முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி 3 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 6 ஏப்ரல் 2012      ஊழல்
Image Unavailable

புது டெல்லி, ஏப். - 7 - 2 ஜி அலைவரிசை ஊழல் வழக்கில் இதுவரை எடுத்த நடவடிக்கை தொடர்பாக 3 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ. அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.  பிரமோத்மகாஜன், தயாநிதி மாறன் ஆகியோர் தொலைத் தொடர்பு துறை மந்திரிகளாக இருந்த போது செயல்பட்ட விதம் குறித்தும் தகவல் தெரிவிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2 ஜி அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் நடைபெற்ற முறைகேடு காரணமாக அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாக பொதுக்கணக்கு குழுவும் உறுதிப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது. அலைவரிசை ஊழல் வழக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி ஓம் பிரகாஷ் ஷைனி இந்த வழக்கை விசாரித்து வருகிறார். இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டும் கண்காணித்து வருகிறது. முதலில் நீதிபதிகள் சிங்வி, கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. நீதிபதி கங்குலி ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவரது இடத்திற்கு நீதிபதி கே.எஸ். ராதாகிருஷ்ணன் வந்துள்ளார். அலைவரிசை ஊழல் வழக்கில் முறைகேடு நடந்த போது நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமியும் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷனும் சுப்ரீம் கோர்ட்டில் வாதிட்டுள்ளனர். ஆனால் சி.பி.ஐ.தரப்பில் ஆஜரான வக்கீல் வேணுகோபால் இந்த வாதத்தில் கூடுதலாக எந்த தகவலும் இல்லை. ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் உள்ள ஆவணங்களைத்தான் மேற்கோள் காட்டி வாதிடுகிறார்கள். எனவே ப. சிதம்பரத்தை வழக்கில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டார். ஆனால் இந்த விவாதம் முடிவடையவில்லை.
அலைவரிசை ஊழல் வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்பு துறை மந்திரிகளான பிரமோத்மகாஜன், தயாநிதி மாறன் ஆகியோரின் தொடர்புகள் குறித்தும் துருவி துருவி விசாரிக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் சார்பில் வற்புறுத்தப்பட்டது. 2 ஜி அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 3 வார காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மற்ற தொலைதொடர்பு துறை மந்திரிகள் காலத்திலும் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட வேண்டும் என்று சி.பி.ஐ. அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை ஆகியவற்றுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சிங்வியும், ராதாகிருஷ்ணனும் உத்தரவிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்