முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனி தெலுங்கானா: பாராளுமன்றத்தில் 2-வது நாளாக கூச்சல்

புதன்கிழமை, 28 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,மார்ச்.28 - தனி தெலுங்கானா விவகாரம் நேற்று இரண்டாவது நாளாக பாராளுமன்றத்தை உலுக்கி எடுத்தது. இதனால் லோக்சபை நேற்று இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலத்தை விரைவில் உருவாக்க வலியுறுத்தி நேற்று லோக்சபையில் இரண்டாவது நாளாக தெலுங்கானா ஆதரவு உறுப்பினர்கள் கோரிகை விடுத்தனர். லோக்சபை நேற்று காலையில் 11 மணிக்கு கூடியதும் கேள்வி நேரமும் அதற்கு பின்னரும் பல நிகழ்ச்சிகள் எடுத்தக்கொள்ளப்பட இருந்தது. ஆனால் சபை தொடங்கியதும் தெலுங்கானா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எழுந்து தனி தெலுங்கானா மாநிலத்தை விரைவில் உருவாக்க வேண்டும் என்று கோரினர். தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி  மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் இந்த பிரச்சினையை எழுப்பினர். அதோடுமட்டுமல்லாது கோஷங்களையும் எழுப்பினர். அப்போது சபையில் இருந்த சபாநாயகர் மீரா குமார், அவை குறிப்புகளை எடுத்து பார்க்க தொடங்கினார். அதற்குள் இந்த இரண்டு கட்சி உறுப்பினர்களும் சபையின் மத்திய பகுதிக்கு சென்று கோஷமிட்டனர். மேலும் ஆந்திராவில் இருந்து பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்க வலியுறுத்தி ஒருவர் தீக்குளித்த செய்தி பத்திரிகையில் வெளிவந்திருப்பதை காட்டினர். உடனே உறுப்பினர்களை பார்த்து நீங்கள் முதலில் இருக்கைக்கு செல்லுங்கள். அங்கு நீங்கள் கூற நினைப்பதை கூறுங்கள் என்றார். ஆனால் அதை அவர்கள் கேட்காததால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. சபையை நடத்த முடியாததால் காலை 11 மணிக்கு முதல் தடவையாக லோக்சபையை மீரா குமார் ஒத்திவைத்தார். அதன் பின்னர் பகல் 12 மணிக்கு மீண்டும் சபை கூடியது. சபை கூடியதும் அதே பிரச்சினையை அந்த உறுப்பினர்கள் எழுப்பி கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். அதனால் மீண்டும் பகல் 2 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்