முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவல் துறைக்கு 1000 கணினிகள் மற்றும் நாற்காலிகள்

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை ,மார்ச் .24 - முதல்வர் ஜெயலலிதாவின் சீர்மிகு ஆட்சியில் காவல்துறை சீர்த்திருத்தங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. அவ்வகையில் சென்னை மாநகராட்சிக்கு 87 ரோந்து வாகனங்களை வாங்குவதற்கும், பல்வேறு பணிகளைக் கவனிக்க 119 புதிய பணியிடங்களை தோற்றுவிக்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும் தஞ்சை மாவட்ட காவல் கணிகாணிப்பாளர் அலுவலகத்திற்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் காவலர் குடியிருப்புக்கும் புதிய கட்டடங்களைக் கட்டவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். காவல் துறை சீரமைப்பிற்காக புதிதாக ஆயிரம் கணினிகள் வாங்கவும், ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் நாற்காலிகள் போன்ற பொருட்கள் வாங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-  

ஒரு நாடு வளம் பெறவேண்டும் என்றால் அந்த நாட்டில் அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும். அமைதியான சூழ்நிலையில் தான், அந்த நாட்டின் மக்கள் அச்சமின்றி அமைதியாக வாழ முடியும்.  நாட்டின் அனைத்து துறைகளிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, நாட்டின் பொருளாதார நிலை வளமாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையினை உருவாக்குவதில் காவல் துறை முக்கிய பங்கு வகிக்கின்றது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த காவல் துறையின் அதிநவீனமயமாக்கப்படுதலுக்காகவும், அந்த காவல் துறையில் பணியாற்றும் காவலர்களின் நலன்களுக்காகவும்,  முதலமைச்சர் ஜெயலலிதா  பல முன்னோடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அந்த வகையில், சென்னை மாநகரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் காவலர்களின் கண்காணிப்பு பணி இடைவிடாது இருக்க அதிக அளவு ரோந்து வாகனங்கள் தேவை என்பதை கருத்தில் கொண்டு, 5 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் 87 ரோந்து வாகனங்களை வாங்குவதற்கு  முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாநகர காவல்துறை ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில்,  பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்தல்; nullநீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை கண்காணித்தல்; குற்றவாளிகள் மீது வழக்கு தொடுத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்துறை தனது பணிகளை மேலும் செம்மையாக செயல்படுத்த இத்துறைக்கு கூடுதல் பணியாளர்கள் தேவை என்ற காவல்துறையின் கோரிக்கையினை ஏற்று, காவல்துறை ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப் பிரிவுக்கு கூடுதலாக 1 காவல் துறை துணை ஆணையர், 2 காவல் உதவி ஆணையர், 9 காவல் ஆய்வாளர், 46 காவல் உதவி ஆய்வாளர், 10 தலைமை காவலர், 20 முதல் நிலை காவலர், 30 இரண்டாம் நிலை காவலர், 1 சுருக்கெழுத்து தட்டச்சர் என மொத்தம் 119 புதிய பணியிடங்களை தோற்றுவிக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள். இதனால் அரசுக்கு தொடர் செலவினமாக 5 கோடியே 32 லட்சத்து 83 ஆயிரத்து 769 ரூபாயும், தொடரா செலவினமாக 86 லட்சத்து 61 ஆயிரத்து 335 ரூபாயும், ஏற்படும்.

தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், தஞ்சாவூரில் ஒரு பழைய கட்டடத்தில் இயங்கி வருகிறது. இக் கட்டடம் தற்பொழுது மிகவும் பழுதடைந்துள்ளது.  எனவே மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சொந்தக் கட்டடம் கட்ட வேண்டியது மிகவும் இன்றியமையாதது என்பதைக் கருத்தில் கொண்டு, தஞ்சாவூரிலுள்ள தமிழ் பல்கலைக் கழகத்துக்கு அருகில் 4 கோடியே 81 லட்சம் ரூபாய் செலவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக  கட்டடம் கட்டுவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது.  இங்கு மாதந்தோறும் நடைபெறும் கிரிவலம் மற்றும் வருடந்தோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா ஆகியவற்றிற்கு திரளாக பொதுமக்கள் வருகை தருகின்றனர்.  இச்சமயங்களில் மக்களின் பாதுகாப்பிற்காக வெளி மாவட்டங்களிலிருந்து காவலர்கள் வரவழைக்கப்படுகின்றனர்.  இவ் விழாக்காலங்களில் காவல் பணிகளை மேற்கொள்ளும் காவலர்கள் நலன் கருதி, 11 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவில் 500 காவலர்கள் தங்குவதற்கான அளவில் காவலர் குடியிருப்புகள் கட்டுவதற்கு, முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

காவல் துறையின் குற்றப்பிரிவு கீழ் இயங்கும்  குற்றப் புலனாய்வுத் துறையில் அறிவியல் பிரிவு ஒன்றினைத் துவக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இப்பிரிவில் அறிவியல் அதிகாரி மற்றும் அறிவியல் உதவியாளர் ஆகிய இரு பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். இவர்கள், வழக்கின் முக்கியமான அம்சமான அறிவியல் சம்பந்தப்பட்ட குறிப்புகளை ஆராய்ந்து குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிக்கை அளிப்பார்கள்.  ஆயுதப்படை மற்றும் சிறப்புக் காவல்படையில் புதியதாக பணியமர்த்தப்பட்டுள்ள இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு, காவல்துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் பணியாற்றக்கூடிய வகையில் நுட்பமான பயிற்சியை அளிக்கவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, இடையில் கால அளவு குறைக்கப்பட்ட  பயிற்சியினை மீண்டும் முன்பு இருந்தது போல் காவலர் உயர்ரக பயிற்சி பள்ளியில் 7 மாதங்கள் பயிற்சி அளிப்பதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்.       

மக்களின் அன்றாட வாழ்வில் கணினி பயன்பாடு பெருமளவு அதிகரித்துள்ளது.  எனவே, காவல் துறைக்கு தேவைப்படும் விவரங்களான குற்றங்களின் எண்ணிக்கை, குற்றவாளிகளின் செயல்பாடுகள், குற்றவாளிகள் பற்றிய  விவரங்களை பராமரித்தல் போன்ற அனைத்து  நடவடிக்கைகளிலும் கணினி செயல்பாடு பெரும் பங்கு வகிக்கின்றது.  எனவே காவல்துறையின் பணி சிறக்க, காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகங்களுக்கு 245 கணினிகள், மாவட்ட தலைமை காவல் அலுவலகங்களுக்கு 330 கணினிகள், சரக அலுவலகங்களுக்கு 60 கணினிகள், மண்டல அலுவலகங்களுக்கு 16 கணினிகள், மாநகர காவல் அலுவலகங்களுக்கு 70 கணினிகள், ஆயுதப்படை  தலைமை அலுவலகங்களுக்கு 5 கணினிகள், ஆயுதப்படை சரக அலுவலகங்களுக்கு 10 கணினிகள், தமிழ்நாடு சிறப்புக் காவல் படைக்கு 64 கணினிகள், காவல்துறை சிறப்பு பிரிவுகளுக்கு 100 கணினிகள், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு 100 கணினிகள், என மொத்தம் 5 கோடி ரூபாய் செலவில் 1000 கணினிகள் வாங்குவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

காவல் நிலைய அன்றாடப் பணிகள் அனைத்தும் பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பு உடையவைகள் ஆகும்.  அன்றாடம் காவல் நிலையங்களின் உதவியை நாடி வரும் பொதுமக்களை வரவேற்று அமர வைக்க பெரும்பாலான காவல் நிலையங்களில் நாற்காலிகள் கூட இருப்பதில்லை.  இதனால் பொதுமக்கள் வெகுநேரம் நின்று கொண்டே தங்கள் குறைகளை தெரிவிக்கின்ற நிலை உள்ளது.  இதனை கருத்தில் கொண்டு, இந்தியாவிலேயே முன் மாதிரியாக தமிழகத்திலுள்ள

1492 காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் அமர்வதற்காக காவல் நிலையம் ஒன்றுக்கு 10  நாற்காலிகள் வீதம் வாங்குவதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள்.   இந்த வகையில் அரசுக்கு 92 லட்சத்து 20 ஆயிரத்து 560 ரூபாய் செலவினம் ஏற்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்