முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி பதவி: பிரதான கட்சிகள் தீவிர ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஏப். - 3 - நாட்டின் அடுத்த ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பது தொடர்பாக பிரதான அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாமல் இருப்பதால் வேட்பாளர்களை முடிவு செய்வது கூட எளிதான காரியமாக இருக்காது. அதை விட முக்கியம் சமாஜ்வாடி, பகுஜன், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட மாநில கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தங்களுக்குள்ள பலத்தை முழுமையாக பயன்படுத்த கூடும் என்று தெரிகிறது.  மாநில கட்சிகள் தங்களுக்குள்ளாகவே ஒரு வேட்பாளரை தேர்வு செய்து நிறுத்தி வெற்றி பெற செய்ய முடியாது என்றாலும் தங்களுக்கு பிடிக்காத வேட்பாளரை பெரிய கட்சிகள் நிறுத்தி விடாமல் தடுக்க முடியும். இப்போதுள்ள நிலவரப்படி காங்கிரஸ் கட்சிக்கு 31 சதவீத வாக்குகளும், பா.ஜ.க.வுக்கு 24 சதவீத வாக்குகளும் உள்ளன. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1098.882. இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்குள்ள வாக்கு பலம் 40 சதவீதமாகும். தேசிய ஜனநாயக கூட்டணிக்குள்ள வாக்கு பலம் 30 சதவீதமாகும். திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, அ.தி.மு.க, பகுஜன் சமாஜ், பிஜூ ஜனதா தளம் ஆகிய மாநில கட்சிகளிடம் கணிசமான வாக்கு வலிமை இருக்கிறது. அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக மன்மோகன்சிங் நிறுத்தப்படலாம் என்று முதலில் பேசப்பட்டது. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக நிறுத்தக்கூடும் என்ற பேச்சும் அடிபடுகிறது. இதுவரை பா.ஜ.க.வை காங்கிரஸ் கட்சி அணுகி ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு தருமாறு கேட்கவில்லை. எனவே மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான அருண்ஜெட்லியிடம் இது குறித்து கேட்ட போது, வேட்பாளர் யார் என்பதை முதலில் முடிவு செய்து விட்டு பிறகு வந்து ஆதரவு கேட்கட்டும் என்றார். கருத்தொற்றுமை அடிப்படையில்தான் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறுகிறார் காங்கிரஸ் கட்சியின் பத்திரிகை தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி. காங்கிரஸ் தன்னுடைய ஆணவத்தை விட்டு கொடுத்து விட்டு எதிர்க்கட்சிகளுடன் பேசினால் தீர்வு நிச்சயம் என்கிறார் ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் சிவானந்ததிவாரி. இடதுசாரிகள் இதுவரை வாய் திறக்கவில்லை. 

ஜனாதிபதி துணை தலைவர் தேர்தலில் சிரோமணி அகாலிதள கட்சியின் பிரகாஷ்சிங் பாதல் நிறுத்தப்படவும் வாய்ப்புள்ளது என்கிறது ஒரு வட்டாரம். அ.தி.மு.க.வுக்குள்ள வாக்குகள் அடிப்படையில் அந்த கட்சிக்கு செல்வாக்கு கூடி வருகிறது. எனவே முதல்வர் ஜெயலலிதாவை தங்களது அணிக்கு ஆதரவாக செயல்பட கேட்டுக் கொள்வதற்காக இந்த வார இறுதியில் சென்னை வருகிறார் அருண் ஜெட்லி என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த முறை கருத்தொற்றுமை அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படாவிட்டால் கடைசி வரை முடிவு என்ன என்ற பரபரப்பு நிச்சயம் நிலவும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்