முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங். தலைவர் சோனியாவுடன் நகை வியாபாரிகள் சந்திப்பு

சனிக்கிழமை, 7 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப்.- 7 - காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை போராட்டம் நடத்திவரும் நகை வியாபாரிகள் நேற்று சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள். முத்திரையிடப்படாத நகைகளுக்கான கலால் வரியை நீக்க வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை அவர்கள் சோனியாவிடம் வலியுறுத்தினார்கள். சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதேபோல் தங்கத்துக்கான சுங்க வரியும் அதிகரிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி நகைக்கடை வியாபாரிகள்  நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 70 ஆயிரம் நகைக்கடைகள் மூடப்பட்டன. இதனால் சென்னையில் மட்டும் தினமும் ரூ. 300 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. அகில இந்திய அளவில் 20 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நகைக்கடை உரிமையாளர்கள் மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜியை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்கள். நேற்று காலை 10 மணியளவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நகைக்கடை வியாபாரிகள் சந்தித்து பேசினார்கள். இந்த குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். சோனியாவை சந்தித்த இவர்கள் வரிவிதிப்பால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விரிவாக எடுத்துக்கூறினார்கள். மேலும் தங்கத்தின் மீதான கலால் வரியை முழுமையாக விலக்க வேண்டும் என்றும் இவர்கள் வற்புறுத்தினார்கள். இவர்களது குறைகளைக் கேட்டறிந்த சோனியா, நகை வியாபாரிகளின் கோரிக்கைகள் குறித்து நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் எடுத்துச்சொல்லப்படும் என்று உறுதியளித்தாராம். இத்தகவலை அகில இந்திய நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் மதுகர் சச்சாடு நிருபர்களிடம் தெரிவித்தார். 

முன்னதாக கடந்த 2 வார காலமாக போராடிவரும் நகை வியாபாரிகளின் கோரிக்கைகள் குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் மத்திய அரசை கேட்டுக்கொண்டதாம். பரிவுடன் அவர்களது கோரிக்கையை கவனிக்க வேண்டும் என்று அரசிடம் காங்கிரஸ் கட்சி கேட்டிருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் துவிவேதி தெரிவித்தார். எனவே நகை வியாபாரிகளின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு மத்திய அரசு விதித்த வரிகள் விரைவில் வாபஸ் பெறப்படும் என்று தெரிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்