முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

வெள்ளிக்கிழமை, 25 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, மார்ச் 25 - மதுரையில் நேற்று அ.தி.மு.க., தே.மு.தி.க., தி.மு.க. மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி கடந்த 19 ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில்  இதுவரை 54 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று வேட்புமனு தாக்கலில் பரபரப்பு ஏற்பட்டது. ஏனென்றால் நேற்று ஒரேநாளில் மட்டும் அ.தி.மு.க., தே.மு.தி.க., தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் 41 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதனால் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் கே.ராஜு மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி ரவீந்திரனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக முன்னாள் மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா மனு தாக்கல் செய்தார்.  அவருடன் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் பெ.சாலைமுத்து, மாவட்ட அவைத்தலைவர் புதூர் கே.துரைப்பாண்டியன், மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ஜெ.ராஜா, பகுதிக் கழக செயலாளர் பூமிபாலகன், விளாங்குடி கு.திரவியம், பேரவை துணைத் தலைவர் புதூர் ஐ.அபுதாஹிர், துணைச் செயலாளர் வெற்றிவேல் ஆகியோர் உடன் சென்றனர். 

மதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. நேற்று மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வடக்கு மண்டலத்தில் தேர்தல் அதிகாரி முருகேசனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக மாவட்ட அவைத்தலைவர் புதூர் கே.துரைப்பாண்டியன் வேட்புமனு தாக்கல் செய்தார்.  அவருடன் முன்னாள் எம்.பி. எஸ்.டி.கே.ஜக்கையன், எம்.ஜி.ஆர்.மன்ற மாநில துணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், பகுதிக் கழக செயலாளர்கள் அண்ணாநகர் முருகன், கே.ஜெயவேல், வடக்குத் தொகுதி கழகச் செயலாளர் ரவிச்சந்திரன், பாகச் செயலாளர் செல்லூர் பாலமுருகன், வடக்கு 1-ம் பகுதி எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கே.கே.நகர் மணி மற்றும் கூட்டணிக் கட்சியினர் திரளாக சென்றனர். 

மேலூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.சாமி நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி பால் ஜான்சுந்தரிடம் தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக மேலூர் தொகுதி கழகச் செயலாளர் பெரியபுள்ளான் மனுத்தாக்கல் செய்தார்.  அவருடன் மேலூர் நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் எம்.ஓ.சாகுல்ஹமீது மற்றும் அ.தி.மு.க. கூட்டணி பொறுப்பாளர்கள் சென்றனர். 

மதுரை கிழக்குத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கா.தமிழரசன் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி சுகுமாறனிடம் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக கிழக்கு தொகுதி கழகச் செயலாளர் மா.இளங்கோவன் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுத் தாக்கலின்போது அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் தக்கார் பாண்டி, முன்னாள் ஒன்றியச் செயலாளர் கள்ளந்திரி சேகர், ஆனையூர் நகர்க் கழக செயலாளர் சரவணன், வலது கம்யூனிஸ்ட் புறநகர் மாவட்ட செயலாளர் பி.காளிதாஸ், இடது கம்யூனிஸ்ட் புறநகர் மாவட்ட செயலாளர் சி.ராமகிருஷ்ணன், தே.மு.தி.க. பாலச்சந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. கூட்டணியின் தே.மு.தி.க. வேட்பாளர் ஏ.கே.டி.ராஜா மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

உசிலம்பட்டியில் அ.தி.மு.க.கூட்டணி பார்வர்ட் பிளாக் வேட்பாளர் பி.வி.கதிரவன் தேர்தல் அதிகாரி புகழேந்தியிடம் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் எம்.எல்.ஏ.க்கள் துரைராஜ், மகேந்திரன், தொகுதி செயலாளர் நீதிபதி, முன்னாள் எம்.எல்.ஏ. தவசி ஆகியோரும் சென்றனர். 

சோழவந்தான் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையா வாடிப்பட்டியில் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் இளஞ்செழியன் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

மதுரை கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் மூர்த்தி, மத்திய தொகுதி தி.மு.க. வேட்பாளர் கவுஸ்பாட்ஷா, மேற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் கோ.தளபதி ஆகியோரும் நேற்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony