முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போடியில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரி: முதல்வர்

சனிக்கிழமை, 24 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.24 - தேனி மாவட்டம் போடிநயக்கனூரில் அரசு பொறியியல் கல்லூரி ஒன்றினை புதிதாகத் தொடங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- செய்தி வெளியீடு தமிழகத்தை ஒரு அறிவுசார் மாநிலமாக உயர்த்த வேண்டும் என்பதே தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா தலைமையிலான அரசின் நோக்கமாகும். இந்த நோக்கத்தை எய்தும் வகையில்,  நலிவடைந்த பிரிவைச் சார்ந்த மாணவ மாணவியர்களுக்கும், கிராமப்புற மாணவ மாணவியர்களுக்கும் உயர் கல்வி வசதி மேலும் கிடைக்கச் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவ மாணவியர்கள் உயர் கல்விக்காக நகரங்களை நாடி வராமல் அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே கல்வி கற்பதற்கு ஏதுவாக தொழில் நுட்ப கல்லூரிகளை தமிழக அரசு தொடங்கி நடத்தி வருகிறது. இதனை மேலும் விரிவுபடுத்தும் பொருட்டு, தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில் அரசு பொறியியல் கல்லூரி ஒன்றினை புதியதாக தொடங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இப்பொறியியல் கல்லூரி போடிநாயக்கனூர் வட்டம், மேல் சொக்கநாதபுரத்தில் 2012​13 கல்வி ஆண்டு முதல் செயல்பட துவங்கும்.

இக்கல்லூரியில் முதலாம் ஆண்டில் அமைப்பியல் பிரிவில் 60 மாணவர்கள்,  இயந்திரவியல் பிரிவில் 60 மாணவர்கள், மின்னியல் மற்றும் மின்னணுவியல் பிரிவில் 60 மாணவர்கள், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பிரிவில் 60 மாணவர்கள், கணினி அறிவியல் பிரிவில் 60 மாணவர்கள் என 300 மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இக்கல்லூரிக்கு தேவையான கட்டடங்கள், தேவையான உபகரணங்கள், கணினிகள் வாங்குதல், அறைகலன்கள், ஆசிரியர் நியமனம், மாணவ மாணவியர் விடுதி, நூலகம், ஆய்வகக் கூடங்கள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகளை நிறைவேற்ற 93 கோடியே 64 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கை, தென் மாவட்டங்களில் உள்ள மாணவ மாணவியர் தொழில் நுட்பக் கல்வி பயில பேறுதவியாக இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்