முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு தொலை நோக்குத்திட்டம் 2023 கற்பனை ஆவணம் அல்ல

புதன்கிழமை, 4 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப். - 5 - தமிழக சட்டப் பேரவையில் நேற்று 04.04.2012 அன்று தமிழ்நாடு தொலை நோக்குத் திட்டம் 2023 குறித்து உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பதில் அளித்துப் பேசியபோது கூறியதாவது: தற்போது நடைபெற்று வரும் 2012​-13 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதத்தில், தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் ​ 2023 குறித்தும் சில உறுப்பினர்கள் பேசியுள்ளார்கள்.  குறிப்பாக,  உறுப்பினர் பாண்டியராஜன், 2023 தொலைநோக்குத் திட்டத்தில், தற்போதைய தனி நபர் வருமானம் 73,278 என்று சொல்லப்பட்டு இருக்கிறது என்றும்; அடுத்த 10 வருடங்களில், மக்கள் தொகை வளர்ச்சி 15 சதவீதம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது என்றும்; எனவே, மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் ஒவ்வொரு வருடமும் 24 சதவீதத்திற்கு மேல் இருந்தால் தான், 2023 ஆம் ஆண்டு தனி நபர் வருமானம் நான்கரை லட்சத்தை தாண்ட முடியும் என்றும்; தொலைநோக்குத் திட்ட அறிக்கையில் சொல்லபட்டபடி 11 சதவீதம் வளர்ச்சி இருந்தால், தனி நபர் வருமானம் 2 லட்சத்தை தான் அடைய முடியும் என்றும் சொல்லியுள்ளார். அதைப் போல, சேவைத் துறையில் ஏற்கெனவே தமிழ்நாடு 12 முதல் 15 சதவீதம் வரை வளர்ந்து கொண்டிருக்கும் போது, அடுத்த 11 வருடங்களில் சேவைத் துறை வளர்ச்சி விகிதம் 11 சதவீதமாக குறைப்பது சாத்தியமற்றது என்றும் கூறியுள்ளார். அதே போன்று  உறுப்பினர்  செங்குட்டுவன், நிதி ஆலோசகர் ஒருவர் தெரிவித்த கருத்தாக, அடுத்த 11 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாயை கட்டுமானத் தொழில்களிலே தமிழ்நாடு அரசு முதலீடு செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும்; ஆனால், பட்ஜெட்டிலே கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 1000 கோடி ரூபாய் மட்டுமே, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும்; 11 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வேண்டுமெனில், 1 லட்சம் கோடி முதலீடு செய்ய வேண்டும் என்றும்; அரசின் பங்களிப்பு 25 சதவீதம் என்று எடுத்துக் கொண்டால் கூட, 25,000 கோடி ரூபாயாவது கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ஒதுக்கி இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதே போன்று, தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியும், இந்தத் தொலைநோக்குத் திட்டம் ஒரு கனவு தான் என்றும்; இல்லாத நிதியில் ஏராளமான திட்டங்கள் என்றும்; nullஜ்யத்தில் ஒரு ராஜ்ஜியம் என்றும் ஏகடியம் பேசியுள்ளார்.  
இதே போன்று, ஒரு சில அரசியல் கட்சியினரும் 15 லட்சம் கோடி ரூபாய் எவ்வாறு வரும் என்று வினவியுள்ளனர். ஒரு சில பத்திரிகைகளும் இந்தத் தொலைநோக்குத் திட்டத்திற்கான நிதி ஆதாரம் எங்கே என்ற கேள்வியை எழுப்பியுள்ளன. இவை பற்றிய விளக்கங்களை எடுத்துச் சொல்வதற்கு முன்பு தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் ​ 2023 என்ன என்பதைப் பற்றி முதலில் குறிப்பிட விரும்புகிறேன்.
நமது மாநிலத்தில் பெருமளவிலான சமூக, பொருளாதார மாற்றத்தைக் கொண்டு வரவும்; துரிதமான பொருளாதார வளர்ச்சிக்குத் தேவைப்படும் கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்றவும் வகுக்கப்பட்ட ஒரு திட்டம் தான் தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023.  இத்தொலைநோக்குத் திட்டம் மூன்று தொகுதிகளாக தயாரிக்கப்படுகிறது.
முதல் தொகுதி, தொலைநோக்குத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்; அவற்றை நிறைவேற்ற எடுக்கப்படும் பொதுவான வழிமுறைகள்  குறித்த அறிக்கையாகும். இந்த அறிக்கை தான் கடந்த 22.3.2012 அன்று என்னால் வெளியிடப்பட்டது.    
இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் தொகுதி அறிக்கை முதல் தொகுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பல்வேறு துறைகளில் செய்யப்பட உள்ள முதலீடுகள் மற்றும் திட்டங்களின் விபரங்கள்; நிதி ஆதாரங்கள், செயல்படுத்தப்படும் வழிமுறைகள் குறித்த குறிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.    இந்த அறிக்கை வரும் மே மாத இறுதிக்குள் வெளியிடப்படும்.  இந்த அறிக்கையின் அடிப்படையில் தான், திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு செயல்முறைக்குக் கொண்டு வரப்படும்.  மூன்றாம் தொகுதி, தொலைநோக்குத் திட்டத்தைச் செயல்படுத்தி பல்வேறு கட்டங்களில் எட்டப்பட வேண்டிய குறியீட்டு அளவுகள் மற்றும் காலவரையறைகள் பற்றி விரிவான ரோடு மேப்  ஆகும்.
இரண்டாம் தொகுதியில் தொகுத்து வழங்கப்படும் திட்டங்களை விரிவாக ஆய்வு செய்து; முன்னுரிமைப்படுத்தி;  செயல்படுத்துவதற்கு எனது தலைமையில், தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இந்த வாரியம், தனித்தனியாக, ஒவ்வொரு திட்டங்களையும் எடுத்துக்கொண்டு; நிதி ஆதாரங்களை முடிவு செய்து, அதன் அடிப்படையில், செயல்முறைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கும்.  இத்தகைய திட்டங்கள் அரசின் மொத்த நிதி ஆதாரத்தில் அரசின் திட்டங்களாகவோ; அல்லது அரசு​தனியார் பங்களிப்பின் மூலமாக தனியார் முதலீட்டில் செய்யப்பட்ட திட்டத்திற்கான செலவினத்தை ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு பகுதியாக, அரசு வழங்கும் முறை  ஆகவோ;  அல்லது அரசு​தனியார் பங்கேற்பில் தனியார் முதலீட்டில் வழங்கப்படும் சேவைக்கான கட்டணத்தை வசூலிப்பதிலிருந்து, திட்டத்திற்கான செலவினத்தை ஈடு செய்துகொள்ளக் கூடிய வகையிலோ இருக்கும்.   சென்னை வெளிவட்டச் சாலை​ஐ, தற்போது  நிறைவேற்றப்பட்டு வருகிறது. டோல் கட்டணம் வசூலிக்கப்படும் கிழக்குக் கடற்கரை சாலை, சேவைக் கட்டணம் வசூலிக்கும் திட்டமாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. இது போன்ற முறைகளில் அல்லாமல், சில திட்டங்கள் தனியார் முதலீட்டில் தனியார் திட்டமாகவே செயல்படுத்தப்படும்.
தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023, 2011-12​ஆம் ஆண்டில் தொடங்கி, 2022​-23​ஆம் ஆண்டு வரை செயல்படுத்தும் திட்டமாகும்.  இந்த 11 ஆண்டுகளில் கணிக்கப்பட்டுள்ள மொத்த முதலீட்டு மதிப்பீடு, 15 லட்சம்  கோடி ரூபாயாகும். ஆண்டுவாரியாக, இத்திட்டத்தில் ஒருங்கிணைத்து கட்டமைப்புக்கு முதலீடு செய்யப்படவுள்ள நிதிகளின் அளவு, தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023 முதல் தொகுதியின், 38 ஆம் பக்கத்தில், விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2011​-12 ஆம் ஆண்டில் உத்தேசிக்கப்பட்டுள்ள மொத்த முதலீடு 25,393 கோடி ரூபாய் மட்டும் தான்.  2012​-13 ஆம் ஆண்டில் உத்தேசிக்கப்பட்டுள்ள முதலீடு 41,670 கோடி ரூபாய் ஆகும்.  இது படிப்படியாக உயர்ந்து, 2022 ஆம் ஆண்டில், 2,37,690 கோடி ரூபாய் என்ற அளவில் முதலீடு செய்யப்பட்டு, மொத்தம் 11 வருட காலத்தில் 15 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும்.  எந்தெந்தத் துறைகளில், எவ்வளவு தொகைகள் முதலீடு; அதற்கான நிதி ஆதாரம் எவ்வாறு திரட்டப்படும் என்ற விவரம், தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் தொகுப்பு ஒன்றின், மூன்றாவது அத்தியாயத்தில், பக்கம் 35​லிருந்து, 39 வரை குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்தத் திட்ட அறிக்கையின்படி, சுமார் 60 சதவீத நிதி ஆதாரம் அரசின் மூலமாக பெறப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த நிதி அரசின் நேரடி மூலதனச் செலவு மட்டுமல்லாமல்; தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பொழுது தனியார் மூலதனத்தை வைத்து திட்டங்களை நிறைவேற்றி, அதற்கான செலவினத்தை ஆண்டுதோறும் அரசு வழங்கும் முறையில்,  நிறைவேற்றப்படும் திட்டத்தையும் சேர்த்து கணக்கிடப்பட்டுள்ளது என்பதால், அரசு​தனியார் கூட்டு முயற்சியில் கணிசமான நிதி முதலீடு இருந்தாலும் கூட, அரசுக்கு ஆண்டுதோறும் ஏற்படும் செலவினம் குறைவாகவே இருக்கும்.  2012-13 ஆம் ஆண்டுக்கு மூலதனப் பணிகளுக்கு மட்டும், 20,856 கோடி ரூபாய் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது. 2012-13 ஆம் ஆண்டிலேயே மூலதனப் பணிகளை உள்ளடக்கிய திட்டப் பணிகளுக்காக, இந்த அரசு சுமார் 28,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.  இதில் பெரும்பாலான நிதி, சாலைகள், மின்சாரம், நகர்ப்புர வளர்ச்சித் திட்டங்கள், விவசாயக் கட்டமைப்புகள், சுகாதாரம் மற்றும் கல்வி கட்டமைப்புகளுக்காக செலவிடப்பட உள்ளது.  இதில் உள்ள பெரும்பாலான திட்டங்கள், தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளன. இதன் அடிப்படையில், நடப்பு ஆண்டு முதல் இந்த ஐந்தாண்டுத் திட்டத்தில் மட்டும் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு என்று எடுத்துக்கொண்டாலும்; பதிமூன்றாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில், இந்த முதலீடு இரட்டிப்பாகும் போது இந்த 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல்  இந்த அரசின் நிதியிலேயே பெரும்பகுதி, இந்த மூலதனப் பணிக்காக செலவிடப்படும் என்பதைக் கருத்தில் கொண்டால்; அரசு வெளியிட்டுள்ள தொலைநோக்குத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ள நிதி ஆதாரத்தைத் திரட்டுவது என்பது, சாத்தியமான ஒன்று தான் என்பது புலப்படும். வருவாய் உபரி; அனுமதிக்கப்பட்ட அளவில் பொதுக் கடன் பெறுதல், போன்றவற்றின் மூலம் இந்த நிதி ஆதாரம் திரட்டப்படும் என தொலைநோக்கு திட்ட அறிக்கை பக்கம் 35-ல், பத்தி 3.1​ல் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 11 சதவீத அளவில் இருக்கும் பொழுது, வரி முதலான பல்வேறு அரசின் வருவாய் கணிசமாக உயர்வதோடு, வருவாய் உபரி, மொத்த மாநில உற்பத்தி மதிப்பில், 2015 ஆம் ஆண்டு முதல் 1.5 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.  இதனால், கணிசமான வருவாய் உபரி தொகையும் முதலீட்டுப் பணிகளுக்குக் கிடைக்கும்.  
மேலும், நிதிப் பற்றாக்குறை அனுமதிக்கப்பட்ட அளவான, மாநிலத்தின் மொத்த உற்பத்தி அளவில் 3 சதவீதம் என்று இருந்தாலும் கூட, மாநிலத்தின் உற்பத்தி மதிப்பு அதிகரிக்கும் போது, பொதுக் கடன் மூலம் திரட்டப்படும் நிதி அளவும் கணிசமாக உயரும் வாய்ப்பு உள்ளது.  இவ்வாறு, கடன் அளவு கூடும் போது கூடுதல் நிதி ஆதாரத்தால், கடனைத் திரும்பச் செலுத்தும் அரசின் திறன் அதிகரிக்கும் என்பதையும் இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அதாவது,  மாநிலத்தின் பொருளாதாரம் வளர வளர, அரசு, கூடுதல் நிதி ஆதாரத்தைத் திரட்டி, இத்திட்டங்களுக்கு கூடுதல் முதலீடு செய்ய இயலும்.  இதன் அடிப்படையில் தான், தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023-ன் கீழ், எதிர்பார்க்கும் முதலீடுகளுக்கான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
மாநில அரசின் நேரடி முதலீடுகள், அரசு​தனியார் கூட்டு முயற்சி மூலம் நிறைவேற்றப்படும் திட்டங்கள் ஆகியவை தவிர, முழுக்க முழுக்க, தனியார் துறையின் முதலீடுகளும் இந்தத் தொலைநோக்குத் திட்டத்தில் கருத்தில் கொள்ளப்பட்டு உள்ளன.  உதாரணமாக, முதல் கட்டப் பணிகளுக்கு, 8,500 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ள மோனோ ரயில் திட்டம்; 1000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ள சென்னை வெளிவட்டச் சாலை ஐஐ திட்டம் போன்ற திட்டங்கள், தனியார் முதலீடு மூலமாகவே செயல்படுத்தப்பட உள்ளன. எனவே  தான், வரவு​செலவுத் திட்டத்திலும் இதற்கான நிதி ஒதுக்கம் செய்யப்படவில்லை.  நாம் குறிப்பிட்டுள்ள வளர்ச்சி குறியீடு 11 சதவீதமாகும்.  எனது முந்தைய ஆட்சிக் காலத்தில், தமிழ்நாடு 2004​- 05 ஆம் ஆண்டில், 11.45 சதவீதமும்; 2005-06-ல், 13.96 சதவீதமும், வளர்ச்சி பெற்ற மாநிலம் தான்.  அதற்குப் பிறகு, வளர்ச்சி குறைந்து விட்டது.  குஜராத், பீகார் போன்ற மாநிலங்களின் வளர்ச்சி 10 சதவீதத்திற்கும் கூடுதலாக சில ஆண்டுகளில் இருந்துள்ளது. இந்த அறிக்கையில் கூட, இது குறிப்பிடப்பட்டு, இந்திய அளவில் 9 சதவீதம் சராசரி வளர்ச்சியை எட்ட குறியீடு நிர்ணயித்துள்ளதைச் சுட்டிக்காட்டி; அதைவிட 2 சதவீதம் கூடுதலாக, அதாவது 11 சதவீத வளர்ச்சி என்பது தமிழ்நாட்டில் சாத்தியம் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.  எனவே தான், இந்த 11 சதவீத வளர்ச்சியை எட்ட உற்பத்தி செய்யும் ஆக்கத் துறைகளின் வளர்ச்சிக்கு, வளர்ச்சிக்கு, பல வழிமுறைகளைக் கையாளுவது பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.  இந்த ஆக்கத் துறையில், 13 சதவீதம் வளர்ச்சியை எட்டுவது தான் இலக்கு.  இது கடினமான பணி என்றாலும் அதை எட்டுவது சாத்தியமே.  மேலும், ஆண்டுக்கு ஆண்டு பொருளாதார வளர்ச்சி, 11 சதவீதம் என்று குறிப்பிடும் போது, 2012-13 ஆம் ஆண்டில், 6.90 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் உற்பத்தி மதிப்பு, 2013-14 ஆம் ஆண்டில், 7.66 லட்சம் கோடி ரூபாயாக உயரும். ஒவ்வொரு ஆண்டும், உயரும் அளவின் மீது,  வளர்ச்சியைக் கணக்கிடும் போது, 2011-12 ஆம் ஆண்டுக்கும் 2022​-​23 ஆம் ஆண்டுக்கும் இடையில் ஏற்படும் மொத்த வளர்ச்சி மதிப்பீட்டை மொத்த ஆண்டுகளால் வகுத்து கணக்கிட்டால் ஆண்டு வளர்ச்சி 22 சதவீதமாகும். சுருக்கமாக சொன்னால், சாதாரண வட்டி கணக்கிற்கும், கூட்டு வட்டி கணக்கிற்கும், உள்ள வேறுபாடு தான் 11 சதவீதம் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சிக்கும்; 22 சதவீத சராசரி வளர்ச்சிக்கும், உள்ள வேறுபாடு. இந்த வளர்ச்சி சாத்தியம் இல்லை என்று எப்படிக் கூற முடியும்?
சேவைத் துறையில் வளர்ச்சி கணிப்பு 11 சதவீதம் என்பது குறைவு என, இந்த மாமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தற்போதைய உற்பத்தி மதிப்பில், சேவை துறையின் பங்களிப்பு 61 சதவீதம்.  இரண்டாம் நிலைத் துறையில், உற்பத்தித் துறையின் பங்களிப்பு 16.6 சதவீதம், மற்றும் உற்பத்தியில்லாத பணிகள் மூலம் 9.2 சதவீதம் பெறப்படுகிறது. முதன்மைத் துறை, 12.6 சதவீதம் பங்களிக்கிறது.  ஏற்கெனவே, அதிக அடிப்படை அளவு  சேவைத் துறைக்கு உள்ளதால், அதில் 11 சதவீத வளர்ச்சி என்பது தான் சாத்தியமாகக் கூடியது. மேலும், உற்பத்தித் துறையும், முதன்மைத் துறையும் வளர்ந்தால் தான், சேவைத் துறையில் இத்தகைய வளர்ச்சியைப் பெற முடியும். அதனால் தான், உற்பத்தித் துறையின் பங்கினை 2022​- 23ல், தற்போதுள்ள 16.6 சதவீதத்திலிருந்து 22 சதவீதத்திற்கு உயர்த்த வேண்டி, அதற்கு 13.8 சதவீத, வளர்ச்சியை அடைவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.  அதே போல, சேவைத் துறையின் பங்கினைத் தற்போதுள்ள 61 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக உயர்த்த, 11 சதவீத வளர்ச்சி தேவை என்பதால் அந்த வளர்ச்சியும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம், 2023, எட்ட முடியாத குறிக்கோள்களைக் கொண்ட ஒரு வெறும், கற்பனை ஆவணம் அல்ல என்றும்; எட்டக்கூடிய சாத்தியக் கூறுகளை அடிப்படையாகக் கொண்ட எனது லட்சியத் திட்டம் என்றும்; இது தமிழ்நாட்டின் நலன் கருதி; தமிழ் மக்களின் நலன் கருதி; வகுக்கப்பட்டுள்ள ஒரு வெற்றித் திட்டம் என்றும்; தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்