முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம்புலன்சில் வந்து தேர்வெழுதினார் சென்னை மாணவரின் சாதனை

வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.- 5 - இடுப்பு எலும்பு முறிந்த நிலையிலும் தன்னமிபிக்கை முறியாமல் ஆம்புலன்சில் வந்து  10-ம் வகுப்பு தேர்வை எழுதினார் சென்னையைச் சேர்ந்த தன்னம்பிக்கை மாணவர் ஒருவர். இது குறித்த விபரம் வருமாறு:- பள்ளி வாழ்க்கையில் 10​ம் வகுப்பு தேர்வு என்பதுதான் மாணவர்களுக்கு மிகப்பெரிய திருப்பமுனை. இந்த தேர்வில் வாங்கும் மதிப்பெண்தான் உயர் கல்விக்கு அடித்தளமாக அமைகின்றன. எனவே 10​ம் வகுப்பு தேர்வை எழுதுவதற்காக ஒரு வருடம் மாணவ​ மாணவிகள் சாப்பாட்டை மறந்து, தூக்கத்தை துறந்து கடுமையாக உழைத்து பரீட்சைக்கு தயாராகிறார்கள். இந்த நேரத்தில் சிறு தடங்கல் வந்தால் கூட அவர்களால் தாங்கி கொள்ள முடிவதில்லை. அதற்கு நேர்மாறாக தனக்கு வந்த தடையை தாண்டியுள்ள சென்னை நுங்கம்பாக்கம் மாணவர் அகிலன் தன்னம்பிக்கைக்கு ஒரு சாட்சி.  நுங்கம்பாக்கம் ஜெயலட்சுமிபுரம் 3​வது தெருவை சேர்ந்த அகிலன் ஸ்ரீகிருஷ்ணசாமி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 10​ம் வகுப்பு படித்து வருகிறார். படிப்பில் கெட்டிக்காரனாக இருந்த அகிலனுக்கு கடந்த சனிக்கிழமை நேரம் சரியில்லை வீட்டு படியேறியபோது தவறி கீழே விழுந்துவிட்டார். இதில் அவருக்கு இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது. உடனடியாக அண்ணாநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்தனர். படுத்த படுக்கையாக இருந்த அகிலனுக்கு ஆபரேஷன் வலியை விட 10-வது தேர்வு எழுத முடியாதோ என்ற பயத்தின் வலி அதிகமாக இருந்தது. பெற்றோர், ஆசிரியர்கள் அனைவரும் ஆறுதல் கூறினார்கள். சீக்கிரம் குணமானதும் தேர்வு எழுதலாம். கவலைப்படாதே என்றனர். ஆனால் தேர்வு எழுதுவதில் அகிலன் விடாப்பிடியாக இருந்தார். வேறு வழியின்றி பெற்றோர் கல்வித்துறை அதிகாரிகள் உதவியை நாடினார்கள். அதிகாரிகளும் அகிலன் தேர்வு எழுத உரிய ஏற்பாடுகளை செய்தனர். நேற்று காலை 9.30 மணி அளவில் ஆம்புலன்சில் படுத்த படுக்கையாக நுங்கம்பாக்கம் மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு கொண்டு வரப்பட்டார். ஆம்புலன்சில் இருந்து ஸ்டிரெச்சரில் தூக்கியபோது பெற்றோரும், உறவினர்களும் தவித்தனர். ஆனால் மாணவன் அகிலனுக்கு தேர்வு எழுத போகிறோம் என்ற நிம்மதி வலியை விரட்டி புன்னகையாய் முகத்தில் தெரிந்தது. அவர் தேர்வு எழுதுவதற்காக பள்ளியில் தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த அறையில் ஸ்டிரெச்சரில் படுத்த படுக்கையாக வைக்கப்பட்டார். அவருக்கு உதவ ஆசிரியை ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். வினாத்தாள் கையில் கொடுக்கப்பட்டதும் மாணவர் அகிலனுக்கு மகிழ்ச்சி. வினாக்களை படித்து பார்த்து விட்டு ஒவ்வொரு வினாக்களுக்கும் அவர் பதில் சொல்ல சொல்ல ஆசிரியை தேர்வை எழுதினார். தன்னம்பிக்க மாணவர் அகிலனின் பெற்றோர் ராகவசுவாமி​ கவிதா கூறியதாவது:​

எங்கள் பிள்ளைக்கு அடிபட்டு இடுப்பில் ஆபரேசன் செய்ததும் நாங்கள் துடித்துப் போனோம். தேர்வை அடுத்த முறை எழுதலாம். உடல்நிலை சீராகட்டும் என்றுதான் நாங்கள் கடவுளை பிரார்த்தித்தோம். அவன் வகுப்பில் நன்றாக படிப்பான். மாதிரி தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் வாங்கினான். எனவே பரீட்சை எழுத முடியாமல் ஆகிவிடுமோ என்று வேதனைப்பட்டான். உன்னால் முடியும் என்றால் நாங்கள் அதிகாரிகளிடம் கேட்கிறோம் என்றோம். இன்று அவனது தன்னம்பிக்கைதான் அவனை தேர்வு எழுத வைத்துள்ளது.

அவனுக்காக அனுமதியளித்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு நன்றி கூறிக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தினமும் ஆம்புலன்ஸ் வாடகை ரூ.1500 கட்டணம். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தங்கள் பிள்ளையின் நம்பிக்கைக்கு துணை நின்ற மகிழ்ச்சியோடு மரத்தடியில் காத்திருந்தனர். தேர்வு முடிந்ததும் மீண்டும் ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அகிலன் குணமடைய இன்னும் சில வாரங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். எனவே அனைத்து தேர்வுகளுக்கும் ஆம்புலன்சில்தான் வரவேண்டிய சூழ்நிலை அவனுக்கு.

இதேபோல் ராகுல் என்ற மாணவருக்கு கணுக்காலில் அடிபட்டிருந்ததால் அவரையும் உறவினர்கள் தேர்வு அறைக்கு தூக்கி வந்தனர். பின்னர் அவர் அறையில் அமர்ந்து தேர்வு எழுதினார்.

இரு மாணவர்களின் தன்னம்பிக்கை மற்ற மாணவர்களுக்கு எடுத்து காட்டாகும்.

 

புட்நோட்

இடுப்பு எலும்பு முறிந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டு உட்கார கூடமுடியாத நிலையில் படுத்த படுக்கையில் ஆம்புலன்சில் 10-ம் வகுப்பு தேர்வெழுத வந்த சென்னை மாணவன் அகிலனை ஸ்டெச்சரில் தேர்வு மையத்துக்கு எடுத்துச் சென்ற போது எடுத்தப்படம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்