முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய விடுதிகளை பராமரிக்க 187 ஊழியர்கள் நியமனம்

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.24 - ஆதிதிராவிட, பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபைச் சேர்ந்தவர்கள், இஸ்லாமிய சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் தங்கிப்படிக்க வசதியாக 53 புதிய விடுதிகளை கட்டி முடிக்கவும், அவற்றை பராமரிக்க 187 ஊழியர்களை நியமிக்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் வாழும் அனைத்து ஆதிதிராவிட  குழந்தைகளும் இடை நிற்றல் இன்றி கல்வி கற்று,  சமுதாயத்தில் உயர்ந்த நிலையை எய்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் அவர்களுக்கு கட்டணமில்லா கல்வி, மதிய உணவு, பள்ளிகளுக்குச் செல்ல மிதிவண்டி, ஊக்கத் தொகை, தங்கும் விடுதிகள் போன்ற எண்ணற்ற நலத் திட்டங்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு  செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் ஆதி திராவிட மாணவ மாணவியர் தங்கி  படிப்பதற்கென 1254 நல விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பயனாக, தற்பொழுது ஆதி திராவிட மாணவ மாணவியர் அதிக அளவில் கல்வி கற்க முன்வருவதாலும், இடை நிற்றல் மிகவும் குறைந்துள்ளதாலும், ஆதி திராவிட மாணவ மாணவியர்கள் தங்கி படிப்பதற்கு ஏதுவாக புதிய விடுதிகள் துவங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவிற்கிணங்க ஆதி திராவிட மாணவ மாணவியருக்காக 21 பள்ளி  விடுதிகளும், 4  கல்லூரி விடுதிகளும்,  ஆக மொத்தம் 25 விடுதிகள் இந்த ஆண்டு புதியதாக துவங்கப்படும். இதில் ஒரு விடுதிக்கு 50 மாணவ/மாணவியர் வீதம் 1250 மாணவ மாணவியர்கள் சேர்க்கப்படுவார்கள்.

இந்த விடுதிகளை பராமரிக்க ஒரு விடுதிக்கு  பட்டதாரி காப்பாளர்/காப்பாளினி பணியிடம் 1, சமையலர் பணியிடம்1, காவலர்/ஏவலர் பணியிடம் 1 என்ற வகையில் 3 பணியிடங்கள் வீதம் மொத்தம் 25 விடுதிகளுக்கு 75 பணியிடங்களை தோற்றுவிக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  புதிதாக தொடங்கப்பட உள்ள 25 விடுதிகளுக்காக அரசுக்கு தொடர் செலவினமாக 2 கோடியே 93 லட்சத்து 26 ஆயிரத்து 970 ரூபாயும், தொடரா செலவினமாக 39 லட்சத்து 71 ஆயிரத்து 750  ரூபாயும் ஆக மொத்தம் 3 கோடியே 32 லட்சத்து 88 ஆயிரத்து 720 ரூபாயும் செலவு ஏற்படும். இதேபோன்று, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இன மாணவர்களின் நலனிலும், முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.  பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் கல்லூரி மாணவர்களுக்காக 15 விடுதிகள், மாணவியர்களுக்காக 10 விடுதிகள் என 25 கல்லூரி விடுதிகளும், இஸ்லாமிய சிறுபான்மையின பள்ளி  மாணவியருக்காக 3 விடுதிகளும் ஆக மொத்தம் புதியதாக 28 விடுதிகள் இந்த நிதியாண்டில் தொடங்கிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். ஒரு விடுதிக்கு 100 மாணவ, மாணவியர் என 28 விடுதிகளில் 2800 மாணவ மாணவியர் அனுமதிக்கப்படுவர்.

மேலும்,  இந்த விடுதிகளை பராமரிக்க ஒரு விடுதிக்கு பட்டதாரி காப்பாளர்/காப்பாளினி பணியிடம் 1, சமையலர் பணியிடம் 2,  காவலர்/ஏவலர் பணியிடம் 1 என்ற வகையில் 4 பணியிடங்கள் வீதம் மொத்தம் 28 விடுதிகளுக்கு 112 பணியிடங்களை தோற்றுவிக்க முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இதனால் அரசுக்கு தொடரும் செலவினமாக 1 கோடியே 43 லட்சத்து 23 ஆயிரத்து 326 ரூபாயும், தொடரா செலவினமாக 58 லட்சத்து 51 ஆயிரத்து 900 ரூபாயும் ஆக மொத்தம் 2 கோடியே 1 லட்சத்து 75 ஆயிரத்து 226 ரூபாய் செலவு ஏற்படும்.

மேற்கூறிய அரசின் நடவடிக்கைகள் மூலம், ஆதிதிராவிடர்,  பழங்குடியினர்,  பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் இஸ்லாமிய மாணவ மாணவியர் பயன் பெறுவார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்