முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால்: அனைத்துக்கட்சி கூட்டம் தோல்வி

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் 24 - லோக்பால் மசோதா குறித்து பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது. கடந்த குளிர்காலக் கூட்டத்தொடரின்போது பாராளுமன்றத்தின் லோக்சபையில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் ராஜ்யசபையில் இந்த லோக்பால் மசோதா நிறைவேறவில்லை. இரு சபைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்தான் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்க முடியும். ஆனால் கடந்த குளிர்கால கூட்டத்தொடரின்போது இது நடைபெறவில்லை. எனவே இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலாவது இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிவிட வேண்டும் என்றும் மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக டெல்லியில் நேற்று இந்த மசோதா குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசனை நடத்தினார். நேற்று காலை 11 மணிக்கு துவங்கிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில்  மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோரும் கலந்துகொண்டனர். பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும் ராஜ்யசபை எதிர்க்கட்சி தலைவருமான அருண் ஜேட்லி, லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், சமாஜ்வாடி கட்சியின் தலைவர் ராம் கோபால் யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபை உறுப்பினர் தாரிக் அன்வர் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். 

இந்த ஆலோசனைக் கூட்டம் பிரதமர் இல்லத்தில் நடைபெற்றது. கடந்த குளிர்கால கூட்டத்தொடரின்போது ராஜ்யசபையில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த லோக்பால் மசோதாவில் 97 திருத்தங்களை பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தன. அதனால் அப்போது அந்த லோக்பால் மசோதா ராஜ்யசபையில் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நேற்று நடந்த இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமித்த கருத்து எதுவும் ஏற்படவில்லை. இதனால் இந்த கூட்டம் தோல்வியில் முடிந்ததாக கூட்டத்தில் கலந்துகொண்ட அரசியல் கட்சி தலைவர்கள் செய்தியாளர்களிடம் பின்னர் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்