முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

14 ஆண்டுகள் நிறைவு: சோனியா காந்திக்கு ஷீலா தீட்சித் வாழ்த்து

புதன்கிழமை, 4 ஏப்ரல் 2012      அரசியல்
Image Unavailable

புது டெல்லி, ஏப். - 5 - சோனியா காந்தி காங்கிரஸ் கட்சித் தலைவராக பொறுப்பேற்று 14 ஆண்டுகள் முடிந்துள்ளன. இதையடுத்து டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  ராஜீவ் காந்தி கடந்த 1991 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அதன் பிறகு நரசிம்மராவ் காங்கிரஸ் தலைவரானார். அவருக்கு பிறகு சீதாராம் கேசரி காங்கிரஸ் தலைவரானார். ஆனால் 1996 தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால் சீதாராம் கேசரிக்கு எதிராக மாதவராய் சிந்தியா, மம்தா பானர்ஜி, அர்ஜூன்சிங், என்.டி. திவாரி, மூப்பனார், ப. சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தினர். காங்கிரஸ் பல துண்டுகளாக உடைந்தது. இதையடுத்து கேசரி பதவியில் இருந்து விலகினார். அதன் பின்னர் சோனியா காந்தியால் மட்டுமே காங்கிரசை காப்பாற்ற முடியும். நேரு, இந்திரா காந்தி பாரம்பரியத்தை காக்க சோனியா முன்வர வேண்டும் என்று கட்சி தலைவர்கள் சோனியாவை வலியுறுத்தினர். இதையடுத்து சோனியா காந்தி 1997 ல் கொல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார். இதையடுத்து 1998 ம் ஆண்டு அவர் காங்கிரஸ் தலைவரானார். அன்று முதல் இன்று வரை அவர் தலைவர் பதவியில் இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சி தலைவராகி 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் 2 முறை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியை மத்தியில் ஆட்சி பொறுப்பில் அமர்த்திய பெருமை அவருக்குண்டு. 1999 ம் ஆண்டு மே மாதம் சோனியா காந்திக்கு எதிராக சரத்பவார், பி.ஏ. சங்கா, தாரிக் அன்வர் ஆகியோர் போர்க்கொடி உயர்த்தினர். வெளிநாட்டில் பிறந்தவரான சோனியா பிரதமர் பதவிக்கு வரக் கூடாது என்று அவர்கள் குரல் கொடுத்தனர். பின்னர் நடந்த தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சோனியா, கடந்த 14 வருட கால பதவிக் காலத்தில் பல சவால்களை சந்தித்து வந்துள்ளார். இந்த நிலையில் டெல்லி முதல்வரும், சோனியாவுக்கு நெருக்கமானவருமான ஷீலாதீட்சித், கட்சித் தலைவராக 14 வருடங்கள் பூர்த்தியான நிலையில் சோனியாவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் கட்சியின் சந்தேஷ் பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் இந்த சாதனையை சோனியா நிகழ்த்தியுள்ளார். அதுவும் வேறொரு கலாச்சாரம் மற்றும் மொழி பின்புலத்தில் இருந்து வந்து இதை நிகழ்த்தியுள்ளார். அதற்கு சோனியாவின் விடாப்பிடித் தன்மையும், மன உறுதியுமே காரணம் என்று கூறியுள்ளார். 

----

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்