முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிக்கிம் குழு உயர்கல்வித்துறை அமைச்சருடன் சந்திப்பு

சனிக்கிழமை, 24 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, மார்ச். 24 - சிக்கிம் பாராளுமன்ற உறுப்பினர் ராய் தலைமையிலான அதிகாரிகள் குழு தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பனை சந்தித்து தமிழக அரசு உயர்கல்விக்கு அளித்து வரும் முன்னுரிமை குறித்து ஆலோசனை நடத்தியது. சிக்கிம் பாராளுமன்ற உறுப்பினர் ராய் தலைமையிலான ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டக்குழு 23.03.2012 அன்று காலை 11.00 மணியளவில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் மற்றும் உயர்கல்வித்துறை கூடுதல் முதன்மைச் செயலர் முனைவர் ஸ்ரீதர் ஆகியோரை சந்தித்தனர். குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை  உயர்கல்வித்துறை அமைச்சர் வரவேற்று உரை நிகழ்த்தினார். அவ்வுரையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அரசு உயர்கல்விக்கு அளித்துவரும் முன்னுரிமை குறித்தும், கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு எடுத்துவரும் நிலைகள் குறித்தும், கட்டமைப்பு வசதிகளை உயர்த்துவது குறித்தும் எடுத்துக் கூறினார். உயர்கல்வித்துறையை ஆற்றல்சார் மையமாக உருவாக்க முதல்வர் எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும் எடுத்துக் கூறினார். 

தமிழக மாணவர்கள் கணினியின் வழி உலக அறிவு பெற வேண்டும் என்ற அடிப்படையில், சுமார் 10 இலட்சம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கி வருவது குறித்தும், அதன் செயல்முறை குறித்தும் விளக்கினார். இறுதியாக,  தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி, உயர்கல்வியின் வளர்ச்சிக்கு எடுத்துவரும் அனைத்து வழிவகைகளையும் எடுத்துக் கூறி குழு உறுப்பினர்களை வரவேற்றார். தமிழகத்தில் உயர்கல்வியை வளர்க்க செயல்பட்டுவரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், நடைமுறைகள் குறித்தும் விளக்கமாக அறிந்துகொள்வதற்காக இக்குழு இங்கு வந்துள்ளது. அதுபற்றி  எடுத்துக்கூறினால் அதை அம்மாநிலத்தில் எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து முடிவெடுக்க ஏதுவாக இருக்கும் என்று குழுவின் தலைவர் ராய், கேட்டுக் கொண்டார்.

உயர்கல்வித்துறை கூடுதல் முதன்மைச் செயலர் முனைவர் ஸ்ரீதர் உரையாற்றுகையில், தமிழகம் உயர்கல்வியில் அடைந்துள்ள வளர்ச்சி குறித்தும், கல்வியின் தரம் குறித்தும், ஆற்றல்சார் மையமாக உயர்கல்வி வளர்ந்துவருவது குறித்தும் கூறினார். உயர்மட்டக் குழுவிற்கு தேவையான அனைத்து விவரங்களையும் புள்ளி விவரங்களுடன் எடுத்துக் கூறினார். வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் ஜி.இ.ஆர். விகிதத்தை 25 விழுக்காடாக உயர்த்துவதற்கு எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும் எடுத்துக் கூறினார்.  தமிழக முதல்வர் வெளியிட்ட விஷன் 2023 -யில் கொள்கை விளக்கை குறிப்பேடு உயர்கல்விக்கு கொடுக்கப்பட்டுள்ள முன்னுரிமை குறித்தும் விளக்கமாக எடுத்துக் கூறினார். தமிழகத்தில் குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி வழங்கி வருவதையும் புள்ளி விவரங்களோடு கூறினார். வருடத்திற்கு ஒரு முறை தொழில்துறை சார்ந்தவர்களும் கல்வித்துறை சார்ந்தவர்களும் கூடி விவாதித்து உயர்கல்வியை வளர்க்கும் உத்திகளை வகுக்க வேண்டும் என்ற தமிழக முதல்வரின் கருத்துக்களை குழு முன் விளக்கி கூறினார்.

பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி குறித்தும், அதன் நடைமுறை பணிகள் குறித்தும், கல்வியின் தரத்தை உயர்த்த பல்கலைக்கழகங்கள் எடுத்துவரும் நிலைகள் குறித்தும் விளக்கி கூறினார். பல்கலைக்கழகங்களில் தொலைதூர கல்வி செயல்படுவது குறித்தும், சமூக கல்லூரி உருவாக்கி செயல்படும் விதம் குறித்தும், அதன்மூலம் மாணவர்கள் அடைந்துவரும் பலன் குறித்தும் கூறினார். தமிழக அரசும், பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் ஊக்குவிப்பதற்காகவும் பல்வேறு பல்கலைக்கழங்களோடு, பல்வேறு நாடுகளோடு செய்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்தும் கூறினார்.

தமிழக அரசின் முதன்மை நோக்கமான உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்க எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும் கூறினார். பாடத்திட்ட முறைமையை வளர்க்க 10 பல்கலைக்கழகங்களை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் ரூ.1 கோடி வழங்குவது குறித்தும், அறிவுசார் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக ரூ.2 கோடி ஒதுக்கியிருப்பது குறித்தும், மொழி ஆய்வுக்கூடம் உருவாக்குவதற்காக ரூ.2 கோடி ஒதுக்கியுள்ளது குறித்தும் விளக்கமாக கூறினார்.

பள்ளிக் கல்வித் துறையும், கல்லூரிக் கல்வித்துறையும் இணைந்து எவ்வாறு கல்வியின் வளர்ச்சியில் பங்கு கொள்கிறது என்பதையும் கூறினார்.

அனைத்தையும் உன்னிப்பாக கேட்டறிந்த குழு உறுப்பினர்கள் சில ஐயப்பாடுகளையும் கேட்டறிந்து தெளிவுபெற்றனர்.

கடைசியாக குழுவின் தலைவர் ராய், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரிடம் ஒரு வேண்டுகோளை வைத்தார். வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்த குறிப்பாக சிக்கிமில் வாழும் மாணவர்கள் உயர்கல்வி பெற தமிழக அரசு சிறப்பு உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும், அதற்காக சிக்கிம் முதல்வரிடமிருந்து தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்புவதாகவும் அதை பரிசீலித்து தக்க உதவி வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழக அரசு உயர்கல்வியில் எடுத்து வரும் முயற்சிகளையும், நடைமுறைப்படுத்திவரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்து பாராட்டினார்.  குறிப்பாக சுமார் பத்து இலட்சம் மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினி எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதை ஆச்சரியத்தோடும், வியப்போடும் கேட்டறிந்து பாராட்டினார்.  மேலும், தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சரையும் உயர்கல்வித்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களையும், தங்கள் மாநிலத்திற்கு வருகை புரிந்து உயர்கல்வியின் வளர்ச்சிக்கு ஆலோசனைகளை வழங்கி உதவி புரியவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.  இறுதியாக குழுவின் தலைவர் ராய் தமிழக முதல்வர் உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வித் துறை கூடுதல் செயலர் ஆகியோருக்கும் சிக்கிம் அரசு சார்பாகவும் குழு சார்பாகவும் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்