முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேட்பு மனுத்தாக்கல் இன்றோடு முடிகிறது

சனிக்கிழமை, 26 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,மார்ச்.26 - தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 13 ம் தேதி நடப்பதையொட்டி கடந்த 19 ம் தேதி துவங்கிய வேட்பு மனுத்தாக்கல் செய்யும் பணி இன்றுடன் முடிவுக்கு வருகிறது. 28 ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. 30ம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும். 

234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 13 ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவிருக்கிறது. வழக்கமாக மே முதல் வாரத்தில்தான் தேர்தல் நடப்பது வழக்கம். ஆனால் இந்த முறை ஏப்ரல் மாதத்திலேயே தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது. தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்தும் தேர்தல் ஆணையம் அதை ஏற்கவில்லை. திட்டமிட்டபடி ஏப்ரல் 13 ல் தேர்தல் நடக்கும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து விட்டது. 

இதற்கு முன்பெல்லாம் தேர்தல் நடந்த 3 நாட்கள் கழித்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும். ஆனால் இந்த முறை தேர்தல் நடந்து ஒருமாதம் கழித்து அதாவது மே 13 ம் தேதி தான் வாக்குகள் எண்ணப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து விட்டது. இதற்கும் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆனால் தேர்தல் ஆணையம் எதையும் கண்டுகொள்ளவில்லை. 

இதையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் பணிகளை ஜரூராக தொடங்கின. ஆனால் எல்லா கட்சிகளிலுமே கூட்டணி குழப்பம் நிலவியது. பின்னர் ஒருவழியாக இந்த குழப்பங்கள் நீங்கின. அ.தி.மு.க. தலைமை தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்து அவற்றை அடையாளம் கண்டு அறிவித்தது. இந்த அணியில் தே.மு.தி.க., இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள், புதிய தமிழகம், சரத்குமார் கட்சி போன்ற பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் ம.தி.மு.க. மட்டும் இந்த முறை இடம்பெறவில்லை. 

தி.மு.க. கூட்டணியில் ஆரம்பத்தில் இருந்தே பிரச்சினை. காங்கிரஸ் கட்சி அளவுக்கதிகமாக தொகுதிகளை கேட்டு போராடியது. பின்னர் ஒருவழியாக தி.மு.க.விடம் இருந்து 63 தொகுதிகளை பெற்றது. இந்த கட்சி மிக மிக தாமதமாக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தங்கபாலுவை கண்டித்து பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. சென்னை சத்யமூர்த்தி பவனே சூறையாடப்பட்டது. நேற்று கூட தங்கபாலு வீட்டு முன்பாக காங்கிரசார் போராட்டம் நடத்தினார்கள். இது போன்ற பரபரப்புகளுக்கு மத்தியில் கடந்த 19 ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்யும் பணி தொடங்கியது. 

அன்றைய தினம் பவுர்ணமி என்பதால் ஒருசிலர் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் பெரிய கட்சிகள் சார்பில் யாரும் அன்று மனுத்தாக்கல் செய்யவில்லை. ஜெயலலிதாவின் உத்தரவுப்படி புதிய பட்டியல் வெளியான பிறகு அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவருமே நேற்று முன்தினம்தான் மனுத்தாக்கல் செய்தனர். ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் மனுத்தாக்கல் செய்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி திருவாரூரிலும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியிலும் அன்றைய தினம் மனுத்தாக்கல் செய்தனர். கடந்த 24 ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே பரபரப்பு காணப்பட்டது. மனுத்தாக்கல் முடிந்ததுமே ஜெயலலிதா தனது பிரச்சாரத்தையும் துவக்கி விட்டார். 

இதனிடையே இன்றோடு வேட்பு மனுத்தாக்கல் செய்யும் பணி முடிவுக்கு வருகிறது. இன்று மாலை 5 மணியுடன் மனுத்தாக்கல் செய்யும் பணி முடிந்து விடும். 28 ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். பின்னர் 30 ம் தேதி மனுக்கள் வாபஸ் பெறப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் அன்று மாலை வெளியிடப்படும். தேர்தலுக்கு இன்னும் 17 நாட்களே உள்ளன. இதையடுத்து தலைவர்கள் அனைவரும் மின்னல் வேக பிரச்சாரத்தில் குதித்து விட்டார்கள். ஜெயலலிதா மொத்தம் 19 நாட்கள் பிரச்சாரம் செய்கிறார். விஜயகாந்த் 18 நாட்கள் பிரச்சாரம் செய்கிறார். இதே போல் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோரும் பிரச்சார களத்தில் குதித்திருப்பதால் தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. ஒரு பக்கம் பங்குனி மாத வெயிலால் அனல் பறக்கிறது. மற்றொரு பக்கம் பிரச்சாரத்தால் அனல் பறக்கிறது. இந்த அனலில் சிக்கி தவிப்பது என்னவோ பொதுமக்கள்தான். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony