முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மறுவாழ்வு இல்லங்களை புதுப்பிக்க நிதிஒதுக்கீடு

ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.25 - 3 அரசு மறுவாழ்வு இல்லங்களை புதுப்பிக்க ரூ.5 கோடியே 21 லட்சத்து 82 ஆயிரம் ஒதுக்கீடு செய்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அரசு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மாற்றுத் திறனாளிகளை சமுதாயத்தில் ஒரு அங்கமாக அனைவரும் ஏற்கவும், சமுதாய வளர்ச்சியில் மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்பதற்கு சம வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கும், அவர்களின் முழுபங்கேற்பை உறுதி செய்வதற்கும் உரிய பல்வேறு திட்டங்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

தற்போது 6 வயதுக்குட்பட்ட பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் முதல் கட்டமாக வேலூர், திருவண்ணாமலை, மதுரை, கிருஷ்ணகிரி மற்றும் திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.  இம்மையங்களில் சிறப்பு நிபுணர்களைக் கொண்டு தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது.  

இந்த 5 பயிற்சி மையங்களை தொடர்ந்து நடத்திட 2011​12 ஆண்டிற்காக 22 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும், மேலும் இதுபோன்ற பயிற்சி மையங்களை சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல்,  தேனி, திருச்சிராப்பள்ளி, ஈடு, கன்னியமாகுமரி,  நாமக்கல், ராமநாதபுரம், கடலூர், தருமபுரி, காஞ்சிபுரம், கரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், சேலம், சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய 20 மாவட்டங்களில் புதியதாக தோற்றுவிப்பதற்காக, மையம் ஒன்றுக்கு 1 லட்சத்து 71 ஆயிரத்து 500 ரூபாய் வீதம்,  34 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும், ஆக மொத்தம் பார்வையற்ற குழந்தைகள் நலனுக்காக 57 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அனுமதித்து தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது மட்டுமல்லாமல், பார்வையற்ற குழந்தைகளை ஆரம்பநிலை பயிற்சி மையத்திற்கு அழைத்துவர மற்றும் திரும்ப அழைத்துச் செல்ல அக்குழந்தைகளின் பாதுகாவலர்களுக்கு நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் பயணச் செலவுத் தொகையினை 20 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.   இரண்டு கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தற்பொழுது இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட மின்சார ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்கள், பணிபுரியும்/சுய தொழில் புரியும் மாற்றுத் திறனாளிகள், மாற்றுத் திறனாளிக்கான பெட்ரோல்  ஸ்கூட்டர்கள் வழங்கிடக் கோரி விண்ணப்பித்துள்ளனர்.  இதனை கனிவுடன் பரிசீலித்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  இந்த ஆண்டு 2 கோடி ரூபாய் செலவில் 400 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்க உத்தரவிட்டுள்ளார்.  இதில் மாவட்டங்களில் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு முன்னுரிமை அளித்து ஒதுக்கீடு செய்யப்படும். எஞ்சிய ஸ்கூட்டர்கள் பணிபுரிபவர்கள் மற்றும் சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும்.

செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவ மாணவியருக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் காதொலிக் கருவிகளுக்குப் பதிலாக 10,000 ரூபாய் மதிப்புள்ள அதிக திறன்வாய்ந்த காதுக்கு பின்பகுதியில் அணியும் காதொலிக் கருவிகள் வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டு 6 ஆம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் 1,000 மாணவ, மாணவியருக்கு இந்த திறன் மிக்க காதொலிக் கருவிகள் வழங்கப்படும். இதற்காக அரசுக்கு 1 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

தமிழ்நாட்டில் தற்பொழுது 12 மாவட்டங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் உணவு மற்றும் தங்கும் விடுதி வசதியுடன் கூடிய தொழிற்பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.   தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  இத்திட்டத்தினை ஏனைய 20 மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.   இதன் மூலம் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாற்றுத் திறனாளிகள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் உணவு மற்றும் தங்கும் வசதியுடன் கூடிய தொழிற் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும். ஒரு மாவட்டத்திற்கு 75  மாற்றுத் திறனாளிகள் வீதம் 2400 மாற்றுத் திறனாளிகளுக்கு இப்பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.  இதற்காக 74 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மாற்றுத் திறனாளிகள் தங்கள் வாழ்க்கைத் தரத்தினையும், பொருளாதார நிலைமையையும் மேம்படுத்துவதற்காக தொடங்கும் தொழில்களுக்கு மத்திய கூட்டுறவு வங்கிகள் முலம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகின்றன.  இதுவரை இந்த ஆண்டு 10 கோடி ரூபாய் வரை மாற்றுத் திறனாளிகளுக்கு கடன் தொகை வழங்கப்பட்டுள்ளன.  மாற்றுத் திறனாளிகள் அதிகமான அளவில் முன்வந்து வங்கிகள் மூலம் கடன் பெற்று,   சுயமாக தொழில் தொடங்கி வாழ்வில் முன்னேற்றம் அடைவதை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகைக்காக வசூலிக்கப்படும் வட்டியினை முழுவதுமாக அரசே ஏற்றுக் கொள்ள  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் தொழுநோயாளிகளை பராமரிக்கவும், அவர்களது நோயை குணப்படுத்தவும், அரசு 10 இடங்களில் மறு வாழ்வு இல்லங்களை அமைத்து பராமரித்து வருகிறது.  இந்த இல்லங்கள் 38 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாலும், அவைகள் மோசமான நிலையில் இருப்பதாலும், அங்கு வசிக்கும் இல்லவாசிகள் மிகவும் சிரமமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.   எனவே இந்த இல்லங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்ட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது.  இதன் முதற்கட்டமாக பரனூர் அரசு மறுவாழ்வு இல்லத்தை, 1 கோடியே 61 லட்சத்து 82 ஆயிரம்  ரூபாய் செலவிலும் யா.புதுப்பட்டி அரசு மறுவாழ்வு இல்லத்தை, 1 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவிலும், புதுக்கோட்டை அரசு மறுவாழ்வு இல்லத்தை 1 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவிலும் ஆக மொத்தம் 5 கோடியே 21 லட்சத்து 82 ஆயிரம் செலவில் 3 அரசு மறு வாழ்வு இல்லங்களை புதுப்பிக்க தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.      மேற்கூறிய அரசின் இந்நடவடிக்கைகள், மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் ஒரு நல்ல மறுமலர்ச்சியினை ஏற்படுத்தும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்