முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.4 ஆயிரம் கோடி வங்கிக்கடன்

திங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஏப்.10 - மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு ரூ.4 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார். நேற்று சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மானியம் கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் கே.பி.முனுசாமி பதில் அளித்து பேசியபோது, புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ள அதன் விபரம் வருமாறு:- மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு இதுவரை பல்வேறு வங்கிகள் மூலம் 15,634 கோடி ரூபாய் கனடாக வழங்கப்பட்டுள்ளது. 2011-12 ஆம் நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட உயரிய இலக்கான 4,000 கோடியையும் விஞ்சி 4,030 கோடி ரூபாய் கடன் வழங்கி சாதனை எய்தப்பட்டது. முதல்வர் ஆணைப்படி தகுதியான மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களின் மூலம் நடப்பாண்டிலும் 4,000 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும். இதன் மூலம் மகளிர் வருமானம்  தரக்கூடிய தொழில்களைத் தொடங்கி பொருளாதார மேம்பாடு அடைவதற்கு வழிவகை செய்யப்படும்.

பொருட்கள் வாங்கும் போது வாடிக்கையாளர்கள் வணிக குறியீட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பதால், சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவது பெரும் சவாலாகவே உள்ளது. வணிக குறியீடு மற்றும் கண்கவர் பேக்கேஜிங் ஆகியவை பொருட்களின் தரத்துடன் தொடர்புப்படுத்தப்படுகிறது. எனவே முதல்வரின் ஆணைப்படி மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் வெளிச்சந்தையில் போட்டியிட தக்க வகையில் ஒரே மாதிரியான தனித்தன்மையுடன் கூடிய வணிக குறியீட்டு சின்னம் மற்றும் முத்திரை உருவாக்கப்பட்டு பொருட்கள் விற்பனையில் இவ்வாண்டு முதல் பயன்படுத்தப்படும்.

ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மக்கள் பங்களிப்புடன் உருவாக்கி, பராமரித்திட ஏதுவாக தன்னிறைவுத்திட்டம் 2011-12 ஆம் ஆண்டில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல்வர் ஆணைப்படி 2012-13 ஆம் ஆண்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

மின்சார உபயோகத்தில் சிக்கனம் மற்றும் மாற்று எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு கிராமங்களில் சூரிய ஒளி மூலம் இயங்கும் தெரு விளக்குகள் அமைக்கும் திட்டம் 2011-12 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல்வர் ஆணைப்படி 2012-13 ஆம் ஆண்டில் சூரிய சக்தி மூலம் இயங்கும் 20,000 தெரு விளக்குகள் அமைத்திட 52.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளுக்கான கூடுதல் கட்டடம், சமையலறை, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் முழுமையாக இருப்பதை உறுதி செய்யவும், அவற்றை சீரமைத்திடவும் ஒருங்கிணைந்த பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம் 2011-12 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல்வர் ஆணைப்படி 2012-13 ஆம் ஆண்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

முதல்வர் ஆணைப்படி 2012-13 ஆம் ஆண்டில் இத்திட்டத்தினை செயல்படுத்த 470 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் அலுவலக உபயோகத்திற்காக கணினி மற்றும் அச்சுப்பொறி வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ள பணிகளில், அங்கன்வாடிகள் மற்றும் குழந்தைகள் நல மையங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பிற்காக, ஒரு மையத்திற்கு ரூ.10,000 வீதம் 100 மையங்களுக்கு 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

முதல்வர் ஆணைப்படி குறைந்து வரும் மீன் வளத்தைப் பெருக்கிட திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களிலுள்ள நான்கு கடல் பகுதிகளில் செயற்கை பவளப் பாறைகள் ஒவ்வொன்றும் 20 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

மீன்பிடி தொழிலில் சுகாதாரமான முறைகளை கையாளவும், மீனவர்களுக்கு உரிய விலை கிடைத்திடவும் ஏதுவாக நாகப்பட்டினம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் முதல்வர் ஆணைப்படி 200 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நான்கு மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும்.

ஒரு கிராமம் ஒரு உற்பத்திப் பொருள் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் விவசாயம் சாராத தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு தொழில் தொகுப்புகள் உருவாக்கப்படும்.

முதல்வர் ஆணைப்படி இந்த நிதியாண்டில் ஒரு கிராமம் ஒரு உற்பத்திப்பொருள் என்ற கோட்டிபாட்டின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐந்து தொழில் தொகுப்புகள் என்ற விகிதத்தில் 150 தொழில் தொகுப்புகள் ஏற்படுத்த 6.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

முதல்வர் ஆணைப்படி சுயஉதவிக்குழு உற்பத்திப் பொருட்களை கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே பிரபலப்படுத்துவதற்காக கல்லூரிச் சந்தைகள் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மூன்று கல்லூரிச் சந்தைகள் வீதம் மொத்தம் 100 கல்லூரிச் சந்தைகள் நடத்தப்படும்.

அடையாள அட்டைகள் தற்போது மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. முதல்வர்  ஆணைப்படி இந்த நிதியாண்டில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் தன்னம்பிக்கையுடனும், துணிச்சலுடனும் அரசு மற்றும் பிற நிறுவனங்களை அணுகி தங்களுக்கான உரிமைகளையும் சேவைகளையும், எளிதாக கோரிப்பெற அவர்களுக்கு தனிநபர் அடையாள அட்டை வழங்கும் திட்டம் முதன்முறையாக செயல்படுத்தப்படும்.

முதற்கட்டமாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் செயல்படுத்தப்படவுள்ள 15 மாவட்டங்களைச் சேர்ந்த 60 வட்டாரங்கள் மற்றும் புதுவாழ்வுத் திட்டம் செயல்படுத்தப்படும் 70 வட்டாரங்களிலுள்ள மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் 2.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனிநபர் அடையாள அட்டை வழங்கப்படும்.

சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக இதுவரை மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. முதல்வர் ஆணைப்படி இந்த நிதியாண்டில் மாநில வழங்கல் மற்றும் விற்பனைச் சங்கத்தை உருவாக்கி தற்போது செயல்பாட்டிலுள்ள மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச் சங்கங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி, மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் சுயஉதவிக்குழுப் பொருட்களை சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக, இந்த நிதியாண்டில் 92.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

ரூரல் பஜார் எனும் இணையதளம் 2004 ஆம் ஆண்டில் மகளிர் சுயஉதவிக்குழு உற்பத்திப் பொருட்களின் விற்பனை வாய்ப்பினை மேம்டுத்திட உருவாக்கப்பட்டது. முதல்வர் ஆணைப்படி இந்த இணையதளம் புதுப்பிக்கப்பட்டு, மதி பஜார் என பெயரிடப்படும். இவ்விணையதளம் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தவும் ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பெண்களுக்கு எதிரான சமூக அநீதிகள் மற்றும் வன்கொடுமைகளை எதிர்த்து மகளிர் சுயஉதவிக்குழுக்கள் போராடி வருகின்றன. இவ்வாறு ஒன்றுகூடி சமூக அநீதிகளுக்கு எதிராக செயல்படும் சுயஉதவிக்குழுக்களை ஊக்குவிக்கும் பொருட்டு முதல்வர் ஆணைப்படி 2012-13 ஆம் நிதியாண்டில் விருது ஒன்று தோற்றுவிக்கப்பட்டு ஆண்டுதோறும் 1 லட்சம் ரூபாய் வீதம் 5 குழுக்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

எழுத்தறிவு, பெண்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு இன்றியமையாத காரணியாக விளங்குகிறது. இன்றளவும், ஊரக பகுதிகளில் ஏழை மகளிர் எழுத்தறிவும், எண்ணறிவும் இன்றி உள்ளனர். முதல்வர் ஆணைப்படி சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் தங்கள் குழுக்களிலுள்ள கல்வியறிவற்ற மகளிருக்கு கல்வி அறிவு பெற்ற உறுப்பினர்களை கொண்டு கற்றுத்தர எடுக்கும் கூட்டு முயற்சி அங்கீகரிக்கப்பட்டு விருது வழங்கப்படும். இந்த நிதியாண்டு முதல் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிலுள்ள அனைத்து சுயஉதவிக்குழு உறுப்பினர்களையும் கற்றவர்களாக உருவாக்கும் கூட்டமைப்புகளுக்கு விருதும் ரொக்க பரிசாக 50,000 ரூபாய் வீதம் வழங்கப்படும்.

ஊரகப்பகுதிகளிலுள்ள பள்ளி மாணவர்களின் அறிவித்  திறனை வளர்க்கவும், மேம்படுத்தவும், தற்போது செயல்பட்டு வரும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், முதல்வர் ஆணைப்படி கிராம அறிவு மையங்களாக உருவாக்கப்படும். இங்கு ஏற்கனவே துவங்கப்பட்ட கணினி சார்ந்த வசதிகளுடன், அகன்ற அலைவரிசை, இணையப்படக்கருவி, கல்வி தொடர்பான ஒலித்தகடுகள் மற்றும் போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்களும் வழங்கப்படும்.

இதன் மூலம் கிராமப்புற மக்கள் மேற்கண்ட தகவல்களைப் பெற்று, தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி வாழ்க்கை தரத்தில் மேம்பாடு அடைந்திட வழிவகை செய்யப்படும். இந்த மையங்கள் வாயிலாக, இணைய தளத்தை இளைஞர்கள் பயன்படுத்தி தங்களுக்கு தேவையான கல்வி சார்ந்த ஆலோசனை மற்றும் வாழ்க்கை வழிகாட்டி தகவல்களை பெற்றிட முடியும். மேலும் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் மற்றும் ஆலோசகர் மூலம் தனிப்பட்ட வழிகாட்டுதலை பெற்றிடவும் வழிவகை செய்யப்படும்.

ஏழை மக்களை முழுமையாக வறுமையின் பிடியிலிருந்து வெளிக்கொண்டு வர, மகளிர் சுகாதாரம் பேணுதல் முக்கியமாகும். கடந்த ஆண்டு 2,509 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு எடை பார்க்கும் கருவி வழங்கப்பட்டது. முதல்வர் ஆணைப்படி இந்த நிதியாண்டில் 5.8 லட்சம் மகளிருக்கு சுகுதார கண்காணிப்பு அட்டை வழங்கி சுகாதாரம் குறித்த தகவல்கள் அளித்து ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மகளிரின் எடை, உயரம், இரத்தப்பிரிவு, இரத்த அழுத்தம் ஆகியவற்றை குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்காணிக்கப்படும்.

தமிழ்நாடு அரசின் முன்னோடி முயற்சியாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவம் மற்றும் மறு வாழ்வு சேவைகளை சமூக பங்கேற்புடன் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்திற்கான வழிகளை மேம்படுத்திட புதுவாழ்வு திட்டத்தின் கீழ் வழிவகை செய்யப்படவுள்ளது.

முதல்வர் ஆணைப்படி வரும் நிதியாண்டில் திட்ட செயலாக்கத்திலுள்ள 2,509 கிராம ஊராட்சிகள் அடங்கிய 16 திட்ட மாவட்டங்களில் ஜப்பான் அரசின் மனித வள மேம்பாட்டு மானியத்துடன் 13.6 கோடி ரூபாய் செலவினத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

பெரும்பாலான ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சுற்றுச்சுவர் இல்லாத நிலை உள்ளது. அத்தகைய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பாதுகாப்பிற்காக சுற்றுச்சுவர் அமைத்திட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டில் 100 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுச் சுவர் கட்டப்படும்.

முதல்வர் ஆணைப்படி கிராம ஊராட்சி செயலர்களுக்கு மாதாந்திர நிரந்தரப் பயணப்படியாக 300 ரூபாய் ஊராட்சி நிதியிலிருந்து வழங்கப்படும். கிராம ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு மின்மோட்டார் இயக்குவதற்கு சிறப்புபடியாக 200 ரூபாய் ஊராட்சி நிதியிலிருந்து வழங்கப்படும்.

ஊராட்சி ஒன்றியங்களில் தினக்கூலி அடிப்படையில் 10 வருடங்களுக்கு மேல் பணியாற்றியவர்களில் தொழில்நுட்ப தகுதியுடையவர்களுக்கு சாலை ஆய்வாளர் நிலை-2 ஆக முறைப்படுத்தப்பட்ட ஊதிய விகிதத்தில் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஆணைப்படி மீதமுள்ள 197 நபர்களுக்கு அவரவர் கல்வித்தகுதியின் அடிப்படையில் ஊராட்சி ஒன்றிய கீழ்நிலை காலிப்பணியிடங்களில் பணியமர்த்தப்படுவர்.

முதல்வர் ஆணைப்படி நடப்பாண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் உள்ள கூடுதல் இயக்குநர், இணை இயக்குனர், உதவி இயக்குநர், வட்டார வளர்ச்சி அலுவலர், பொறியியல் பிரிவில் பணியாற்றும் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் நிலை அலுவலர்கள் அனைவருக்கும் உள்வட்ட உபயோகிப்பாளர் குழு முறையில் அலைபேசி வசதி செய்துத்தரப்படும். 

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்