முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.தீவிரவாத தலைவரின் தலைக்கு ஒரு கோடி டாலர் பரிசு - அமெரிக்கா

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப்.- 4 - மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக இருந்து செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீது தலைக்கு ஒரு கோடி டாலர் பரிசு தரப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ம் தேதி மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் நடத்திய பயங்கர தாக்குதலில் 266 பேர் கொல்லப்பட்டனர். இந்த 10 தீவிரவாதிகளில் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற ஒரேஒரு தீவிரவாதி மட்டும் உயிரோடு பிடிபட்டான். அவனுக்கு இப்போது மரண தண்டனை  விதிக்கப்பட்டுள்ளது. மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் நிறுவன தலைவரும் ஜமாத் உத் தவா இயக்கத்தின் தலைவருமான ஹபீஸ் சயீது மூளையாக இருந்து செயல்பட்டதாக இந்தியா குற்றம் சாட்டியது. இது தொடர்பாக ஹபீஸ் சயீது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பாகிஸ்தானை வற்புறுத்தி வந்தன. இதையடுத்து சையீது கைது செய்யப்பட்டு அவர் மீது பாகிஸ்தான் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த லாகூர் கோர்ட்டு சையீதுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்தது. அவரது தலைமையிலான ஜமாத் உத் தவா இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல என்றும், அந்த இயக்கம் சுதந்திரமாக இயங்கலாம் என்றும் லாகூர் கோர்ட்டு தனது தீர்ப்பில் கூறியிருந்தது. இதையடுத்து சயீது தற்போது பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடி வருகிறார்.  இந்த நிலையில் சயீதுவின் தலைக்கு ஒரு கோடி டாலர் பரிசு வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க துணை அமைச்சர் வென்டி ஷெர்மான் இந்த தகவலை இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார். மேலும் சயீதுவின் மைத்துனர் அப்துல் ரெஹ்மான் மாலிக்கியின் தலைக்கு 30 லட்சம் டாலர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒசாமா பின்லேடன் மறைவுக்கு பிறகு அல்கொய்தா இயக்கத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அய்மான் அல் ஜவாஹிரியின் தலைக்கு 2.5 கோடி டாலர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  இதேபோல தலிபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் முல்லா உமரின் தலைக்கும் ஒரு கோடி டாலர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரான், ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள அல்கொய்தா தலைவர்களின் தலைகளுக்கும் தலா ஒரு கோடி டாலர் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை பிடிப்பதற்கு துப்புக் கொடுப்பவர்களுக்கு இந்த பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்