முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

சனிக்கிழமை, 26 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச், 26 - அ.தி.மு.க. வேட்பாளர்கள் டி.ஜெயக்குமார், வளர்மதி, ஜெ.சி.டி.பிரபாகரன் உள்ளிட்ட வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரித்தனர். தமிழக சட்டசபைக்கான தேர்தலில் சென்னை மாவட்டத்திற்குள்பட்ட 16 தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள்  12 பேர் போட்டியிடுகிறார்கள். இவர்களில் ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் 5வது முறையாக போட்டியிடுகிறார். இவர் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டார். 

அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:

3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்று இந்த தொகுதியில் ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். ராயபுரம் மேம்பாலம், ஸ்டான்லிபுதிய சுரங்கப்பாதை, ரேஷன் கடை, சத்துணவு கூடம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தொகுதி மக்கள் பயன்பெறக்கூடிய அடிப்படையான, அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி கொடத்துள்ளேன். 

தொடர்ந்து எனக்கு வாய்ப்பளித்தால், தொகுதி மக்களின் தேவையை அறிந்து செயல்படுவேன்.

இவ்வாறு ஜெயக்குமார் கூறி, வாக்கு சேகரித்தார்.

வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெ.சி.டி. பிரபாகரன், அயனாவரம், கொன்னூர் நெடுஞ்சாலை, ஜாயின்ட் ஆபிஸ் ஆகிய பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:

இந்தியாவிலேயே பெரிய சட்டமன்ற தொகுதியாக இருந்த இந்த தொகுதியில் நான் எம்.எல்.ஏ.வாக இருந்த போது பல மாதங்கள் நடைபயணமாக சென்று மக்கள் குறைகளை கேட்டுள்ளேன்.

மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைந்தால் தமிழகம் முன்னேறும், மக்கள் நிம்மதியாக வாழ முடியும். எனவே, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு ஜெ.சி.டி. பிரபாகரன் பேசினார். அவருடன் பகுதி செயலாளர் பாலன், வட்ட செயலாளர் செல்வம், தே.மு.தி.க. பகுதி செயலாளர் செல்வம் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் வாக்கு சேகரித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony