முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணம் வைத்து விளையாடினால் ரம்மியும், சூதாட்டமே

சனிக்கிழமை, 24 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, மார்ச். 24 - பணம் வைத்து விளையாடினால் ரம்மி விளையாட்டும், சூதாட்டமே: என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. கடந்த 10.8.11 அன்று பாண்டிபஜார் போலீசார் சென்னை தியாகராயநகரை சேர்ந்த மகாலட்சுமி கலாச்சார சங்கத்தில் ரெய்டு நடத்தினர். அப்போது மங்காத்தா என்ற சூதாட்டத்தை ஆடுவதாக கூறி 56 பேர் மீது வழக்கு தாக்கல் செய்தனர். 178 பண டோக்கன்களையும் கைப்பற்றினர். ஆனால் ரம்மி சீட்டு விளையாட்டு சூதாட்ட குற்றத்தின் கீழ் வராது. அது மனரீதியான திறமையை வளர்க்கும் விளையாட்டு. பந்தயமாக பணம் கட்டியோ, கட்டாமலோ ரம்மி விளையாடுவது சூதாட்டம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. எனவே ரம்மி சீட்டு விளையாடுவதை தடுக்கும் விதமாக போலீசார் தலையிடக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் எனக் கூறி மகாலட்சுமி கலாச்சார சங்கம் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் விசாரித்தார். அவர், `வாய்ப்பை ஏற்படுத்தி பணத்தை கொட்டிக் கொடுக்கும் மற்ற சீட்டுக்கட்டு ஆட்டங்களைப் போல், ரம்மி ஆட்டத்தை கருத முடியாது. பல திறமையான அம்சங்களை உள்ளடக்கிய ஆட்டம் என்று சுப்ரீம் கோர்ட்டு உட்பட பல கோர்ட்டுகளில் ரம்மி பற்றி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் ரம்மி ஆட்டம்தான் ஆடியிருந்தால் அதில் குற்றம் கண்டுபிடிக்க முடியாது. பணம் வைத்து ரம்மி ஆடியிருந்தாலும் அது குற்றமல்ல. எனவே மனுதாரர் சங்கத்தை தொந்தரவு செய்யக்கூடாது' என்று தீர்ப்பளித்தார். இந்த உத்தரவை எதிர்த்து போலீசார் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.முருகேசன், பி.பி.எஸ்.ஜனார்த்தன ராஜா ஆகியோர், திறமையை சோதிக்கும் அதே ரம்மி ஆட்டத்தை பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் பணம் வைத்து விளையாடும்போது, அதை ஒரு சூதாட்டத்துக்கான ஆட்டமாகவே கருத வேண்டும். அதுபோன்ற நிலையில் சூதாட்டத்தை தடுக்கும் நோக்கத்தில், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று சோதனை மேற்கொள்ளவும், பணம் வைத்து ரம்மி ஆடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு அதிகாரம் உண்டு என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்