முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

16-ம் தேதி கொழும்பு செல்கிறது இந்திய குழு

சனிக்கிழமை, 31 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.31 - இலங்கையில் நடந்த இறுதிப்போருக்கு பின்னர் அங்கு தற்போது வாழும் தமிழர்களின் நிலைமையை ஆய்வு செய்வதற்காக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் இந்திய குழு வருகின்ற 21-ம் தேதி கொழும்பு செல்கிறது.  இலங்கையில் உரிமைக்காக போராடிய ஈழத்தமிழர்களை சிங்கள ராணுவத்தினரால் வெல்ல முடியவில்லை. அதனால் இறுதிக்கட்டமாக சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ரகசிய உதவியால் தமிழர் பகுதியில் சிங்கள ராணுவத்தினர் அதிபர் ராஜபக்சேயின் உத்தரவால் ரசாயன குண்டுகளை வீசி அப்பாவி தமிழர்களையும் விடுதலைப்புலிகளையும் கொன்றனர். விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் மகன் உள்பட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை ஈவு இரக்கமின்றி சிங்கள ராணுவத்தினர் சித்ரவதை செய்து கொன்றனர். இது போர்க்குற்றமாகும். அதனால் அதிபர் ராஜபக்சே மீது போர்க்குற்றவாளி தீர்மானம் ஒன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கமிஷனில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்ற திரிசங்கு நிலையில் இருந்த மத்திய அரசு,தமிழக அரசின் கடும் எதிர்ப்பை கருத்தில் கொண்டு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்தது.

இலங்கையில் போருக்கு பின்னர் அந்தநாட்டு வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் வாழும் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணிகளை இலங்கை அரசு சரிவர செய்யவில்லை. மேலும் தமிழர்களுக்கு வீடுகட்டி தரும் இந்திய திட்டமும் எந்த அளவுக்கு இலங்கை அரசு செயல்படுத்தி வருகிறது என்பதும் தெரியவில்லை. இதனால் தமிழர்கள் பெரும் துயரத்திற்கும் கஷ்டத்திற்கும் ஆளாகி இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் பாராளுமன்ற லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் எம்.பி. தலைமையில் இந்திய குழு ஒன்று வருகின்ற 16-ம் தேதி இலங்கை செல்கிறது. இந்த குழு 6 நாட்கள் இலங்கையில் குறிப்பாக தமிழர்கள் பகுதிக்கு செல்கிறது. இங்கு மறுவாழ்வு பணிகளை ஆய்வு செய்வதோடு போருக்கு பின் தமிழர்களின் நிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்தும் ஆய்வு செய்கிறது. இந்த ஆய்வுக்கு பின்னர் ஒரு அறிக்கையை மத்திய அரசுக்கு அந்த குழு தாக்கல் செய்யும். இலங்கைக்கு வரும் இந்திய குழுவுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அதிபர் ராஜபக்சேவை மத்திய அரசு கேட்டுக்கொண்டியிருப்பதாக தெரிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்