முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொண்டர்களால் சூறையாடப்பட்ட சத்தியமூர்த்தி பவன்

வெள்ளிக்கிழமை, 25 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச் 25 - காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் குளறுபடி காரணமாக தொண்டர்கள் ஆவேசமடைந்துள்ளனர். சென்னை சத்தியமூர்த்தி பவனை தொண்டர்கள் முற்றுகையிட்டு சூறையாடினர். தங்கபாலு பேனர் கிழிக்கப்பட்டது. தங்கபாலு கொடும்பாவியை பாடை கட்டி கொண்டு வந்து கொளுத்தினர். 

தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நீண்ட இழுபறிக்கு பின் நேற்று வெளியிடப்பட்டது. இதில் தங்கபாலுவுக்கு ஆதரவானவர்களுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது என்ற கொதிப்பு எழுந்துள்ளது. தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி தங்கபாலுவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வாங்கி கொடுத்தது மயிலாப்பூர் பகுதி காங்கிரசாரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. 63 இடங்களை ஒதுக்கியது. அந்த இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை இறுதிபடுத்தும் பணியில் சிதம்பரம், வாசன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் தங்கபாலு, வயலார் ரவி, ஆஸ்கர் பெர்னான்டஸ், குலாம் நபி ஆசாத் ஆகியோர் கொண்ட குழுவினர் வேட்பாளர்களை தேர்வு செய்தனர். இதில் ஏற்கனவே உள்ள எம்.எல்.ஏ.க்கள் 35 பேரில் 29 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் வாசன் கோஷ்டியினர் என்பதால்  புதிய வேட்பாளர் பட்டியலில் வாசன் கோஷ்டியினர் 21 இடங்களை பெற்றனர். தங்கபாலு கோஷ்டிக்கு 11 இடங்களும், இளைஞர் காங்கிரசாருக்கு 10 இடங்களும், சிதம்பரம் கோஷ்டிக்கு 6 முதல் 8 இடங்களும், கிருஷ்ணசாமி கோஷ்டிக்கு 2 இடமும், மணிசங்கர் அய்யருக்கு 2 இடங்களும், இ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜெயந்தி நடராஜன் கோஷ்டிகளுக்கு தலா ஒரு இடமும், எந்த கோஷ்டியும் சேராத திருநாவுக்கரசர், யசோதா, வசந்தகுமார் ஆகியோர் தலா ஒரு இடத்தையும் பெற்றுள்ளனர். 

தங்கபாலு தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் தொகுதியிலேயே அறிமுகமில்லாதவர்களுக்கெல்லாம்  சீட்டு வாங்கி கொடுத்துள்ளதாக பரவலாக தொண்டர்களிடையே அதிருப்தி கிளம்பி உள்ளதால் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை தொண்டர்கள் முற்றுகையிட்டு சூறையாடினர். வாசலில் பெரிதாக வைக்கப்பட்டுள்ள தங்கபாலுவின் பேனரை கிழித்து எறிந்தனர். தங்கபாலுவின் உருவப் பொம்மையை எரிப்பதற்காக தொண்டர்கள் ஆட்டோவில் எடுத்து வந்தனர்.  சத்தியமூர்த்திபவனுக்குள் நுழைந்த ஆட்டோவை போலீசார் உள்ளே புகுந்து கொடும்பாவியை பறிமுதல் செய்து ஆட்டோ டிரைவரை கைது செய்ய முயன்றனர். உடனே அங்கு திரண்டிருந்த 50-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஆவேசமாக ஓடிவந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடமே பதட்டமானது. சத்தியமூர்த்தி பவன் காங்கிரஸ் இடம், இதற்குள் போலீசார் எப்படி நுழையலாம், நாங்கள் சாலையில் கொடும்பாவி கொளுத்தினால்தான் நீங்கள் கேட்கலாம், இது எங்கள் சொத்து, வெளியே செல்லுங்கள் என்று கூறினர். 

இதனால் போலீசார் கொடும்பாவியை திரும்ப  கொடுத்துவிட்டு ஆட்டோ டிரைவரை விட்டு விட்டு வெளியே சென்று விட்டனர். பின்னர் தொண்டர்கள் தங்கபாலுவின் கொடும்பாவியை கொளுத்தினர். காலால் மிதித்தும், செருப்பால் அடித்தும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். சிலர் தங்கபாலுவிற்கு எதிராக ஆவேசமாக கோஷமிட்டனர். சேவாதள, மகளிர், ஐ.என்.டி.யூ.சி. அமைப்பினர் தங்களுக்கு வாய்ப்பளிக்காததை கண்டித்து கோஷமிட்டனர். மதியம் 3 மணியளவில் 31 வது வட்ட காங்கிரஸ் கவுன்சிலர் செங்கை செல்லப்பா தலைமையில் தொண்டர்கள் சத்தியமூர்த்தி பவனுக்குள் ஆவேசமாக நுழைந்தனர். தங்கபாலுவிற்கு எதிராக கோஷமிட்டப்படி சத்தியமூர்த்தி பவனில் உள்ள சேர்களை தூக்கி அங்குள்ள வரவேற்பறை கண்ணாடிகளை நோக்கி வீசினர். இதனால் வரவேற்பறை கண்ணாடி உடைந்து நொறுங்கியது. 

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய செங்கை செல்லப்பா, தங்கபாலு தங்களுக்கு வேண்டியவர்களுக்கு சீட்டு வாங்கி கொடுத்துள்ளார். திரு.வி.க.நகரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் நடேசன் கடந்த ஆண்டு கிட்னி திருட்டு வழக்கு சம்பந்தப்பட்டவர். தொகுதியில் யாரென்றே தெரியாத நபருக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். 

இதேபோல மயிலாப்பூரில் தங்கபாலுவின் மனைவிக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு சம்பந்தமில்லாத ஜெயந்தியை நியமிப்பதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று காலை கிரீம்ஸ் சாலையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜெயந்தி வேட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  காங்கிரஸ் இளைஞர்கள், மகளிர், சேவாதள தொண்டர்கள் நூற்றுக்கணக்கில் குவிந்திருந்தனர். போலீசாரும் ஏராளமாக குவிக்கப்பட்டிருந்தனர். தொண்டர்கள் ஆவேசமாக கோஷமிட்டபடி இருந்தனர்.  

மயிலை காங்கிரஸ் நிர்வாகி விஜயபாஸ்கர் தலைமையில் தங்கபாலுவின் உருவ பொம்மையை பாடை கட்டி எடுத்து வந்து நடுரோட்டில் வைத்து கொளுத்தினர்.  போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்பு ஜெயந்தி தங்கபாலு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது தொண்டர்கள் ஆவேச கோஷமிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்