முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வினர் பதுக்கி வைத்திருந்த டி.வி.- சிலிண்டர்கள் பறிமுதல்

சனிக்கிழமை, 26 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

 

திருவண்ணாமலை, மார்ச்.26 -  திருவண்ணாமலையில் இலவச டி.வி., சிலிண்டர், வேட்டி சேலைகளை வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் வழங்கியபோது பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அதை கண்காணிக்க ஒரு தாசில்தார், ஒரு சப் இன்ஸ்பெக்டர், 2 போலீசார் கொண்ட பறக்கும் படை அமைக்கப் பட்டு உள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் வாகன சோதனை நடத்தி பணம் மற்றும் புடவைகளை பறிமுதல் செய்து வருகின்றனர். திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளராக அமைச்சர் எ.வ.வேலு நிறுத்தப் பட்டு உள்ளார். இதையொட்டி தி.மு.க.வினர் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலையில் திருக்கோவிலூர் ரோட்டில் வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் இலவச டி.வி. சமையல் எரிவாயு சிலிண்டர், புடவைகள் வழங்குவதாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து பறக்கும் படை தாசில்தார் வேலாயுதம், சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு வாக்காளர்களுக்கு இலவச டி.வி., சிலிண்டர், புடவைகள் வழங்கிக் கொண்டு இருந்தனர். அதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அதை பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் திருக்கோவிலூர் ரோட்டில் உள்ள ஒரு டீக்கடைக்குள் புகுந்தனர். பறக்கும் படையைக் கண்டதும் டீக்கடை ஊழியர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பறக்கும் படையினர் உள்ளே சென்று பார்த்தபோது ஒரு அறையில் பெட்டி பெட்டியாக இலவச கலர் டி.வி.க்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அது தவிர முதல்வர் கருணாநிதி படம், அரசு முத்திரை அச்சிடப்பட்ட இலவச காஸ் அடுப்புகள் அடுக்கி வைக்கப் பட்டு இருந்தன. இதற்கு தேவையான ரெகுலேட்டர், ரப்பர் டியூப்கள் அங்கே இருந்தன. தி.மு.க. கரை வேட்டிகள் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இது தவிர அங்குள்ள முதல் மாடியில் உள்ள ஒரு அறையிலும் இதேபோல் ஏராளமான அரசு முத்திரையிடப்பட்ட ஸ்டவ் அடுப்புகள், காஸ் சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அரசு மூலம் வழங்க வேண்டிய இலவச டி.வி.க்கள், அடுப்புகள், சிலிண்டர்கள் எப்படி தனியார் இடத்தில் பதுக்கப் பட்டது என்பது கேள்விக்குறியாக உள்ளது. அரசு சார்பில் நலத்திட்ட உதவிகளாக பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய இவற்றை சம்பந்தப் பட்ட அரசு துறை அலுவலகங்களிலேயே வைத்திருக்க வேண்டும். எனவே அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் இந்தப் பொருட்களை தனிநபர் இடத்தில் பதுக்கி இருக்க வாய்ப்பே இல்லை என எதிர் கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டு நிலவுகிறது. இதனால் உடந்தையாக இருந்த அதிகாரிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony