இந்த ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை அப்போது ரயில்வே அமைச்சராக இருந்த தினேஷ் திரிவேதி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் மூலம் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. பிளாட்பார டிக்கெட் கட்டணமும் உயர்த்தப்பட்டது. கிலோ மீட்டருக்கு 2 பைசா முதல் 30 பைசா வரை பல்வேறு பிரிவுகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. புறநகர் மற்றும் சாதாரண 2 ம் வகுப்பு பயணிகளுக்கான கட்டணம் கிலோ மீட்டருக்கு 2 பைசாவும், மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் 2 ம் வகுப்பு கட்டணம் கிலோ மீட்டருக்கு 3 பைசாவும், தூங்கும் வசதிக்கு 5 பைசாவும் என இவ்வாறு பல்வேறு பிரிவுகளில் 30 பைசா வரை உயர்த்தப்பட்டது. 

ஆனால் இந்த கட்டண உயர்வை திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கடுமையாக கண்டித்தார். பொதுமக்களே கூட கொடிபிடிக்காத நிலையில் தன்னுடைய கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் உயர்த்திய கட்டண உயர்வுக்கு மம்தாவே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அது மட்டுமல்ல, கட்டணத்தை உயர்த்திய தினேஷ் திரிவேதியை மாற்றி விட்டு முகுல்ராயை மத்திய ரயில்வே அமைச்சராக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு மம்தா கடிதமும் எழுதினார். 

இந்த நிலையில் தன்னுடைய பதவியில் இருந்து விலக ஆரம்பத்தில் மறுத்த தினேஷ் திரிவேதி, பிறகு கட்சி மேலிடத்தின் நெருக்கடியை பொறுக்க முடியாமல் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து அதன்படி பதவியும் விலகினார். இதைத் தொடர்ந்து கடந்த 3 தினங்களுக்கு முன் புதிய ரயில்வே அமைச்சராக முகுல்ராய் பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிலையில் நேற்று பாராளுமன்றம் வழக்கம் போல் கூடியது. அப்போது லோக்சபையில் ரயில்வே பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. இந்த விவாதத்திற்கு பதிலளித்து முகுல்ராய் பேசினார். அப்போதுதான் அவர் தனது முன்னாள் சகாவும், முன்னாள் ரயில்வே அமைச்சருமான தினேஷ் திரிவேதி உயர்த்திய ரயில் கட்டணங்களை எல்லாம் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். ஏ.சி. முதல் வகுப்பு, ஏ.சி. 2 ம் வகுப்பு கட்டணங்கள் தவிர, அனைத்து ரயில் கட்டண உயர்வையும் திரும்பப் பெறுவதாக சபையில் முகுல்ராய் அறிவித்தார். பாமர மக்களுக்கு கடுமையான சுமை ஏற்படும் என்பதால் இவ்வாறு கட்டணத்தை திரும்பப் பெற்றதாக அவர் தெரிவித்தார். கடந்த 19 ம் தேதிதான் இவர் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற ஒரு சில நாட்களிலேயே இவர் கட்டண உயர்வை திரும்பப் பெற்றுள்ளார். ஏ.சி. 3 ம் வகுப்பு, ஏ.சி. சேர் கார் கட்டணங்களும் திரும்பப் பெறப்படுவதாகவும் அவர் கூறினார். 

காரணம், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஏராளமான பயணிகள் இந்த வகுப்புகளில் பயணம் செய்வதால் இந்த கட்டணத்தையும் ரத்து செய்வதாக அவர் அறிவித்து நட்பெயரை தேடிக் கொண்டார். இதன் மூலம் ஏ.சி. முதல் வகுப்பு, 2 ம் வகுப்பு கட்டணங்கள் தவிர, அனைத்து கட்டண உயர்வுகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. தினேஷ் திரிவேதி அறிவித்த மேலும் சில திட்டங்களையும் முகுல்ராய் திரும்பப் பெற்றார். 

அதாவது, சுதந்திரமான ரயில்வே ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பது, ரயில்வே வாரியத்தை விரிவுபடுத்துவது போன்ற திட்டங்களையும் முகுல்ராய் வாபஸ் பெற்றார். ரயில் கட்டணங்கள் இந்த முறை மக்களை பாதிக்கும் அளவில் உயர்த்தப்படவில்லை. ஓரளவுதான் உயர்த்தப்பட்டிருந்தது. அப்படியிருந்தும் கூட அந்த கட்டண உயர்வை திரும்பப் பெற திரிணாமுல் காங்கிரஸ் எடுத்த நடவடிக்கையை மற்ற கட்சிகள் வியந்து பாராட்டுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்